Last Updated : 15 Oct, 2013 10:18 AM

Published : 15 Oct 2013 10:18 AM
Last Updated : 15 Oct 2013 10:18 AM

திருவிழாக்களை மீட்டெடுப்போம்

என்னுடைய சொந்த ஊர் அருகே உள்ள இட்டகவேலி முடிப்புரை அம்மன் தூக்கத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு நாட்டார் தெய்வம். குழந்தைகளுக்கான ஒரு வகை வேண்டுதல் அங்கே நிறைவேற்றப்படும். வருடத்துக்கு ஒரு முறை 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழா, வட்டாரத்தின் முக்கியமான கலாச்சார நிகழ்ச்சி.

நான் சிறுவனாக இருந்த நாட்களில் 10 நாட்களும் அங்கே கூட்டம் நெரியும். விதவிதமான கடைகள், குட்டிக்குட்டி வேடிக்கைக் காட்சிகள், தின்பண்டங்கள்... மாலையில் தொடங்கி இரவு முழுக்கக் கலைநிகழ்ச்சிகள் இருக்கும். நாங்கள் எல்லாம் 10 நாட்களும் வீட்டுக்கே வருவதில்லை. நூற்றுக்கணக்கான பையன்கள் கோயிலிலேயே சாப்பிட்டு, இரவெல்லாம் நிகழ்ச்சிகளைப் பார்த்து, பகல் முழுக்கச் சுற்றுவட்டாரத் தோப்புகளில் தூங்கி, என்ன… ஏது என்றறியாத ஒரு பெரும் போதையில் 10 நாட்களையும் கழிப்போம். திருவிழா முடிந்த பின் நான்கு நாட்களுக்கு அந்தப் பித்து நீடிக்கும்.

30 வருடங்கள் கழித்து அந்தத் திருவிழாவைப் பார்த்தேன். வேண்டுதலுக்காக வந்த சில நூறு பேர் மட்டும்தான். காலையில் ஆரம்பித்த தூக்கச் சடங்கு மாலைக்குள் முடிந்துவிட்டது. அமைப்பாளரிடம் “கலை நிகழ்ச்சிகள் இல்லையா?” என்று கேட்டேன். “இல்லை, கலை நிகழ்ச்சிகளை எல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டோம்” என்றார். “கூட்டமே வருவதில்லை சார். கடைசியாக ஒரு கதைப் பிரசங்க நிகழ்ச்சி. பார்வையாளர்களே இல்லை. கதை சொல்ல வந்தவர், ‘என்னை அவமதிக்காதீர்கள், காசைத் திருப்பித் தந்துவிடுகிறேன்’என்று சொன்னார். மிகப் பெரிய கலைஞர் அவர். அவரது சம்பளத்தைக் கொடுத்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்தோம். அதன் பின் நிகழ்ச்சிகள் தேவையில்லை என்று முடிவெடுத்தோம்” என்றார்.

சில வருடங்களுக்கு முன் நாஞ்சில்நாடன் சுசீந்திரம் தேரோட்டம் பார்க்க எங்களைக் கூட்டிச் சென்றார். அவரது வெளியூர் வாசகர்கள் பலர் வந்திருந்தனர். சுசீந்திரம் தேரோட்டம் நாஞ்சில்நாடன் கதைகளில் மிக விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. விடிய விடிய திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை நாகஸ்வரம் வாசிப்பது, சதிராட்டம், கரகாட்டம், வாணவேடிக்கைகள் என நாஞ்சில் அற்புதமாக எழுதியிருப்பார். நாங்கள் காலை எட்டரை மணிக்குச் சென்றோம். தேர் அதிகாலையிலேயே தயாராகிவிடும் என்றும் அதை இழுக்கப் பல்லாயிரம் பேர் தேவை என்பதனால், கூட்டம் சேரும் வரை முரசறைவார்கள் என்றும் நாஞ்சில் சொன்னார். ஒருகாலத்தில், தேர் நிலைக்குச் செல்ல 10 நாட்கள்கூட ஆகுமாம். நாங்கள் சென்றபோது தேரோடும் வீதியில் எவருமே இல்லை. 50 பேர் அதை சம்பிரதாயமாக இழுக்க, டிராக்டர் வைத்துச் சரசரவென இழுத்து அரை மணி நேரத்தில் நிலைசேர்த்துவிட்டார்கள். ‘திருவிழா’முடிந்துவிட்டது. ஊரில் இருந்து எவரும் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொள்ளவில்லை. பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, உள்ளே பெண்கள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். தேர் கடந்து செல்லும்போது ஜன்னல் வழியாகக் கும்பிட்டுக்கொண்டார்கள். நாஞ்சில்நாடனுக்கு அழுகையே வந்துவிட்டது.

தமிழகத்தின் பெரும் திருவிழாக்கள் எல்லாமே இந்நிலையை அடைந்துகொண்டிருக்கின்றன. மத நம்பிக்கை வலுவிழந்ததனால் இப்படி நிகழவில்லை. ஏனென்றால், பல்வேறு உலகியல் லாபங்களை அளிப்பதாகச் சொல்லப்படும் கோயில்களில் கூட்டம் தினமும் அலைமோதுகிறது. பரிகாரத் தலங்களில் வியாபாரங்கள் கோடிகளில் நிகழ்கின்றன. ஜோதிடர்கள்தான் இன்று மதத்துக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். மக்கள் மதத்தைப் புரிந்துகொண்டிருக்கும் விதம் மாறிவிட்டது.

மதம் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. ஆன்மிகம் அதன் முதல் அடுக்கு.

ஞானத்தை, வாழ்க்கையின் முழுமையை அறிந்து அடைவதுதான் ஆன்மிகம். ஞான நூல்களும் அவற்றைக் கற்பிக்கும் குருநாதர்களும் ஞான வடிவான மெய்ஞானிகளும் அடங்கியது அது. அதற்குக் கீழே பண்பாடு உள்ளது. நம் மரபின் நல்ல இசை, நல்ல கலைகள், நல்ல இலக்கியம், நல்ல சாப்பாடு, நல்ல கொண்டாட்டங்கள் அனைத்துமே மதம் என்ற அமைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. கோயில்களில்தான் அவை இன்று உள்ளன. அதற்கும் அடுத்தபடிதான் உலகியல். தெய்வங்களும் கோயிலும் நம் உலகியல் கவலைகளைத் தாண்டிச் செல்வதற்கான ஆற்றலை அளிக்க வேண்டும்தான். கடவுளிடம் வாழ்க்கைக்காக வேண்டிக்கொள்வது முற்றிலும் சரியானதே. அதற்கான வழிபாடுகள், பூசைகள், சடங்குகள் எல்லாமே மதத்தின் அம்சங்கள்தான். ஆனால், நாம் இந்த மூன்றாவது அம்சத்தை மட்டுமே மதம் என்று நினைக்கிறோம். கோயிலை அதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்.

திருவிழாக்கள் என்பவை கோயில்களின் உச்சகட்டக் கொண்டாட்டங்கள். இந்தியா வெவ்வேறு வகையான மக்கள் கலந்து வாழும் பூமி. மாபெரும் திருவிழாக்கள் வழியாகவே மக்களை ஒருங்கிணைக்க முடிந்தது. கோயில்கள் அதற்கான மையங்கள். அங்கே பலவிதமான வழிபாட்டுமுறைகள் ஒன்றாகக் கலக்கும். பலவிதமான கலைகள் ஒன்றாக நிகழும். உயர் கலைகளைத் திருவிழாக்கள் கோடிக்கணக்கானவர்களுக்கு எளிதில் அறிமுகம் செய்துவிடுகின்றன. பத்தாயிரம் பேர் கூடி அமர்ந்து மதுரை சோமுவின் கச்சேரியைக் கேட்பதை நான் இளமையில் சுசீந்திரத்தில் கண்டிருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் எளிய விவசாயிகள்.

தமிழகத்தின் உயர் கலையான நாகஸ்வரக் கலை திருவிழாவுக்கே உரியது. நாட்டார் கலைகளின் சங்கமத் தளமும் திருவிழாக்கள்தான். திருவிழாக்கள் இல்லாவிட்டால் இவை எல்லாமே அழியும்.

திருவிழாக்கள் இல்லாமல் ஆகும்போது நம் சமூகத்தைக் கட்டி ஒன்றாக்கியிருக்கும் பண்பாட்டு இணைப்பு பலவீனமாகிறது. நூற்றாண்டுகளாகச் சோழ, பாண்டியர்களும் நாயக்க மன்னர்களும் உருவாக்கிய இணைப்பு அது. நாம் ஒவ்வொருவரும் நமது சிறிய சுயநல உலகில் நமது மூச்சை நாமே சுவாசித்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கிறோம். நவீன அலுவலகங்களைப் போல உள்ளது இன்றைய நமது சமூகம். பெரிய கூடத்தில் பல நூறுபேர் கூட்டமாக இருந்து வேலை பார்ப்பது ஒரே பார்வையில் தெரியும். ஆனால், ஒவ்வொருவரும் ஒரு கண்ணாடித் தடுப்புக்குள்தான் இருப்பார்கள்.

கேரளத்தில் 80-களில் இந்நிலை உருவானது. ஆனால், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் அரசும் விழித்துக்கொண்டார்கள். திருவிழாக்களின் பண்பாட்டு முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரியச்செய்தார்கள். அதில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணைந்தே செயல்பட்டனர். விளைவாக, கேரளத்தின் பெரும் திருவிழாக்கள் எல்லாமே புத்துயிர் பெற்றன. ஒருகட்டத்தில் கேரளத்தின் அடையாளமாகவே ஆயின அவ்விழாக்கள். அவற்றை அரசே சிறப்பாக ஒருங்கிணைத்தது. இன்று திரிச்சூர் பூரம் அல்லது ஆலுவா சிவராத்திரி என்பது ஒரு சர்வதேச விழாவுக்குச் சமம்.

தமிழகம் விழாக்களால் ஆனது. சிலப்பதிகாரக் காலம் முதலே பெருவிழாக்களே நம் அடையாளம். தமிழ்ப் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள தமிழகத்தின் திருவிழாக்களை மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x