Last Updated : 12 Jul, 2016 08:40 AM

 

Published : 12 Jul 2016 08:40 AM
Last Updated : 12 Jul 2016 08:40 AM

இராக் போர் சட்டவிரோதம்!

முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை



இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று!

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவி விலகிய 2007 ஜூன் 27 வரையில் முறையற்ற முடிவுகளை வெளியுறவுத் துறை எடுத்துவந்தது. பிளேரின் உள்நோக்கத்தையும் பங்களிப்பையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுவதாக இருக்கின்றன, அக்கடித வாசகங்கள். இராக்கிலிருந்து பிரிட்டிஷ் துருப்புகள் இறுதியாக விலக்கப்பட்டது 2009-ல்தான்.

தவறுக்காக வருந்தவில்லை

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, இறை யாண்மை மிக்க ஒரு நாடான இராக் மீது பிரிட்டன் ஆக்கிரமிப்பு செய்தது; இராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் யாருக்கும் பெரிய உடனடி அச்சுறுத்தலாக இல்லாத போதும் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதை சில்காட் அறிக்கை பட்டவர்த்தனமாகச் சுட்டிக்காட்டிய பிறகு பிளேர் அளித்துள்ள பதில், தான் செய்த தவறுக்காக அவர் இப்போதும்கூட வருந்தவில்லை என்பதையே காட்டுகிறது.

பெருமளவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இராக் வசம் இருப்பதாகக் கிடைத்த உளவுத் துறையின் தகவல்கள் சரியானவை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்கள் சரியல்ல என்பது பின்னர் தெரியவந்ததாகவும் பத்திரிகை நிருபர்களிடம் இரண்டு மணி நேரப் பேட்டியில் கூறியிருக்கிறார் பிளேர். “அந்தத் திட்டமிடலிலும் செயல்படுத்தலிலும் சிறிய தவறுகள் இருந்தன என்பது உண்மையே. நாங்கள் சரியான முடிவைத்தான் எடுத்தோம். அதனால், உலகம் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அப்போது கிடைத்த தகவல்கள் இப்போது கிடைத்தாலும் அதே முடிவைத்தான் எடுப்பேன்” என்றும் கூறியிருக்கிறார்.

இராக் மீது பன்னாட்டுப் படைகள் படையெடுத்ததால் போர் வீரர்களும் அப்பாவிப் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தனர். இராக்கிய மக்களின் இறப்பு 1,60,412 முதல் 1,79,327 வரையில் இருக்கும் என்று தெரிகிறது. எல்லாத் தரப்பிலும் சேர்த்து இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 2,51,000-க்கும் அதிகம். இராக்கிய சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் அமெரிக்கா, கனடா, இராக் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளது. போரின்போது நடந்த அந்நியர் ஊடுருவல், பன்னாட்டுப் படையினரின் படையெடுப்பு, சமூகங்களில் ஏற்பட்ட பிளவு, போருக்குப் பிறகு வெவ்வேறு இனங்களுக்கிடையே மூண்ட மோதல்கள் போன்றவற்றால் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இராக்கிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, சொத்து இழப்பு, சமூக வாழ்விழப்பு போன்றவை ஏற்படுத்தியிருக்கும் சேதங்கள் அளவிட முடியாதவை, இப்போதும் தொடர்பவை.

குற்றம்சாட்டும் சில்காட்

பன்னாட்டுப் படையெடுப்பின் விளைவாக இராக் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கிறது என்று சில்காட் அறிக்கை கடுமையான குரலில் குற்றஞ்சாட்டுகிறது. 26 லட்சம் வார்த்தைகள், 12 தொகுதிகள் கொண்ட இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மட்டுமே 100 பக்கங்களுக்கு வருகிறது. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் 2009-ல் நியமித்த இந்த ஆணையம் 7 ஆண்டு விசாரணைக்குப் பிறகு அறிக்கை அளித்திருக்கிறது.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது அல்-கொய்தா அமைப்பு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியபோது, “பயங்கரவாத சக்திகளை அடக்க வேண்டும்” என்று மட்டுமே பேசிவந்த பிளேர், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கடிதம் எழுதிய 2002 ஜூலையில், “நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உங்களோடு இருப்பேன்” என்று உறுதிகூறும் அளவுக்கு மனமாற்றம் அடைந்திருக்கிறார். “அவரை (சதாம் ஹுசைன்) அகற்றுவதற்கு உங்களுக்குப் பன்னாட்டுக் கூட்டுப்படை தேவைப்படுகிறதா? பிரிட்டனின் உதவியுடன் அமெரிக்காவால் மட்டுமே இதை நிகழ்த்திவிட முடியாதா? இந்த மாதிரி விஷயங்களில் உள்ள ஆபத்து என்னவென்றால், நாம் விரும்பாத சில முடிவுகள் வந்துதொலைக்கும்” என்று எழுதியிருக்கிறார்.

ஆதாரம் இல்லாமல் போர்

ஜார்ஜ் புஷ்ஷுக்கு பிளேர் எழுதிய கடிதத்தை பிரிட்டிஷ் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மட்டுமே வாசித்திருக்கின்றனர். அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்டிரா, பாதுகாப்பு அமைச்சர் ஜியாஃப் ஹூன் ஆகியோர் பார்த்ததுகூடக் கிடையாது.

தன்னுடைய சொந்த நாட்டைச் சேர்ந்த ராணுவத்துக்கும் அமைச்சர்களுக்கும்கூட எதையும் தெரிவிக்காமல் மறைத்து, அமெரிக்க நாட்டின் அதிபரிடம் எல்லாவற்றையும் விவாதித்திருப்பதை இக்கடிதம் காட்டுகிறது. தன்னுடைய முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்ததாக, தன்னை ஒழுக்க சீலரைப் போலக் காட்டிக்கொள்ள முற்பட்டிருக்கிறார். தன்னுடைய முடிவில் தவறு இருக்கலாம், பொய் சொன்னதாகவோ, ஏமாற்றியதாகவோ தன் மீது குற்றம்சாட்ட முடியாது என்றிருக்கிறார். ஆனால், அறிக்கையோ அவருடைய சமாதானங்கள் உண்மையானவை அல்ல என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

“இராக்கியத் தலைவரிடமிருந்து உடனடியான அச்சுறுத்தல் ஏதும் வெளிப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையத்தில் இருந்த உறுப்பு நாடுகளிலும் பெரும்பாலானவை, இராக்கில் பேரழிவு ஆயுதங்களும் பிறவும் இருக்கின்றனவா என்பதை ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே கருதின. இராக்கால் ஆபத்து என்று எந்தவித ஆதாரமும் இல்லாமலேயே பிளேர் அறிவித்தார். ஆயிரக்கணக்கில் மக்களைக் கொல்லக்கூடிய ரசாயன, உயிரி ஆயுதங்களை சதாம் ஹுசைன் தயாரித்துவருகிறார் என்ற உளவுத் தகவல்களும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. படையெடுப்புக்கு முன்னால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய பிளேர், இந்த உண்மைகளைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இராக் மீது பிரிட்டன் படையெடுத்ததற்கு சட்டபூர்வமான முகாந்திரம் எதுவுமே கிடையாது” என்று அறிக்கை பட்டியலிடுகிறது.

சதாமைப் பதவியிலிருந்து அகற்றிய பிறகு, இராக்கின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்று முறையாகச் சிந்தித்து நடவடிக்கை எடுக்காததால், இராக் சீரழிந்துகொண்டிருக்கிறது. எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யாமல் ஆக்கிரமித்து நாசப்படுத்தியதுடன் போர் ஓய்ந்ததாக அறிவித்துவிட்டு வெளியேறிய செயல், இராக்கைப் படுகுழியில் தள்ளிவிட்டது. இராக்கின் மீது ஆக்கிரமித்த பிறகு செய்ய வேண்டியவை என்று தனக்குள் ஏற்படுத்திய சில குறிக்கோள்களைக்கூட பிரிட்டிஷ் அரசு செய்து முடிக்கவில்லை. இந்தச் செயல்களின் விளைவாக200-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் (ராணுவத்தினர் அல்ல) 2009 ஜூலைக்குள் இறந்தனர். 1,50,000 இராக்கியர்கள் மரணத்தைத் தழுவினர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தனர். இந்த நிலை இன்னமும்கூட மாறவில்லை. இந்த உண்மைகளை இல்லை என்று பிளேரால்கூடக் கூற முடியாது.

சில்காட் விசாரணை என்பது நீதிமன்ற விசாரணை அல்ல. எனவே, ஆக்கிரமிப்பு செய்ய முடிவெடுத்த பிளேர் மீதும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடுக்க இந்த விசாரணை மட்டும் போதாது. தான் செய்தது சரி என்று உறுதியாக நம்பும் பிளேர், இறந்த பிரிட்டிஷ் வீரர்களின் குடும்பத்தார் உட்பட அனைவரையும் சந்தித்து இதைக் கூறவும் தயார் என்று மார் தட்டுகிறார். நியாயமற்ற ஒரு போரின் விளைவாக அந்நாட்டு மக்கள் தினந்தோறும் புதுப் புது வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தவறான அனுமானங்களின் பேரில் தங்கள் நாட்டின் மீது நிகழ்த்திய படையெடுப்பும் அதையொட்டிய போரும் இன்றளவும் ஏற்படுத்திவரும் துயரங்களைப் போக்க எந்தவொரு செயலும் நியாயத்தையோ நிவாரணத்தையோ வழங்கிவிடாது என்பது இராக்கியர்களுக்கு நன்றாகவே தெரியும்.

© ‘தி இந்து’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x