சீனாவை அதிரவைத்த ஜாங் ஜிங்

சீனாவை அதிரவைத்த ஜாங் ஜிங்
Updated on
3 min read

சீனாவின் இரும்புத்திரை சமூக வாழ்க்கையை ஒரு பெண்ணின் போராட்டம் கேள்விக்குள்ளாக்கி வருகிறது. சீன அரசாங்கம் சங்கடத்தோடு ஒரு பெண் பெயரை உச்சரிக்கிறது: ஜாங் ஜிங்!

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று சீனத்தின் ஷென்யாங். இந்த நகரில் வாழ்ந்த சியா ஜுன்பெங்கின் மனைவிதான் ஜாங் ஜிங். இவர்களுக்கு ஒரு மகன். வேலையிழந்து வாடியதால் குடும்பத்தாரின் வாட்டத்தைப் போக்க நகர வீதிகளில் இறைச்சி கவாபுகளை விற்றார் சியா ஜுன்பெங். கணவரின் வீதி வியாபாரத்துக்கு வேண்டிய உதவிகளை மனைவி செய்துவந்தார்.

நகரத்து வீதிகளில் இப்படி கவாபுகளை விற்பது சீனாவில் சட்ட விரோதம். எந்த நாட்டில்தான் இதையெல்லாம் அனுமதிக்கிறார்கள்? நகர மக்களின் சுகாதாரத்தில் அக்கறைகொண்டுதான் இந்த நடவடிக்கை என்றாலும், சீனத்தில் இந்த வேலைகளை ஒப்படைத்திருப்பது செங் குவான் என்ற அலுவலர்கள் படையிடம். இது கிட்டத்தட்ட ஆயுதங்களற்ற ராணுவம் போன்றது. இதன் ஊழியர்கள், அரசு தங்களுக்குத் தந்திருக்கும் மொட்டை அதிகாரத்தைத் தங்களுடைய மனம்போன போக்கில் செயல்படுத்துவார்கள். ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களிடம் ஒரு மாதிரியாகவும் ஏதும் இல்லாத எளியவர்களிடம் கெடுபிடியாகவும் நடந்துகொள்வார்கள்.

சியா ஜுன்பெங் செல்வாக்கு ஏது மில்லாதவர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் வீதியில் அவர் கவாபு விற்றுக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ இரு அதிகாரிகள் அவரை நோக்கி ஓடிவந்தனர். அவரிடம் இருந்தவற்றைப் பறித்து வீதியில் வீசி எறிந்ததுடன் அவரை அடிக்கவும் ஆரம்பித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, சமையலறைக் கத்தியைக் கையில் எடுத்து அவர்களை நோக்கித் திருப்பினார் சியா ஜுன்பெங். அப்போது நடந்த களேபரத்தில் இருவருக்கும் பலத்த கத்திக்குத்து விழுந்து படுகாயம் அடைந்தனர். பிறகு, இருவரும் இறந்துவிட்டனர்.

நகராட்சி விதிகளுக்குப் புறம்பாக வீதியில் விற்பனை செய்தது, நகர மக்களின் உடல் நலனைக் கெடுக்கும் வகையில் சுகாதாரக் கேடாகத் தின்பண்டம் செய்து விற்றது, நகராட்சி அதிகாரிகளைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது, அவர்களுடைய உயிரைப் பறிக்க ஆயுதங்களுடன் திட்டமிட்டு வந்தது என்று ஏகப்பட்ட குற்றப் பிரிவுகளில் சியா ஜுன்பெங் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

“நான் கவாபு விற்றது உண்மைதான். குடும்பம் வறுமையில் வாடியதாலும் வேறு வேலை கிடைக்காததாலும் விற்றேன். அதிகாரிகளைக் கொல்லும் நோக்கம் எனக்குக் கிடையாது. இருவரும் என்னை அடித்தபோது வலி தாங்காமல் அவர்களை மிரட்ட தற்காப்புக்காகத்தான் கத்தியை எடுத்தேன். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் எதுவும் நான் திட்டமிடாதவை” என்று வாதாடினார் சியா ஜுன்பெங். ஆனால், எதுவும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏறவில்லை. கீழ் நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முறையீட்டிலும் தோற்றுக்கொண்டே வந்தார் சியா ஜுன்பெங்.

இதற்கிடையே, இந்த வழக்கு செய்தி ஊடகங்கள் வழியாகவும் ‘சைனா வெய்போ’ சமூக ஊடகத்தின் (சீனத்து ட்விட்டர்) வழியாகவும் ஏராளமான சீனர்களைச் சென்று சேர்ந்தது. அவர்கள் ஜாங் ஜிங்குடன் தொடர்புகொண்டு அனுதாப வார்த்தைகளைத் தெரிவித்ததுடன், அவருடைய கணவரை வழக்கிலிருந்து விடுவிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஜாங் ஜிங்குக்குக் கணினி என்றால் என்னவென்றே தெரியாது. கணவருக்கு ஆதரவாகக் களம்காணப் புறப்பட்ட அவருக்கு, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் மூன்று இளம் வழக்குரைஞர்கள் ஆதரவாக வந்தனர். அவர்களில் ஒருவர் ஜாங் ஜிங்குக்கு ஒரு கணினியையும் சட்டப் புத்தகத்தையும் பரிசாக அளித்தார். ஜாங் ஜிங் இப்போது கணினி, சட்டப் புத்தகங்களின் துணையோடு சட்ட வல்லுநர்களுக்கு ஈடாக விவாதிக்கும் அளவுக்குத் தேறிவிட்டார். கணவருக்காக நீதிமன்றங்களின் படியேறிப் பழகிவிட்டார்.

அதேபோல, தன்னுடைய தந்தையின் நிலைகண்டு வருந்திய அவர்களுடைய ஒரே மகன், அடிக்கடி ஓவியங்களைத் தீட்டிக்கொண்டே வந்தான். அந்த ஓவியங்கள் அவனுடைய தந்தையின் நிலையை உணர்த்தும் வகையில் சோகக் காவியங்களாக இருந்ததால் அவற்றைப் பலரும் விலைகொடுத்து வாங்கிச் சென்றனர். சீனத்தில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதைக் கண்டித்து நடைபெறும் ரகசிய ஓவியக் கண்காட்சியில் வைப்பதற்காகச் சில ஓவியங்களை ஆர்வலர்கள் விலைகொடுத்து வாங்கிச் சென்றனர். ஆனால், தாய்க்கும் மகனுக்கும் கடைசியில் கிடைத்தது தோல்விதான்.

கடந்த வாரம் சியா ஜுன்பெங்கின் கடைசி மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது. அடுத்த நாளே அவருடைய கணவருக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பாகிவிட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் நாளன்று காலையில் ஜாங் ஜிங் அவருடைய கணவரைச் சந்திக்க அனுமதி தரப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கணவரை முதல்முதலாக நேரில் பார்க்கப்போகிறோம் என்று துடிப்புடன் சென்றவருக்கு ஒரே ஏமாற்றம். சியா ஜுன்பெங்கைச் சிறைக் கொட்டடிக்குள் ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். இரண்டு கைகளையும் கால்களையும் சங்கிலிகளால் பிணைத்திருந்தனர். கைகளால் கால்களைத் தொட முடியாது. அவ்வளவு ஏன், ஒரு கையால் இன்னொரு கையைக்கூடத் தொட முடியாமல் சங்கிலி தடுத்தது. அந்த அறையில் ஆறு மூத்த அதிகாரிகள் கடுகடுவென உட்கார்ந்திருந்தனர். அவருடன் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கலாம் என்று அனுமதி வழங்கினர்.

மனைவியை நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்த ஜுன்பெங் உணர்ச்சி மேலிட்டு அழுதார். “நான் வேண்டுமென்றே அவர்களைக் கொல்லவில்லை. என் மீது வீணாகப் பழி சுமத்துகிறார்கள்” என்று மனம் நொந்து கூறினார். “குழந்தையை நன்றாகப் படிக்க வை, நன்றாகப் பார்த்துக்கொள்” என்று கதறினார். “உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித்த ஜாங் ஜிங், அவரை ஆரத்தழுவி ஆறுதல் கூற நினைத்தார். ஆனால், ஜுன் பெங்கைச் சுற்றிக் கட்டியிருந்த சங்கிலிகளை அகற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆகையால், அந்த அறைக் கதவின் கம்பிகளுக்கு நடுவே கையை நுழைத்து அவரைத் தன்னருகில் இழுக்க முயன்றார். அவரால் இரு கைகளையும் நுழைக்க முயன்றும் ஒரு கையால் மட்டுமே அவருடைய முகத்தை அதுவும் ஒரு விரலால் மட்டுமே தொட முடிந்தது. இருவர் விழிகளிலும் கண்ணீர் ஆறாகப் பெருகியது. கடைசி நேரத்தில்கூட கணவனின் உடலைத் தொட முடியவில்லையே என்ற ஆதங்கம் மனைவியைத் துடிக்கச் செய்தது. “போதும் போங்கள்” என்ற அதிகாரிகளின் உறுமல்களுக்கு இடையே இருவரும் பிரியாவிடை பெற்றனர். அந்தக் கடைசிச் சந்திப்புக்குச் சில மணி நேரங்களுக்கெல்லாம் கணவரின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை மூட்டையாகப் பெற்றார் ஜாங் ஜிங்.

அதை வீட்டுக்கு எடுத்துவந்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில், ஒரு மேஜையின்மீது வைத்தார். பக்கத்திலேயே ஜுன்பெங்கின் இளவயதுப் புகைப்படம், அருகில் பார்வையாளர்கள் விரும்பினால் குறிப்புகளை எழுத ஒரு புத்தகம், இறந்தும் ஒளிவீசும் அவருடைய ஆன்மாவைக் குறிக்க ஒரு மெழுகுவத்தி ஆகியவற்றுக்கிடையே பத்திரிகை நிருபர்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் பேட்டியளித்தார் ஜாங் ஜிங். சில வேளைகளில் அழுதும் சில வேளைகளில் விரக்தியாகச் சிரித்தும் பேட்டியளித்தார்.

அவருடைய 13 வயது மகன், தந்தையைக் கொன்றுவிடுவார்கள் என்பது உறுதியானதும் ஓர் ஓவியம் வரைந்தான். மிகப் பெரிய கடலில் ஒரு மீன் மட்டும் சிறிய கிண்ணத்தில் சிறைபிடிக்கப்பட்டதைப் போல வரைந்திருந்தான். அது பார்ப்ப வர்களின் மனதை மிகவும் உருக்கியது. 400 மைல்களுக்கு அப்பாலிருக்கும் பெய்ஜிங்கிலிருந்து வந்த சீனர் ஒருவர் அந்த ஓவியத்தை விலை கொடுத்து வாங்கினார். ஏழைகள் வசிக்கும் ஒற்றையறை அடுக்ககங்களில் ஆறாவது மாடியில் ஜாங் ஜிங் குடும்பம் வசிக்கிறது. அனைவரும் படியேறி அந்த வீட்டுக்கு வந்து தங்களுடைய அனுதாபத்தைத் தெரிவித்துச் செல்கின்றனர்.

உணவு, உடை, இருப்பிடம் என்ற முத்தேவைகளும் முக்கியமானவைதான். அத்தோடு முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை. மனிதனை மனிதனாக நடத்தாத எந்த மகத்தான நாடும் ஆடு, மாடுகளைப் பாலுக்கா கவும் தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கும் பக்குமவற்ற பண்ணைகளாகவே வரலாற்றால் பார்க்கப்படும்.

தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in