Last Updated : 05 Nov, 2013 10:20 AM

 

Published : 05 Nov 2013 10:20 AM
Last Updated : 05 Nov 2013 10:20 AM

சிவவாக்கியர் விதிகள் உண்டா?

என்னுடைய ‘மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்’ (‘தி இந்து’ அக்.29) கட்டுரைக்கு மருத்துவர் கு.சிவராமன் எழுதிய ‘அறிவியல் அடிப்படையற்றதா பாரம்பரிய மருத்துவம்?’ எதிர்வினை கட்டுரையைப் படித்தேன்.

எனது கட்டுரையில், பாரம்பரிய மருந்துகள் இன்றைய அறிவியலின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காதவை என்று எங்கே கூறியிருக்கிறேன்? என்னுடைய எந்தத் தரவு தவறானது?

சிவராமன் தனது கட்டுரையில் எனது அறியாமையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் நான் என்னைப் பற்றிக் கூறிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் சி.எஸ் ஐ.ஆர். நிறுவனத்தில், புகழ்பெற்ற விஞ்ஞானியான மஷேல்கரிடம் நேரடியாக தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக ஐந்து வருடங்கள் வேலை பார்த்தவன். சென்னையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தவன். இன்றும் அதன் இயக்குநர்களில் ஒருவன். உலகத்தின் மிகப் பெரிய காப்புரிமை நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குநராக இருந்தவன்.

நான் யாராக இருந்தாலும், திருவள்ளுவரை மேற்கோள் காட்டும் நண்பர் ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’என்ற குறளை மறந்துவிட்டார் என எண்ணுகிறேன்.

அஸ்வகந்தாவை அடிப்படையாகக் கொண்ட உருப்படியான ஒரு மருந்துகூட இன்றுவரை வரவில்லை என்று எழுதியதற்குப் பதில் சொல்லும் விதத்தில் துணைமருந்து ஒன்றுக்கு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். இதற்கு மட்டுமல்ல, அஸ்வகந்தா சார்ந்த மற்றொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை பெற்றால், அது அங்கீகாரம் பெற்ற மருந்து என்ற பொருள் அல்ல. அந்த நிலையை அடைவதற்கு இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டும். அமெரிக்க எஃப்.டி.ஐ. அங்கீகாரம் பெற்ற பிறகுதான் இந்தக் கண்டுபிடிப்பு, துணை மருந்தாக அமெரிக்காவில் செயல்பட முடியும். காப்புரிமை பெற்ற ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில் ஓரிரண்டுதான் கடைசிப் படியைத் தாண்டுகின்றன என்பதையும் ஆய்வுக் கட்டுரைகளில் எழுதப்பட்டவை மருந்துகளாக உடனடியாக மாற்றம் பெற முடியாது என்பதையும் நண்பர் அறிவார் என்று நம்புகிறேன்.

ஆயுஷ் துறை பாரம்பரிய மருத்துவம்பற்றிய மருந்துப் பரிசோதனைகள் (clinical trials) எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த வழிகாட்டி மேற்கத்திய மருத்துவ முறை கடைப்பிடிக்கும் சோதனை முறைகளைச் சார்ந்தது. ஆனால், இந்தச் சோதனை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று வழிகாட்டியே சொல்கிறது. “இந்தச் சோதனை முறைகள் செலவை அதிகரிக்கும், நடைமுறைக்கு ஒவ்வாது” என்று 2012-லேயே ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கூறியிருக்கிறார். எனவே, இப்போது இருக்கும் மருந்துகளை எந்தச் சோதனைகளுக்கும் அவற்றைத் தயாரிப்பவர்கள் உட்படுத்தத் தயாராக இல்லை என்பது தெளிவு.

ஆய்வுகள் நடக்கின்றன என்பது உண்மை. நடக்கவில்லை என்று நான் எங்கே எழுதியிருக்கிறேன்? இதுவரை பாரம்பரிய மருந்துகள் சோதனைகளைக் கடந்து வரவில்லை என்றுதான் எழுதியிருக்கிறேன். கடந்து வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

ஜினோபார்மசுடிக்ஸ் என்ற துறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஃபார்மகோஜினாமிக்ஸ் இருக்கிறது. பாரம்பரிய மருத்துவத்துக்கும் இந்தத் துறைக்கும் முடிச்சிட்டுப் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு எமது முன்னோர்கள் மரபணுக்களைப் பற்றி அன்றே அறிந்திருந்தனர் என்று சொல்வது அறிவார்ந்த கூற்றாக ஆகாது.

வள்ளுவர் தமிழகத்தின் தனிப்பெரும் சொத்து. ஆனால், அவரை அறிவியல் அறிஞர் என்று அறிவியலைப் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள்தான் சொல்லுவார்கள். பார்த்ததைச் சொல்வது மட்டும் அறிவியல் ஆகாது. சிவவாக்கியர் சொன்னதையும் நியூட்டன் சொன்னதையும் சொல்ல அறிவியல் ஞானம் தேவையில்லை. நியூட்டன் அறிவியல் மேதை என்று அறியப்படும் காரணம், அவன் தனது கூற்றை அடிப்படையாக வைத்து பிரபஞ்சம் தழுவிய விதிகளைத் தந்ததுதான். நியூட்டனின் விதிகள் இருக்கின்றன. சிவவாக்கியர் விதிகள் என்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.ஒருவேளை சிவராமன் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

பி.ஏ. கிருஷ்ணன் - தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x