

நாடகம் பார்த்த நினைவுகள் சுவாரஸ்யமானவை. திருவிழா காலங்களில், விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில், மணல் பரப்பில், அமர்ந்தும் படுத்துக்கொண்டும் நாடகம் கண்டுகளித்த நாட்கள் அவை. அதேபோல நாடகம் நடத்தியவர்களின் அனுபவங்கள் சுவாரசியமும் வலிகளும் நிறைந்தவை.
ஒரு ஊரில் நாடகம் நடத்த வேண்டுமென்றால், முதலில் அந்த ஊருக்குச் சென்று தோதான ஓர் இடத்தைப் பார்க்க வேண்டும். அந்த இடம் ஊரை ஒட்டியிருந்தாலும், ஊருக்கும் அந்த இடத்துக்குச் சம்பந்தம் இல்லாமலும் இருக்க வேண்டும். அந்த இடத்தின் உரிமையாளருக்கு நாடகத்தில் கொஞ்சமேனும் ஈடுபாடு இருப்பது முக்கியம். என் அய்யாவும் ஒரு நாடகக் கலைஞர்தான். ராயல் ஷோ கொட்டகை என்ற பெயரில் நாடகம் நடத்திவந்தவர்.
நாடகத்துக்கான இடத்தைத் தேர்வுசெய்து கொட்டகை யெல்லாம் போட்டு முடித்த பிறகு என்ன நாடகம் போட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். மதுரையில் பிரபலமாக இருக்கும் நாடக நடிகர்களை அழைக்க வேண்டும். முன்பணம் கொடுத்துவிட்டு இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்து அழைத்துவர வேண்டிய அளவுக் கெல்லாம் புகழ்பெற்ற நாடக நடிகர்கள் அப்போது இருந்தார்கள்.
முன்பணத்தின் முக்கியத்துவம்
பெரும்பாலான சமயங்களில் நடிகர்களின் வீட்டுப் பெண்களிடம் முன்பணத்தைக் கொடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. ஏனெனில், நடிகர்களின் குடும்பங்களும் இந்த முன்பணத்தை நம்பித்தான் இருந்தன. பல நடிகர்கள் நாடகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஒன்றிரண்டு மாதங்கள்கூட ஆகும். அதுவரை நடிகர் களின் குடும்பத்தினரின் செலவுகளுக்கு இந்தப் பணம் பேருதவியாக இருக்கும்.
பல நடிகர்கள் நாடகம் முடிந்து போகும்போது வெறும் கையுடன்தான் போவார்கள். காரணம், நடிக்க வந்த ஊரில், உடன் நடிக்கும் பெண்ணையோ அல்லது புதிதாக ஒரு பெண்ணையோ ‘தோது’செய்துகொள்வார்கள். பல நேரங்களில் நாடகங்களைத் தொடர்ந்து பார்க்க வரும் அதீத ஆர்வமுடைய கிராமத்து இளம் பெண், நடிகனின் கவனத்தைக் கவர்ந்துவிடுவாள். நடிகன் வாங்கும் பணம் கரைந்துவிடும். அந்தக் காலத்தில் இது சகஜமான விஷயமாக இருந்தது.
எல்லா நாடகமும் நன்றாக நடந்து பணத்தை வாரிக் குவித்துவிடும் என்று சொல்ல முடியாது. பாதி நாடகங்களைப் பார்ப்பதற்கு ஆட்கள் வர மாட்டார்கள். சரியான ஸ்திரீபார்ட்டுகள் நாடகத்தில் இல்லை என்றால் அவசரத்துக்கு ஒதுங்கக்கூட ஆண்கள் ஷோ கொட்டகைப் பக்கம் வர மாட்டார்கள். மொத்தப் பணத்தையும் முன் பணமாகக் கொடுத்துவிட்டு என்ன செய்வது? எனவே, அய்யாவிடம் வேலை பார்த்த கணக்குப்பிள்ளை எந்நேரமும் பதற்றத்துடனே இருப்பார்.
நாடக மேடையும் நகைகளும்
அதுமட்டுமில்லாமல் அவர்தான் பணம் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும். பணப் பிரச்சினையாகிவிட்டால், உடனே கணக்குப்பிள்ளையை எங்கள் ஊருக்கு அய்யா அனுப்பிவிடுவார். அவர் ஊரில் இருக்கும் எங்கள் அப்பத்தாவைச் சந்தித்து, மிச்சமிருக்கும் நகைகளை அடகுவைத்து பணத்தை அய்யாவிடம் அவர் தர வேண்டும். எனது அப்பத்தா வாய் பேசாத அப்பிராணி. கோபத்தில் கொந்தளிக்கும் பெண்ணைவிட, துயரத்தை வெளிப்படுத் தாமல் அமைதி காக்கும் பெண்தான் சமாளிக்க முடியாத வள். ஆணுக்கு மிகுந்த தர்மசங்கடத்தைத் தருபவள்.
வணிக உத்திகள்
ஆட்களை நாடகத்துக்கு வரவைக்க நிறைய உத்திகளை அந்தக் காலத்தில் கைவசம் வைத்திருந்தார்கள். நாடகத் துக்கு முன்பாக மொச்சைக் கொட்டை விளையாட்டு என ஒரு விளையாட்டை நடத்தினார்கள். ஏறக்குறைய அது இன்றைய சூதாட்டம்தான். நான்கு அடி நீளமும் இரண்டு அடி அகலமும் உள்ள மரப்பலகை சுவரில் மாட்டப்
பட்டிருக்கும். அதில் தீப்பெட்டி அளவில் பல கட்டங்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். சூதாடி அதில் ஏதாவது ஒரு நிறத்தின்மேல் கையிலிருந்து வீசும் சிறு அம்பை அடிக்க வேண்டும். நாடகக் கொட்டகை ஆள் சொல்லும் நிறத்தின் கட்டத்தில் குறிபார்த்துச் சரியாக அடித்தால், அவன் கட்டிய தொகையைவிட ஒரு மடங்கு அதிகம் கிடைக்கும். தப்பான கட்டத்தில் அம்பு பட்டால் அவன் கொடுத்த காசு ‘கம்பெனிக்கு’.
நொடித்துப்போயிருந்த ஒரு சமயத்தில் அய்யாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டொரு நாட்கள் விளையாட்டு, நாடகம் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு அக்கம்பக்கம் ஊர்களில் சுற்றினார். அப்போது ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் பிரபலமாக இருப்பதைக் கேள்விப் பட்டு, அந்த நாடகம் போட ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது எம்.ஆர். ராதாவுக்குக் கொடுத்த தொகை ரூ.5,000 என்று சொல்வார்கள். 1950-களில் அது மிகவும் அதிகமான தொகை.
திமிராக இருந்தால் தப்பிக்கலாம்
கோயம்புத்தூரில் புகழ்பெற்றிருந்த ஒரு நாடக நடிகையை வைத்து நாடகம் போடலாம் என்று முயற்சி செய்திருக்கிறார் அய்யா. வெளியூர் பெண்களை வைத்து நாடகம் போடுவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தும், அய்யா துணிந்து அந்த நடிகையையும் அவர் அத்தையையும் கோவைக்குச் சென்று அழைத்து வந்திருக்கிறார்.
நடிகையின் அத்தைக்கே முப்பது முப்பத்தைந்து வயது தான் இருக்கும். நடிகைக்கு 18 வயதுதான் இருக்கும். அப்போது சினிமாவிலும் தலை காட்ட ஆரம்பித்திருந்தார் அந்தப் பெண். அதனால் அவர் அத்தை ‘ராயல் ஷோ’ கொட்டகையில் நடிக்க ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்தாராம். முழுப் பணத்தையும் முன்பணமாகக் கொடுத்திருந்தாலும், “வீண் தொந்தரவு ஏதாவது இருந்தால், தானும் தன் மருமகளும் எப்போது வேண்டுமானாலும் கிளம்பி வந்துவிடுவோம்” என்று சொல்லித்தான் அவர்கள் அருப்புக்கோட்டைக்கு வந்திருந்தார்கள்.
தொடர்ந்து நஷ்டங்களைச் சந்தித்துவந்த அய்யாவின் ‘ராயல் ஷோ’ கொட்டகை அந்த இளம் பெண்ணின் வருகை யால் முதன்முதலில் அமோக வசூலைச் சந்தித்தது. பத்தே நாட்களில் அய்யா அடமானத்தில் இருந்த அப்பத்தாவின் நகைகளையும், பல அடமான நிலங்களையும் மீட்டெடுத்தார்.
எனினும், பெண்கள் இருவரும் திமிராக நடந்துகொண்டது அய்யாவை உறுத்தியிருக்கிறது. இதுபற்றிக் கேட்டபோது நடிகையின் அத்தை சொன்னாராம், “உங்களுக்குத் தெரியாததா அய்யா? நடிகை என்றால் அவள் நடிப்பைப் பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறார்களா? பணபலத்தைக் கொண்டு எங்களை வீழ்த்தப்பார்க்கும் நபர்களிடமிருந்து எங்களைக் காத்துக்கொள்ள வேறு என்ன வழி இருக்கிறது?”
- முனைவர் மு. ராஜேந்திரன் இஆப, ‘சோழர் காலச் செப்பேடுகள்’ என்ற நூலின் ஆசிரியர்.