ஒரு நிமிடக் கட்டுரை: அமிதாப் என்ன செய்தார் தெரியுமா விஷால்?

ஒரு நிமிடக் கட்டுரை: அமிதாப் என்ன செய்தார் தெரியுமா விஷால்?
Updated on
1 min read

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்குச் சில நடிகர்கள் ஆதரவு தெரிவித்ததைப் பார்த்தோம். தார்மிக ஆதரவையும் தாண்டி விவசாயிகளுக்கு நடிகர்கள் நேரடியாக உதவி செய்த சம்பவங்கள் உண்டு. ‘விவசாயிகள் தற்கொலைப் பிரதேசம்’ என்று அழைக்கப் படும் விதர்பா பகுதியின் விவசாயிகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் செய்த உதவி ஓர் உதாரணம்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினம் சென்றிருந்தார் அமிதாப். அப்போது ஆந்திரத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை அவரது மனதை வருத்தியது. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வறட்சி, விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்களும் அவரைப் பாதித்தன. மும்பை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவரான கல்பனா முன்ஷியை அணுகினார். ஏற்கெனவே விவசாயிகளுக்கு உதவியிருந்தது மும்பை ரோட்டரி. முதலில், விவசாயிகளிடம் நிதி உதவி பற்றி எதுவும் கூறாமல், நிலவரம் தொடர்பாக விசாரிப்பது போல் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். இதில் விவசாயிகளுக்கு விசாரித்தவர்களிடம் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை என்பதால், உண்மை நிலையை அறிய முடிந்தது. கடைசி ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்த நிதி உதவியை அமிதாப்பச்சன் கொடுக்கவிருக்கும் தகவல் வெளியானது.

இந்த நிதி உதவி நேரடியாக வங்கிகளின் பெயரில் காசோலையாக அளிக்கப்பட்டன. வங்கிகளின் மேலாளர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் விவசாயிகள் சார்பாகக் கடன் பாக்கி ஒப்படைக்கப்பட்டது. 114 விவசாயிகள் கட்ட வேண்டியிருந்த ரூ.9,000 முதல் ரூ.44,000 வரை மொத்தம் ரூ.39 லட்சம் கடன் தொகை சம்பந்தப்பட்ட வங்கி களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விவசாயிகள் அடுத்த பயிர் காலத்துக் கான கடன் பெறுவதற்கும் தகுதி பெற்றனர். இதற்கான சான்றிதழ்கள் வங்கிகளின் சார்பாக அந்த விவசாயிகளுக்கு விழாவில் கொடுக்கப்பட்டன. இப்பணியில், ரோட்டரியினர் தம் சொந்த முயற்சியில் மற்றொரு முக்கிய பலனைப் பல விவசாயிகளுக்குப் பெற்றுத் தந்தனர். விவசாயிகள் கடன் பெற்ற வங்கிகளில் அதன் வட்டித் தொகையைக் குறைக்கும்படி வேண்டினர். இதைச் சில வங்கிகள் மட்டும் ஏற்று 4% வரை வட்டியைக் குறைத்ததால், பல விவசாயிகள் தம் கடனை எளிதாகச் செலுத்த முடிந்தது. வழக்கமாக நஷ்டம் அடையும் பெருநிறுவனங்கள் பெற்ற கடனை, வட்டியைக் குறைத்து இவ்வாறு வங்கிகள் பெறுவது உண்டு.

இந்த விழாவுக்கு முன், அமிதாப்பின் நிதி மேலாளரான ராஜேஷ் யாதவ் மும்பையிலிருந்து வந்து, விவசாயிகள் வாங்கிய கடன்களைச் சம்பந்தப்பட்ட வங்கிகளில் உறுதிப்படுத்திவிட்டுச் சென்றார். ஆனால், இதற்கான விழாவை ஏற்பாடு செய்தபோது அதில் கலந்துகொள்ள அமிதாப் மறுத்ததுடன், ‘விவசாயிகளுக்குச் செய்த உதவியை வைத்து விளம்பரம் தேட விரும்பவில்லை’ எனப் பெருந்தன்மையுடன் கூறிவிட்டார்.

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in