Published : 15 May 2017 08:09 am

Updated : 28 Jun 2017 18:09 pm

 

Published : 15 May 2017 08:09 AM
Last Updated : 28 Jun 2017 06:09 PM

வெறுப்பரசியலில் நக்ஸல்பாரிகளின் பங்கு என்ன?

நக்ஸல்பாரி இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைந்திருக்கிறது. 1967-ல் வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில், நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளின் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு பகுதியினரை ஆயுதப் புரட்சி நோக்கித் திருப்பி அரை நூற்றாண்டு ஆகிறது. இந்திய கம்யூனிஸத்தில் மார்க்ஸிய - லெனினிஸம், மாவோயிஸம் என்று பல போக்குகளுக்கு வழிவகுத்த நக்ஸல் இயக்கம், அடிப்படையில் இன்று நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து, ‘ஆயுதப் பாதை ஒன்றே புரட்சிப் பாதை’ என்று நம்பித் தொடங்கப்பட்டது. ஆயுதப் புரட்சி என்பது வெளிப்பூச்சுக்கான ஒரு கவர்ச்சிகரமான சொல்; எதிர்த் தரப்பை அழித்தொழிப்பதே அவர்களுடைய வழிமுறை.

இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலமும் தீப்பற்றத் தயாராக இருக்கிறது என்று சொன்ன நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர். ஆனால், இயக்கம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அது கடும் பின்னடைவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட சாரு மஜும்தார் இறந்தார். இயக்கம் பலவாக உடைந்தது. சிதறிய அமைப்புகளில் பல அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தன. சில தேர்தல் பாதைக்குத் திரும்பின. சில பழைய பாதையையே வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்தன. ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் வர்ணிக்கப்பட்ட ‘மாவோயிஸ்ட் இயக்கம்’ நக்ஸல் இயக்கத்தின் நீட்சி. நேரடியாக ஆயுத வழியில் அல்லாமல், ஜனநாயக அமைப்புகளின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் நக்ஸல் ஆதரவு மனநிலை கொண்ட இயக்கங்கள் ஏராளம் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் ‘மகஇக’, ‘மக்கள் அதிகாரம்’ போன்ற பெயர்களில் செயல்படும் அமைப்புகளை நக்ஸல் இயக்க வழிமுறையில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் என்று சொல்லலாம்.


பொதுவாக, மிகத் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள் என்றாலும், எண்ணிக்கை அளவில் நாடு முழுவதிலுமே லட்சங்களில் அடக்கிவிடக் கூடிய மிகச் சிறுபான்மை அரசியல் தரப்பு இவர்கள். ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று நக்ஸல் இயக்கத்தையும் நக்ஸல் ஆதரவு இயக்கங்களையும் இந்தப் போக்குகளையும் மதிப்பிடுகையில், அது பெரிய தோல்வி அடைந்திருப்பதாகப் பலரும் எழுதுகிறார்கள். தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூடவே தங்களுக்கு வெளியே இருக்கும், இடதுசாரிசார் ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்; மறைமுகமாக வலதுசாரிகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது என்னுடைய துணிபு.

இந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்பவர்கள் இதுகுறித்தும் ஆய்வுசெய்தால் நன்றாக இருக்கும்: ‘இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியில் நக்ஸல்களின் பங்கு!’

வன்முறையைக் கைவிட்டார்களா?

கம்யூனிஸ்ட்டுகள் தொடர்பில் காந்தி வெவ்வேறு தருணங்களில் சொன்ன சில வார்த்தைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன: “தன்னலமற்ற, தியாக உணர்வு கொண்ட நமது சோஷலிஸ நண்பர்கள் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு. அவர்களது முறைக்கும் எனது முறைக்கும் இருக்கும் முக்கிய வேறுபாட்டை நான் ஒருபோதும் மறைத்ததில்லை. அவர்கள் வெளிப்படையாகவே வன்முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது அடிப்படையிலேயே அது இருக்கிறது… ரஷ்யாவில் இருப்பது போன்ற கம்யூனிஸம், அதாவது மக்கள் மீது திணிக்கப்படும் கம்யூனிஸம் இந்தியாவுக்கு ஒவ்வாது. வன்முறை தவிர்த்த கம்யூனிஸத்தில் எனக்கு நன்மதிப்பு உண்டு!”

இது கம்யூனிஸ்ட்டுகள் மீதான காந்தியின் மதிப்பீடு மட்டும் அல்ல; மறைமுகமாக அவர்களுக்குச் சொன்ன வெற்றிகரமான யோசனை என்றும்கூடச் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பாதையை நோக்கியே திரும்பியது. நாடாளுமன்றத் தேர்தல் முறையை அங்கீகரித்துப் போட்டியிட்டு வென்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் என்ற பெருமையோடு, கேரளத்தில் 1957-ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் அது அமைத்த ஆட்சி ஒரு சர்வதேச வரலாற்று நிகழ்வு. இந்த மண்ணுக்கேற்றத் தன்மையுடன் இன்னும் நெகிழ்வுப்பாதையில் நாடு முழுக்க அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திருந்தால், இன்று அவர்கள் எங்கோ சென்றிருக்க முடியும். அவர்களுக்கே உரித்தான ஏராளமான தடைகளினூடே அடுத்த பத்தாண்டுகளில் முளைத்த இன்னொரு பெரும் தடை நக்ஸல் இயக்கம். ஆயுத பாணியைக் கைவிட்டவர்களிலும் சரி, ஆயுத பாணியைத் தொடர்பவர்களிலும் சரி; நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களின் அடிமனதிலிருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்றபாடில்லை. இதற்கான சாட்சியம் அவர்களுடைய மொழி. ஒருவகையில் மனதில் கொப்பளிக்கும் வன்முறையை ஆயுதங்கள் வழி கொட்ட முடியாத ஆதங்கத்தையே வார்த்தைகளின் வழி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்கூடச் சொல்ல முடியும்.

யாரெல்லாம் போலி கம்யூனிஸ்ட்டுகள்?

இந்த வெறுப்பைக் கக்கும் சொல்லாடலை, ‘நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மதவாத, சாதிய சக்தி’களுக்கு எதிரானதாக மட்டும் அவர்கள் கையாளவில்லை; பொதுத்தளத்தில் தங்களிடமிருந்து வேறுபட்டு, இதே எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அவர்கள் இதே சொல்லாடலின் வழியாகவே எதிர்கொண்டார்கள். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர்கள் ‘கண்ணியப் படுகொலை’ செய்தனர். வெகுஜன நோக்கில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்த ஒவ்வொரு முடிவையும் தூய்மைவாதப் பார்வையில் கேள்விக்குள்ளாக்கி, அவர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தினர். எதிரிகளும் சொல்லக் கூசும் மொழியில் ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’ என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வசை பாடினர். நக்ஸல் கலாச்சார மொழியில் சங்கரய்யாவும் நல்லகண்ணுவும்கூட ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’தான்!

இந்த விமர்சனங்கள் பொதுவெளியில் இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான மதிப்பையும் தொடர்ந்து பாதித்துவந்ததோடு, அந்தக் கட்சிகளுக்குள் நெகிழ்வுத்தன்மைக்கு எதிர்ப் போக்கு உருவாகவும் வழிவகுத்தன. விளைவாக, சமரசம் எனும் சொல் தொடர்ந்து இழிவானதாகவே பார்க்கப்பட்டது. நெகிழ்வுத்தன்மை எதிர்மறையாக அணுகப்பட்டு, ‘புரட்சிகரமான’ எனும் சொல் ‘மேலும் தூய்மையான, மேலும் கறாரான, மேலும் இறுக்கமான’ என்று அணுகப்பட்டது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அரசியல் எதிரிகளின் போக்கு, அதற்கு எதிரான வியூகங்கள் தொடர்பாக விவாதித்தற்கு இணையாக தங்கள் இடையிலான உள்முரண்களை விவாதித்தே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் காலம் கழிந்திருப்பதை உணர முடியும்.

இந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான், இந்துத்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அமைப்புரீதியாகப் பெருகத் தொடங்கினார்கள். நூறாண்டுகள் நெருங்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் எங்கும் பெரிதாக உடையவில்லை; நோக்கங்கள் சார்ந்து பார்வை மாறினாலும் மைய நோக்கம் சிதறாமல் அதன் அமைப்புகள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் காலமெல்லாம் பிரிந்தும் உடைந்துமே சிதறியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, உள்மோதல்கள், குரூரத் தாக்குதல்கள். வலதுசாரிகளாவது எதிர்த்தரப்பின் மீது முத்திரை குத்துகிறார்கள். மாற்றுப் பார்வையோடு உள்ள சொந்தத் தரப்பின் மீதே முத்திரை குத்தும் கலாச்சாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எங்கிருந்து வருகிறது? இதற்கு மிக அடிப்படையான காரணம் என்ன? அதற்கும் சகிப்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதற்கும் தூய்மைவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

சதிக் கோட்பாடு எங்கிருந்து உருவாகிறது?

வன்முறையை அடிப்படையாகக்கொண்ட ஆயுத பாணி அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் சதிக் கோட்பாடு. எல்லாவற்றையுமே சதியாகப் பார்ப்பது. அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணங்கள் மீது நன்னம்பிக்கை வைக்கத் தவறுவது. உள்ளுக்குள்ளும் வெளியிலுமாக வதந்திகளையும் சதிகளையும் சதிகாரகளையும் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டே இருப்பது. ஆயுததாரி இயக்கங்களின் வரலாற்றைப் படித்தால், ஒவ்வொரு இயக்கமும் தமக்குள் கருத்து முரண்பட்ட எத்தனை பேரை திரிபுவாதிகள், துரோகிகள், எதிர்ப் புரட்சிக்காரர்கள், சதிகாரர்கள் என்று முத்திரை குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். தம் சொந்த சகோதரர்கள் மீதே தாக்குதல் தொடுக்கும் இந்த மோசமான முத்திரைக் கலாச்சாரம் எப்படியோ கம்யூனிஸ இயக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு வியாதியாக உறைந்துவிட்டது. இந்தியாவில் அந்த வியாதிக்கு இன்று அல்லும் பகலும் அயராது ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்கள் நக்ஸல் ஆதரவாளர்கள்.

இவர்கள் மறைமுகமாக கம்யூனிஸ்ட்டுகள் மீது செலுத்தும் தாக்கம் அவர்கள் வழி ஏனைய தாராளவாதக் கட்சிகளையும் பீடிக்கிறது. ஆக, வலதுசாரிகளுக்கு இணையான வெறுப்பை உமிழ இடதுசாரிகளிலும் ஆட்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தெருவில் அன்றாடம் இரவானதும் இரு மூர்க்கர்கள் நின்று கத்திக்கொண்டே இருந்தால், அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் எப்படி வெகுவிரைவில் அந்தத் தெருவிலுள்ள எல்லோரையும் தொற்றுமோ அப்படி இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த வெறிச் சொல்லாடல்கள் பொதுச் சமூகத்தையும் ஊடகங்களையும்கூட ஆக்கிரமிக்கின்றன.

நெடுவாசல் போராட்டம் நடந்த சமயம் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று வெளியிட்ட அட்டையைக் காட்டி, மகஇக பத்திரிகையான ‘புதிய ஜனநாயகம்’ அட்டையின் சாயல் அதில் வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் நண்பர். ஆச்சரியப்பட ஏதுமில்லை. பல ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் மொழிநடையில் ‘புதிய ஜனநாயகம் மொழி’ புகுந்து நெடுங்காலம் ஆகிறது!

இன்றைக்கு இடதுசாரி என்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் பல இளைஞர்கள், சமூக வலைதளத்தில் கையாளத் தேர்ந்தெடுக்கும் மொழி இந்த மொழிதான். எடுத்த எடுப்பில் ஒட்டுமொத்த அமைப்பையும் சதிகாரர்களாக முத்திரை குத்தும் மொழி. தன் பாணியில் பேசாத எவரையும் எதிரிகள் என்று முத்திரை குத்தும் புஷ்ஷிஸ சகிப்பின்மை மொழி. வார்த்தைக்கு வார்த்தை வெறுப்பு. தம்முடைய கருத்துக்கு முரண்படக்கூடிய எவரையும் இழிப் பிரச்சாரத்தின் வழி ‘கண்ணியப் படுகொலை’ செய்வது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை ஒரு நாயாகப் புகைப்படமாக்கி ‘புதிய ஜனநாயகம்’ அட்டையில் ஒருமுறை வெளியிட்டிருந்தது. அண்ணாவின் நூற்றாண்டைத் தமிழகம் கொண்டாடிய தருணத்தில் அவர்கள் வெளியிட்ட சிறப்புக் கட்டுரையின் தலைப்பு: அண்ணா - பிழைப்புவாதத்தின் பிதாமகன்! இதை எழுதும், இதை ரசிக்கும் ஒரு கூட்டம் சகிப்பின்மையைப் பற்றி எப்படித் தார்மிகரீதியாகப் பேச, எழுத முடியும்? வார்த்தைகள் வேறு வேறு என்றாலும் அடிப்படையில்

‘தேச விரோதி’எனும் முத்திரைக்கும் ‘முதலாளித்துவ அல்லது சங்கப்பரிவார அல்லது பார்ப்பனக் கைக்கூலி’ எனும் முத்திரைகளுக்கும் அவற்றின் அடித்தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ பொருத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மைதானே?

வெறுப்பரசியலின் பின்விளைவுகள்

வெறுப்பைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. நம் காலத்தின் பெரும் சவால் அதுதான். வெறுப்பு. அதன் பின்னுள்ள சகிப்பின்மை. அதன் பின்னுள்ள தூய்மைவாதம். இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பெரிய வியாதி தூய்மைவாதம். அங்கிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. தூய்மைவாதத்தை அடிப்படைவாதத்தோடு ஒப்பிடலாமா? ஒப்பிடலாம். இந்துத்வத்தோடு ஒப்பிடலாம். வஹாபியத்தோடு ஒப்பிடலாம். தீவிரவுச்சநிலையோடு ஒப்பிடலாம். சாதியத்தோடு ஒப்பிடலாம். தீண்டாமையோடு ஒப்பிடலாம். பிராமணியத்தோடு ஒப்பிடலாம். ஹெட்கேவாருடன் ஒப்பிடலாம். சாரு மஜும்தாருடனும் ஒப்பிடலாம்!

ஐம்பதாண்டு நக்ஸல் இயக்கம் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று பரந்த பார்வையில் பார்த்தால், அவர்கள் உருவாக்கத்தில் தொடங்கி இன்று வரை முன்வைக்கும் பிரச்சினைகள், விமர்சனங்கள் பலவற்றுக்கும் ஒரு வரலாற்று நியாயம் இருக்கிறது. பெரிய அரசியல் இயக்கங்கள் முற்றிலுமாகப் புறக்கணித்த பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் மீதான அமைப்புரீதியிலான ஒடுக்குமுறைகளையும் அவர்களுடைய துயரங்களையும் நோக்கிப் பொதுச் சமூகத்தின் பார்வையையும் கரிசனத்தையும் அவர்கள் திருப்பியிருக்கிறார்கள். இது அவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை. கனிம வளச் சுரண்டல்கள், தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்கள், சாதியக் கொடுமைகள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் இன்றும் சளைக்காத பங்களிப்பை அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக அக்கறையும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க ஒரு இளைஞர் கூட்டத்தை எல்லாக் காலங்களிலும் இந்தியா உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த இயக்கங்களில் உள்ள தனிமனிதர்களின் தியாக வாழ்வும் அர்ப்பணிப்பும் நமக்கு தொடர்ந்து நிரூபித்துவருகிறது. அதே வேளையில், இந்த மண்ணில் ஒருநாளும் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் எடுபடாது, அவர்கள் தேர்தெடுத்த வழி தவறானது என்பதையும் அழுத்தந்திருத்தமாக நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்கிறது வரலாறு. அவர்களிடமுள்ள வன்முறை வெறுப்பு அரசியலால் இறுதி பலன், அதிக பலன் அடைபவர்கள் எதிர்த் தரப்பாகவே இருப்பார்கள் என்பதையும் அது அடித்துச் சொல்கிறது.

சுஜாதா படித்தால் ஒரு குற்றமா!

ரொம்பவும் சிக்கலான பிரச்சினை நக்ஸல்களின் அரசியல் புரிதலும் அவர்களுடைய சகிப்பின்மைக் கலாச்சாரமும். சுஜாதாவைப் படித்ததால் தன்னைத் திரிபுவாதியாக்கிவிட்டார்கள் என்று சொன்னார் ஒரு நண்பர். நான் தி.ஜானகிராமனை விதந்தோதி எழுதியதால் எதிர்ப் புரட்சிக்காரன் என்று சாடி ஒருமுறை கடிதம் வந்திருந்தது. அம்பேத்கர் பிறந்த நாளன்று ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி’ என்று அவரைப் பற்றி ஒரு மணி நேரம் புகழ்ந்து பேசிய ஒருவர் மறுநாள் “இந்தியாவின் அரசியல் அமைப்பே பார்ப்பன பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது; அது முற்று முதலாக உடைத்து நொறுக்கப்பட வேண்டியது” என்றும் இன்னொரு இடத்தில் பேசிக்கொண்டிருந்ததை ஒரு நண்பர் சொன்னார். நக்ஸல்களால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்று ஒன்று தொகுக்கப்பட்டால், அவர்கள் எந்தத் தரப்புக்காகப் பரிந்து பேசுவதாகச் சொல்கிறார்களோ அதே தரப்பு மக்கள்தான் அவர்களால் அதிகம் கொல்லப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். தண்டகாரண்யத்தில் இன்று மத்தியக் காவல் படை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் யார்? கான்ஸ்டபிள்கள் உடையில் நிற்கும் பழங்குடிகள்தானே?

வலதுசாரிகளை எதிர்த்து ஜனநாயகக் களத்தில் நிற்பவர்களிடம் நக்ஸல் ஆதரவாளர்களின் அரசியல் நேரடியாக மூன்று விதங்களில் பின்னடைவை உருவாக்கியிருக்கிறது. 1.நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் ஓட்டுப்பொறுக்கிகள் - அத்தனை அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று தேர்தல் அரசியலிலுள்ள எல்லோரையும் இழிவுபடுத்துவதன் மூலம், அரசியல் சாக்கடை எனும் கோட்பாட்டையே வேறு மொழியில் பொதுப்புத்தியில் இது கட்டமைக்கிறது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் மோசம், எதிரே நிற்பவர் மட்டும் அல்லாமல், பக்கத்தில் நிற்பவர்களும் மோசம் என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் எங்கும் புரட்சி உண்டாவதில்லை; மாறாக சாமானியர்களையும் எளிய மக்களையும் அது மேலும் மேலும் அரசியலையும் அதிகாரத்தையும் விட்டு விலக்குகிறது. 2. தம்மைத் தவிர எல்லாத் தரப்புகளையும் சாடுவது, புதிதாக அரசியல் நோக்கி வரும் இளைய தலைமுறையிடம் கருப்பு - வெள்ளை புஷ்ஷிஸ கோட்பாட்டை உருவாக்குகிறது. களத்தில் உள்ள எல்லோரையும் பொதுமைப்படுத்தும் அது “காங்கிரஸும் பாஜகவும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயிலே மண்ணு!” - வலதுசாரிகளை எதிர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒருவகையில் களத்தில் வலதுசாரிகளுக்கு எதிராக வலுவான போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக்கொள்வதுமாகிறது - “கோட்ஸேவைப் பற்றி மட்டும் அல்ல; காந்தியையும் திட்டி எழுது. ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடியைப் பற்றி மட்டும் அல்ல; காந்தி, நேரு, அண்ணா, ராகுலை இழிவுபடுத்தியும் கட்டுரைகள் போடு!” 3. நோக்கங்கள் வேறு என்றாலும், சூழலைச் சகிப்பின்மையை நோக்கித் தள்ளி, வெறுப்பின் களமாக்குவதில் சங்கப் பரிவாரங்களைப் போலவே செயல்படுவதன் வாயிலாகக் களத்தை வெறுப்புக் களமாக்கிவிடுவதால், களத்தை எதிரியின் வசமாக்கிவிடுவது. வெறுப்புதான் இரு தரப்பினருக்குமே ஆயுதம் என்றாகிவிட்டால், அதில் வலியவர் எவரோ அவரே வெல்ல முடியும் - அதுவே இன்று நடக்கிறது!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in


அரசியல்மோடி ஆட்சிநக்ஸல்பாரிவெறுப்பரசியல்கம்யூனிஸ்ட்கள்போலி கம்யூனிஸ்ட்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x