

இந்தியாவின் முதல் திரைப்படமான'ராஜா ஹரிசந்திரா'வை 1913-ல் இயக்கி வெளியிட்டார் தாதாசாகேப் பால்கே. 1895-ல் பிரான்ஸ் நாட்டில் சலனப்படக் கலை (Motion pictures) கண்டறியப்பட்டது. ஒரு தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு வெறும் 18 ஆண்டுகளில், பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள ஒரு நாட்டில், அதுவும் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில், அந்தத் தொழில்நுட்பத்தை மேம்பட்ட வடிவத்தில் கையாண்டு வெற்றியடைந்தார் பால்கே. அவர் இயக்கிய முதல் படம் வெளியான 1913-ஐக் கணக்கிட்டு இந்த ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அரசும் திரைத் துறையும் இவ்விழாவைக் கொண்டாடுகின்றன. இந்தத் தருணத்தில், வேறு சில வரலாற்றுச் செய்திகளையும் பகிர்ந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறேன்.
சாமிக்கண்ணு வின்சன்ட் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றிவர் அவர். சினிமா எனும்'கலை'பிரான்ஸைச் சேர்ந்த லூமியே சகோதரர்களால் உலகுக்கு அறிவிக்கப்பட்டபோது, சலனப்படங்களைப் புகைப்படங்களின் மேம்பட்ட வடிவமாகத்தான் பெரும்பாலானோர் பார்த்தார்கள். அது ஒரு பெரும் தொழிலாக மாறும் என்றோ, அதுதான் உலகையே ஆட்டி வைக்கப்போகிறது என்றோ பெரும்பாலானோர் கற்பனை செய்திருக்கவில்லை. மிகச் சிலர் சினிமாவைக்'கலையாகவும் தொழிலாகவும்'அறிந்துகொண்டனர். அந்த மிகச் சிலரில் சாமிக்கண்ணு வின்சன்ட்டும் ஒருவர்.
அக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவை அனைத்தும் துண்டுப் படங்கள். அதாவது, மிகச் சில நிமிடங்களே ஓடக் கூடியவை. மூன்று நிமிடங்களுக்கு ஓடும் படம், ஏழு நிமிடங்கள் ஓடும் படம் என வகைகள். அப்படங்கள் அனைத்துமே ஒலி அற்றவை அல்லது மௌனப் படங்கள். ஊமைப் படங்கள் என்று பொதுவழக்கில் அழைக்கப்பட்டவை.
படங்களின் நீளமும் குறைவு, ஒலியும் இல்லை. அவை பெரும்பாலும் ஆவணப் படங்களின் மூல வடிவங்களாகவே இருந்தன.'லீவிங் தி ஃபேக்டரி'என்றொரு பிரபலமான படம். அதில் என்ன ஓடும்? ஒரு தொழிற்சாலையிலிருந்து பணி முடித்த தொழிலாளர்கள் வெளியேறும் காட்சி இருக்கும். அப்போதைய படப்பதிவுத் தொழில்நுட்பத்தின்படி, விநாடிக்குப் பொதுவாக 14 சட்டகங்கள் (frames) ஓடும். அதாவது, பாத்திரங்கள் குடுகுடுவென நடப்பார்கள், வெடுக்கெனப் பேசுவார்கள், சீமாட்டி நாயைப் பிடித்து மின்னல் வேகத்தில் நடப்பாள். இப்போது நாம் காணும் இயல்பான வேகம் 24 சட்டகங்களில் பதிவுசெய்யப்படுகிறது.
இவ்வளவு குறைபாடுகளுடன் சினிமா இருந்த காலம் அது.
சாமிக்கண்ணு எப்படித்தான் இவ்வளவு சிக்கல்களையும் கடந்து சிந்தித்தாரோ புரியவில்லை. டூபான் என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்து, பதே எனும் புரொஜக்டரை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். அக்காலத்தில் அது பெருந்தொகை. உறவினர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த புரொஜக்டரை வாங்கினார். ஆனால், அதுதான் இன்றைய தென்னிந்திய சினிமாத் தொழிற்சாலையின் முதல் விதை.
சென்னை எஸ்ப்ளனேட் பகுதியில், முதன்முறையாகக் கொட்டகைத் திரையரங்கை அமைத்தார் வின்சன்ட். கொட்டகைக்குள் படம் காட்டலாம் எனச் சிந்தித்ததே சாதனைதான். ஏனெனில், சினிமா என்பது மேட்டுக்குடிகளின் கலையாக மட்டும் பார்க்கப்பட்ட காலம் அது. வார்விக்மேஜர் என்னும் ஆங்கிலேயர், சென்னையில் 1897-ல் முதல்முதலாகத் திரைப்படக் கலையை அறிமுகம் செய்தார். அவர் படம் ஓட்டிய இடம்'எலெக்ட்ரிக் தியேட்டர்' திரையரங்கம்.
அது செறிவாகக் கட்டப்பட்ட திரையரங்கம். மின்சாரத்தால் இயங்கும் அரங்கம். அதில் படம் பார்த்தவர்கள் எல்லோருமே துரைமார்கள்தான். வெள்ளையரும் பிற பணக்காரர்களுக்குமானதாகத்தான் சினிமா இருந்தது. அவர்களுக்குத்தான் அது புரியும் என்று நம்பப்பட்டது. அவர்கள் வந்து பார்க்கும் அளவுக்கான வசதியான இடத்தில்தான் திரையிட முடியும் என்றும் நம்பப்பட்டது.
மின்சாரமே அக்காலத்தில் ஓர் ஆடம்பரம் அல்லவா! அப்படியானால் சினிமா… எவ்வளவு பெரியது! சாமிக்கண்ணு, சினிமாவை மேட்டிலிருந்து பள்ளத்துக்குக் கொண்டுசென்றார். எளிய மக்களும் சினிமாவை நேசிப்பார்கள் என அவ்வளவு மோசமான காலத்திலும் அவர் நம்பினார். 1908 வரை, பெரும்பாடுகள். கடன் மேல் கடன். நீண்ட காலம் வெளியூர்களில் தங்கி இருந்தபோது, மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. வின்சன்ட் ஊர் திரும்பிய சில நாட்களில் மனைவி இறந்துபோனார் இப்படி எவ்வளவோ துன்பங்களுக்கிடையில், சினிமாவை ஒரு தொழிலாக மாற்றிக்காட்டினார் சாமிக்கண்ணு.
தமிழகத்தின் முதல் திரையரங்கம்'கெயிட்டி' சென்னையில் 1913-ல் கட்டப்பட்டது. இரண்டாம் அரங்கத்தைக் கோவையில் வின்சன்ட்தான் 1914-ல் கட்டினார். பெயர்'வெரைட்டி ஹால்'. இப்போதும் அந்த அரங்கம் இயங்குகிறது. பெயர் மட்டும்'டிலைட் தியேட்டர்'என மாற்றப்பட்டுவிட்டது, உரிமையாளர்கள் மாறியதால். ஆனாலும், அந்த அரங்கம் இருக்கும் வீதியின் பெயர் இப்போதும் கோவையில் வெரைட்டி ஹால் வீதிதான்.
ஆனால், இப்போது நடக்கும் திரை விழாவில், 1914-ல் தொடங்கப்பட்ட'டிலைட் தியேட்டர்' உரிமையாளர் என்ற வகையில் ஜோகர் என்பவருக்கு விருது வழங்கியுள்ளார் தமிழக முதல்வர். ஜோகர் குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்,'வெரைட்டி ஹால்' திரையரங்கை வாங்கியவர்களே தவிர, நிறுவியவர்கள் அல்லர். முறையாக, சாமிக்கண்ணு வின்சன்ட் குடும்பத்தினருக்கு அவ்விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு முன்னோடியின் வரலாறு நம் கண் முன்னே மாற்றப்படுகிறது. இது அறியாமையினால்கூட நிகழ்ந்திருக்கலாம். முதல்வர் இதில் தனிக்கவனம் கொண்டு, இந்தத் தவற்றைச் சரிசெய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்தின் முதல் திரைப்பட இயக்குநர் நடராஜ முதலியார். 1916-ல், அவர் இயக்கிய படம்'கீசகவதம்'. அவரது புகைப்படம் ஒன்றே ஒன்று மட்டுமே இப்போது உள்ளது. தமிழ்த் திரைப்படத்தைத்'தொழிலாக'மட்டுமே பார்ப்போருக்கு அவரைத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
உண்மையில், 2016தான் தமிழ்த் திரையுலகின் நூற்றாண்டு. இப்போது கொண்டாடப்படுவதைக் காட்டிலும் சிறப்பாகவும், பயன்மிக்க வகையிலும் 2016 கொண்டாடப்பட வேண்டும். பால்கே ஒரு சாதனையாளர்தான். தமிழகத்தில் திரைக்கலை வளர்த்தவர்களும் சாதனையாளர்கள்தான் என்ற உணர்வு தேவை அல்லவா?
உண்மையான தமிழ்த் திரையுலக முன்னோடிகளின் வரலாற்றைத் தேடுவதும், அவர்களின் சாதனைகளை முன்வைத்து 2016-ல் தமிழ்த் திரையுலக நூற்றாண்டைக் கொண்டாடுவதும் தமிழக அரசின், தமிழ்த் திரையுலகின் கடமை!
ம.செந்தமிழன், திரைப்பட இயக்குநர் - தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com