

இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதில் நேருவுக்குத் துணைநின்றவர் படேல்
சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்களாக காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் நால்வரின் மதச் சார்பின்மைகுறித்து யாரும் பெரிய கேள்விகள் ஏதும் எழுப்பியதில்லை. ஆனால், சர்தார் படேலைப் பொறுத்தவரையில் அவர் இஸ்லாமியருக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு மறுபடியும் மறுபடியும் வைக்கப்படுகிறது. இன்றைய இந்துத்துவவாதிகள் அவரை உயர்த்திப் பிடிப்பதாலேயே படேல் இந்துத்துவவாதி என்று அடையாளம் காட்டப்படுகிறார்.
நமது அரசியல் சாசனத்தை அமைப்பதற்காகக் கூட்டப்பட்ட அவையில், படேல் இவ்வாறு பேசினார்: “இன்றைய மாறிய சூழ்நிலையில், மதச்சார்பற்ற நாட்டுக்கு உறுதியான அடித்தளம் அமைப்பதே நாட்டின் எல்லா மக்களுக்கும் நன்மை தரும் என்று சிறுபான்மையினர் உண்மையாகவே நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் பெரும்பான்மையினர் நேர்மையில் நம்பிக்கை வைக்க வேண்டும். பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரின் நிலைமை என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் அவர்களை இன்று நடத்துகிற விதத்தில், நாமும் - ஒரு வேளை சிறு பான்மையராக இருக்கும் பட்சத்தில் - நடத்தப்பட்டால் நாம் எவ்வாறு உணர்வோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எது எப்படி இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையில், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடே இல்லாமல், இந்தியர் அனைவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்ற நிலைமை ஏற்படுவதே நமக்கு நன்மையைத் தரும்.’’ இது இந்துத்துவத்தின் குரலா?
காந்தியின் கடிதம்
சுதந்திரம் கிடைத்த முதல் ஆண்டுகளில் நாட்டுக்கு மதவெறிப் பேய் பிடித்திருந்தபோது, நேருவோடு தோளொடு தோள் நின்று மதச்சார்பின்மை மடியாமல் பார்த்துக்கொண்டிருந்தவர் படேல்.
23 ஜனவரி 1948-ல் காந்தி எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்: ‘எனக்கு ஜுனாகத் இஸ்லாமியர் களிடமிருந்து ஒரு நீண்ட, ஆனால் நல்ல தந்தி வந்திருக்கிறது. (ஜுனாகத் சமஸ்தானம் இந்தியாவோடு அப்போதுதான் இணைந்திருந்தது. அதன் நவாப் ஜுனாகத்தை பாகிஸ்தானுடன் முதலில் இணைத்தாலும், மக்கள் எழுச்சியினால், அது மாற்றப்பட்டது.) சர்தார் ஆட்சியைக் கையில் எடுத்து, கமிஷனரை நியமித்த பிறகு நாங்கள் நீதியோடும் நேர்மையோடும் நடத்தப்படுகிறோம். இந்துக்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்தப் பிளவையும் ஏற்படுத்த முடியாது.”
நேருவுக்கும் படேலுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தப் பலர் முயன்றனர். ஆனால், காந்தியின் மறைவுக்குப் பின்னால் இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவரால் இயங்க முடியாது என்பதை முழுவதுமாக உணர்ந்து நடந்துகொண்டனர்.
பஷீர் அகமது
சென்னை ஆழ்வார்பேட்டையில் பாஷியம் பஷீர் அகமது தெரு என்ற தெரு ஒன்று இருக்கிறது. இருவரும் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பட்டியலில் முதலிடங்களைப் பெற்றவர்கள். பஷீர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர். சென்னை இசை மன்றத்தின் (மியூசிக் அகாடமி) நிர்வாகக் குழுவில் அங்கத்தினராக இருந்து, இன்று அகாடமி இருக்கும் இடத்தை வாங்க வைத்தவர்.
இவரை சென்னை நீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய இந்திய அரசு 1950-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. ஆனால், அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கானியா அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. நேருவுக்கு ஒரே கோபம். அவர் படேலுக்கு எழுதிய கடிதத்தில் இது போன்று இயங்குபவர் தலைமை நீதிபதியாக இருக்கத் தகுதியானவர்தானா என்ற கேள்வியை எழுப்பினார். “நான் ராஜாஜியுடன் (அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்தார்) கலந்தாலோசனை செய்தேன். அவர் என்னுடன் உடன்படுகிறார். எனவே, நாம் கானியாவைப் பதவியிலிருந்து விலகச் சொல்ல வேண்டும்” என்றார் நேரு.
படேல் மிகுந்த திறமையுடன் இந்தப் பிரச்சினையைக் கையாண்டார். உடனே, அன்றைய உள்துறைச் செய லாளரை அழைத்து, பஷீர் அகமதை சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசராக நியமித்து ஆணை பிறப்பிக்கச் செய்தார். கானியாவைத் தொலைபேசியில் அழைத்து இந்த விவகாரத்தில் அவர் நடந்துகொண்டது தவறு, அவரது முடிவு முழுக்க முழுக்க மத அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற ஐயத்தை உருவாக்கும் என்று சொன்னார். நேருவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் ‘சமயங்களில் நீதிபதிகள், அவர்களால் மட்டும்தான் நீதித் துறையின் புனிதத்தைப் பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘ஆனால், நாம் பதவி விலகச் சொல்லிக் கேட்பதனால் கானியா பதவி விலகுவார் என்ற கட்டாயம் இல்லை. அவர் பதவி விலக மாட்டேன் என்று சொன்னால் நம்மால் ஏதும் செய்ய முடியாது. எனவே, இதை இப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது’ என்றும் படேல் எழுதினார்!
மதத்தைப் பரப்புவது
நமது அரசியல் சட்டத்தின் 25-ம் பிரிவு இந்தியக் குடிமகனுக்கு எந்த மதத்தையும் பின்பற்றவும், அதன் சடங்குகளை நடத்தவும், எல்லாவற்றுக்கும் மேலாக மதத்தைப் பரப்பவும் உரிமை அளிக்கிறது. அரசியல் சட்டம் உருவான வேளையில், அதில் மதப் பிரச்சாரத்தை அனுமதிக்கப் பலர் கடுமையான எதிர்ப்பைத் தெரி வித்தனர். முன்ஷி, புருஷோத்தமதாஸ் டாண்டன் போன்றவர்கள் - சர்தாருக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் - எதிர்ப்பவர்களின் முன்னணியில் நின்றார்கள். படேல் சிறுபான்மையினர் மற்றும் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் குழுவின் தலைவராக இருந்ததால் அவர் மதத்தைப் பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று நினைத்தனர்.
சிலர் நேருவிடம் சென்று, ‘‘மதத்தைப் பரப்புவது எங்களது அடிப்படை உரிமை. அதை நிச்சயம் அனுமதிக்க வேண்டும்’’ என்றனர். நேரு, ‘‘நான் மதநம்பிக்கை இல்லாதவன், அதனால் மதத்தைப் பரப்புவதால் என்ன நன்மை ஏற்படும் என்பதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது’’ என்றார்! “நீங்கள் சர்தாரிடம் செல்லுங்கள், அவர் நல்ல முடிவை எடுப்பார்” என்றும் அவர் சொன்னார்.
படேல் அவர்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டார். ‘‘யோசிக்கிறேன், எனக்குச் சரியென்று பட்டால் நிச்சயம் உதவுகிறேன்’’ என்றார். சிறுபான்மையினரின் கோரிக்கை அவருக்குச் சரியென்று பட்டதால், பலத்த எதிர்ப்புக்கு இடையில், மதத்தைப் பரப்பும் உரிமையை அவர் பெற்றுத்தந்தார். அது மட்டுமல்ல, மொழிகளைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அமைத்து, நடத்திக்கொள்ளும் உரிமையும் அவரது முயற்சியால்தான் பெற முடிந்தது.
பாபர் மசூதி
படேல் அன்றைய ஐக்கிய மாகாணத்தின் முதலமைச் சராக இருந்த கோவிந்த வல்லப பந்துக்கு 9 ஜனவரி 1950-ல் ஒரு கடிதம் எழுதினார். மசூதியில் ராமர் சிலை நிறுவப்பட்டு அயோத்தி பதற்றத்தில் இருந்த சமயம் அது. கடிதத்திலிருந்து சில வரிகள்:
‘இந்தப் பிரச்சினையை, இரண்டு சமூகத்தினரும் சுமுகமாக, சகிப்புத்தன்மையுடன், நாம் ஒருவரை ஒருவர் மதிப்பவர்கள் என்ற எண்ணத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும்… இஸ்லாமியர் சம்மதத்தோடுதான் அமைதி யான தீர்வு காண முடியும். வன்முறையால் தீர்க்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை.’
ஆன்மாவை அழிக்கும் எண்ணம்
1949-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தெளி வாகச் சொன்னார்: “இந்து நாடு என்பது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. இந்தியர்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அந்த எண்ணமே இந்தியாவின் ஆன்மாவை அழித்துவிடும்.”
இவரையா நாம் இஸ்லாமியரின் எதிரி என்கிறோம்?
- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com