

மதுவிலக்குப் போராட்டத்துக்காகத் தன் உயிரையே கொடுத்தவர் சசிபெருமாள்
ஆங்காங்கே தன்னெழுச்சியாய் நடந்தவந்த மதுவிலக்குப் போராட்டங்களை, தன்னுயிர் தந்து ஒரே பேரியக்கமாய் மாற்றிய பெருமைக்குரியவர் காந்தியவாதி சசிபெருமாள். மதுவுக்கு எதிரான அவரது பலகட்டப் போராட்டங்களின் அங்கமாக கன்னியாகுமரியில் இருந்து ஒரு நடைப்பயணம் தொடங்கியது. அதனை நாகர்கோவிலில் ஒருங்கிணைத்தவர் தேசியக் கட்சி ஒன்றின் குமரி மாவட்ட முக்கிய நிர்வாகி. ஊடகவியலாளர்களோடு நெருக்கமாக இருப்பவரும்கூட.
அவர் என்னிடம் சொன்ன விஷயம் இப்போதும் காதுக்குள் ஒலிக்கிறது. “நான்கூட தண்ணியடிப்பேன் பாத்துக்கங்க. சசிபெருமாள் நல்ல நோக்கத்துலதான் இதச் செய்யுதாரு. கவர்மென்ட் கடையை மூடுனா நான்லாம் காய்ச்சியா குடிக்கப்போறேன்? இந்த மாதிரி மனுசனுக்கு நாம கூட நிக்கணும் கேட்டியளா” என்றார். இப்படி மதுப் பிரியர்களையும் போராட்டக் களத்துக்கு வரவழைத்தவர் சசிபெருமாள். மதுவுக்கு எதிராக எத்தனையோ பேர் சுடரேந்தினார்கள் என்றாலும், அது எட்டுத் திசையும் பரவுவதற்காக அந்த யாக நெருப்பிலேயே தன்னுயிரையும் நெய்யாக வார்த்தவர் சசிபெருமாள்.
சசிபெருமாள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறியது குறித்து இன்னமும் சிலர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சசிபெருமாள் செல்போன் கோபுரத்தின் மேல் நின்று போராடும் அளவுக்கு அரசு இயந்திரத்தின் தொடர் மெத்தனம் இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உயிர்த் தியாகத்துக்குப் பிறகும், மதுவிலக்குப் போராட்டத்துக்காகத் தன் உடலையே ஆயுதமாகக் கொடுத்தவர் சசிபெருமாள்.
உண்ணாமலைக்கடை வரலாறு
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் அருகே பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம் போன்றவை இருப்பதால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர். அரசு இயந்திரம் அசைந்து கொடுக்கவில்லை. மதுக் கடையினால் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகிவந்த உண்ணாமலைக் கடை, பெருங்குழி, பயணம், பம்மம், ஆயிரந்தெங்கு என ஐந்து கிராம மக்களும் ஓரணியில் திரண்டனர். கடந்த 2012-ல் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று ‘மது போதைக்கு எதிரான பொது மக்கள் இயக்கம்’ என்னும் அமைப்பை ஏற்படுத் தினர்.
மாவட்ட ஆட்சியர் மீது நம்பிக்கை இழந்ததால், உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி இந்த அமைப்பு சார்பில், கடந்த 19.3.2013-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற 20.2.14 அன்று உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டது. உடனே கடையை மூடிவிடுவார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம். கடை வழக்கமான உற்சாகத்துடன் இயங்கியது. கொதித்தெழுந்த மக்கள் அன்றைய தினமே போராட்டத்தைத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் கடையை இடம்மாற்றிவிடுவதாக உறுதி அளித்து ஒரு கடிதம் தந்தது டாஸ்மாக் நிர்வாகம். இப்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் எட்டு முறை கடிதங்களைத் தந்ததே தவிர, கடையை மூட எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. போராட்டமும் தொடர்ந்தது.
தொடர் போராட்டம்
ஆயிரமாவது நாள் போராட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக, சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாளை அழைத்தார்கள் போராட்டக் குழுவினர். அதில் பங்கேற்று முழங்கிய அவர், அடுத்ததாக அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமேஸ்வரம் வந்தபோது, மீண்டும் உண்ணாமலைக்கடைக்கு வந்தார். அன்று ஜூலை 31. போராட்டம் 1,031-வது நாளை எட்டியிருந்தது. முடிவேதும் இல்லாமல் போராட்டம் நீடிப்பதை விரும்பாத அவர், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதற்காக செல்போன் கோபுரத்தின் மீதேறிப் போராடினார். உச்சி வெயிலில் நின்று போராடியும், டாஸ்மாக் மேலாளர் களத்துக்கு வரவில்லை. காவல் துறைக்கோ கடை அகற்றப்படுவது குறித்து வாக்குறுதியும் கொடுக்க முடியாத சூழல். கயிறு கட்டி அவரை இறக்க முயன்றார்கள் போலீஸார். இறந்துபோனார் சசிபெருமாள். ஆனாலும், கோரிக்கை நிறைவேறாமல் தகன மேடைக்கு அவரது உடலைக் கொண்டுசெல்ல அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் ஏழு நாட்களாக இருந்தது அவரது உடல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வைகோ, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் அங்கு வந்ததும் போராட்டம் உச்சமடைந்தது. ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்ததும் அதன்பின் நடந்தவை.
உயிர்த் தியாகத்தின் பின்னணியில்…
தமிழகத்தில் இன்று 500 கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என்றால், அதன் பின்னால் சசிபெருமாள் உயிர் துறப்பும், உண்ணாமலைக்கடை கிராம மக்களின் வீரியமிகு போராட்டமும் உள்ளது. சசிபெருமாள் இறப்பைத் தொடர்ந்து உண்ணாமலைக்கடை பகுதியில் இயங்கிவந்த அந்த டாஸ்மாக் கடை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் பூட்டப்பட்டது. அவர் இறந்த மூன்றாவது நாளே, அவசர அவசரமாக அந்தக் கடையைப் பள்ளியாடியில் உள்ள வாகைவிளைக்கு மாற்றினார்கள். அங்குள்ள மக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அடுத்த மூன்று நாட்களில் அக்கடை பள்ளியாடி சந்திப்புக்கு மாற்றப்பட்டது.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சசிபெருமாள் உயிரைக் கொடுத்துப் போராடியும் உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடை, மூடப்படவில்லை; இடமாற்றம் மட்டுமே செய்யப் பட்டுள்ளது. அதே கடை, அதே எண்ணில் (4839) இப்போதும்கூட பள்ளியாடியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் 500 கடைகளை மூட அரசு ஆணையிட்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு கடைகள் மட்டுமே மூடப்பட்டன. அந்தப் பட்டியலில் கடை எண் 4839 இடம்பெறாதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள். போராட்டக்காரர்களுக்கு அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கையிலும்கூட, நீதிமன்ற உத்தரவுப்படி இக்கடை அகற்றப்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மூடப்பட்டதாகத் தகவல் இல்லை. இது தெரிந்திருந்தும் எந்த அரசியல் கட்சியும் போராட முன்வரவில்லை. தேர்தல் முடிந்துவிட்டதல்லவா?
உண்ணாமலைக்கடை மக்கள் சசிபெருமாள் நினைவு தினத்தை அனுசரிக்க வாய்ப்புள்ளது என்று கிடைத்த தகவலையடுத்து, கடந்த இரு மாதங்களாகவே இப்பகுதி முழுவதும் காவலர்கள் முகாமிட்டிருந்தனர். முன்பு போராட்டம் நடத்தியவர்களிடம் இதுகுறித்து விசாரணையும் நடத்திவந்தனர். இத்தனை கெடுபிடிகளையும் கடந்து, தங்களால் இயன்ற அளவுக்கு சசிபெருமாளின் தியாகம் குறித்து 4,000 துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வினியோகித்தனர் இந்தப் பகுதி மக்கள். உண்ணாமலைக்கடையைத் தவிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற பகுதிகளில் எவ்வித சலனமும் இன்றிக் கடந்துபோயிருக்கிறது சசிபெருமாளின் முதலாமாண்டு நினைவு நாள்!
தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in