Last Updated : 20 Dec, 2013 12:00 AM

 

Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

குற்றங்கள் நடுவே பிறந்த ஞானி

பிரெஞ்சு இலக்கியத்தின் ஞானி என்றும் கிரிமினல் என்றும் அழைக்கப்பட்ட ழான் ஜெனேவின் மாதம் இது. 1910-ம் ஆண்டு பாரிஸில் 21 வயது பாலியல் தொழிலாளி ஒருவருக்குப் பிறந்தார் ஜெனே. அவர் ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தாய் இறந்துபோனதால் அரசாங்கத்தின் அனாதை இல்லங்களில் வளர்ந்தார். அப்பா யார் என்று தெரியாது. அனாதை இல்லத்திலிருந்த சிசுவை ஒரு தச்சர் குடும்பம் தத்தெடுத்தது வேறு ஓர் ஊருக்கு எடுத்துச் சென்றது.

பூர்வ கதை

பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஜெனே, வெளியே எல்லா ‘கெட்ட பழக்கங்’களையும் கற்றிருந்தார். பள்ளிக்குச் சரியாகப் போகாமல் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டார். அப்போது அவருடைய வளர்ப்புத் தாயும் இறந்து போகவே வயதான மற்றொரு தம்பதியினர் ஜெனேவை வளர்க்கச் சம்மதித்தனர். ஆனால் அங்கே அவர் இரண்டு ஆண்டுகள்தான் தங்கினார். துஷ்டச் செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தன. பள்ளிக்குச் செல்லாமல் திருட்டு வேலைகளில் ஈடுபடுவதோடு இன்னொன்றும் சேர்ந்துகொண்டது. பெண் உடைகளை அணிந்துகொண்டு இரவுகளில் வெளியே சுற்ற ஆரம்பித்தார். ஒரு சமயம் வீட்டிலிருந்து பெரும் தொகையைத் திருடிக்கொண்டு ஓடியபோது போலீஸில் சிக்கி, சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஜெனேயின் வயது 15. இந்தச் சிறைதான் மிஷல் ஃபூக்கோ தன்னுடைய ‘டிசிப்ளின் அண்ட் பனிஷ்’ நூலில் சிறை பற்றி எழுத மேற்கொண்ட ஆய்வுக்கு முன்னுதாரணமாக விளங்கியது.

சிறை, ராணுவச் சேவை…

ஜெனேவின் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்தச் சிறையில் கழிந்தன. அந்தச் சிறுவர்கள் போருக்கு அனுப்பப்படுவதற்காகவே வளர்க்கப்பட்டார்கள் என்றாலும் ஜெனே தன்னளவில் மிகத் தீவிரமாகப் படித்துக்கொண்டே இருந்தார். தன்பாலின உறவு, திருட்டு போன்ற எல்லா சட்ட விரோத நடவடிக்கைகளுக்குமான பரிச்சயமும் அந்தச் சிறையில்தான் அவருக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு ஜெனே ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டார். மொராக்கோ, அல்ஜீரியா, சிரியா ஆகிய நாடுகளில் ஏழு ஆண்டுகள் ராணுவ சேவைசெய்தார். பிறகு அவரது தன்பாலின உறவு நடவடிக்கைகளால் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, பாலியல் தொழிலாளராகவும் பாலியல் தரகராகவும் சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டபடியும் போலி கடவுச்சீட்டுகளில் (பாஸ்போர்ட்டு) ஐரோப்பா முழுவதும் சுற்றி அலைந்தார்.

சிறைக் காகிதத்தில் இலக்கியம்

இப்படி அவர் சிறையில் இருந்தபோது கைதிகளிடம் காகிதப்பை செய்வதற்காகக் கொடுக்கப்படும் காகிதத்தில் ஜெனே ‘அவர் லேடி ஆஃப் தி ஃப்ளவர்ஸ்’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். எழுதிய ஆண்டு 1942. இதைப் பார்த்துவிட்ட சிறைக் காவலாளி ஜெனேயிடமிருந்த காகிதங்களை வாங்கிக் கிழித்து எறிந்துவிட்டார். அதனால் அந்த நாவலை மீண்டும் இரண்டாம் முறையாக அதே சிறையில் எழுதி முடித்தார். அந்த நாவல் ஆபாசம் என்று கருதப்பட்டதால் ரகசியமாகவே வாசிக்கப்பட்டது.

இதற்கிடையில் சிறையிலும் வெளியிலுமாகவே அவருடைய வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் அப்போது பிரான்ஸில் பிரபலமாக இருந்த ழான் காக்தோவின் நட்பு ஜெனேவுக்குக் கிடைத்தது. எல்லோரும் அவருடைய குற்றச் செயல்களைப் பற்றிப் பேசியபோது, அவருடைய எழுத்தில் தெரிந்த மிக உயர்வான இலக்கியத்தையும் மேதமையையும் பார்த்து வியந்தார் காக்தோ.

நம் காலத்தின் ரேம்போ

ஜெனேயின் நாவல் வெளியீட்டு விழா ஒன்றில் ஒரு சீமாட்டி ஜெனேவிடம், “எங்களுக்கு உங்கள் எழுத்து வேண்டும். அதனால் தயவுசெய்து உங்கள் தொழிலை (திருட்டு) தொடருங்கள்” என்று சொல்ல, தான் பிரபலமாகிவிட்டதால் தன் தொழிலைச் செய்ய முடியாமல் பிரச்சினையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். 1943-ல் ஒருமுறை ஜெனேயின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளால் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய நிலையில் காக்தோவே நீதிமன்றம் சென்று, “பிரெஞ்ச் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி ஜெனே; இவர் நம் காலத்தின் ரேம்போ” என்று சொல்லி, “ரேம்போவை எப்படி நாம் கைதுசெய்ய முடியும்?” என்று கேட்டார். (21 வயதிலேயே கவிதை எழுதுவதை நிறுத்திவிட்ட ஆர்தர் ரேம்போ பிரெஞ்சு மொழியின் கவிதைக் கடவுளாகக் கருதப்படுபவர். இதே கேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் ஷார்ல் து காலும் கேட்டார். அல்ஜீரியாவுக்கும் பிரான்ஸுக்கும் போர் நடந்துகொண்டிருந்தபோது ழான்-பால் சார்த்ர் அல்ஜீரியாவுக்குச் சாதகமாகப் பேசியபோது பிரான்ஸில் எல்லோரும் “தேசத் துரோகி சார்த்தரைக் கைதுசெய்யுங்கள்” என்று ஷார்ல் து காலிடம் சொன்னபோது அவர் சொன்னார்: “நமது ஆசானை நாம் எப்படிக் கைதுசெய்ய முடியும்?”)

பிறகு திரும்பவும் ஜெனே அடுக்கடுக்கான குற்றங்களைச் செய்ததால் 1949-ல் அவர்மீது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பாப்லோ பிகாஸோ, ழான்-பால் சார்த்ர், ஸிமோன் தி போவா போன்றவர்களுடன் காக்தோவும் சேர்ந்து பிரெஞ்சு அதிபருக்கு ஜெனேபற்றி எழுதினார். மிக முக்கியமான அந்த அறிவுஜீவிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஜெனேவின் மீதான எல்லா தண்டனைகளையும் ரத்துசெய்தார் அதிபர். அப்போது விடுதலையான ஜெனே அதன் பிறகு சிறைக்குச் செல்லவே இல்லை.

புனித ஜெனே

பிரெஞ்சு சமூகத்தின் அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்டாலும் அவரது எழுத்தில் இருந்த பாலியல் தன்மையால் சமூகத்தில் ஜெனே தீண்டத்தகாத ஒருவர் என்றே கருதப்பட்டார்; அவருடைய நூல்களும் ரகசியமாகவே விநியோகிக்கப்பட்டன.

அந்த நேரத்தில்தான் சார்த்ர் “ஜெனேயைத் திருடன் என்று அடையாளம் காணாதீர்கள்; அவர் ஒரு ஞானி” என்று ‘புனித ஜெனே’ (செய்ண்ட் ஜென) என்ற, ஜெனேவைப் பற்றிய பெரிய நூல் ஒன்றில் எழுதினார். ஆனால், ஜெனே அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பல ஆண்டுகள் எதுவுமே எழுதவில்லை. “சார்த்தர் என்னை நிர்வாணப்படுத்திவிட்டார். அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் படியைப் படித்ததும் அதை எரித்துவிடலாம் என்றே நினைத்தேன். ஆனால் அது இன்னொருவரின் படைப்பு என்பதால் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார் ஜெனே.

அரசியல் செயல்பாடுகள்

அதன் பிறகு ஜெனே, அரசியல் செயல் பாட்டாளராக மாறினார். அமெரிக்காவின் கரும் சிறுத்தைகளோடும் பலஸ்தினியப் போராளிகளோடும் மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டார். ஜோர்டானில் இருந்த பலஸ்தினிய அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தபோது யாசர் அரஃபாத்தைச் சந்தித்தார். ஒருமுறை பலஸ்தினிய அகதி முகாம்களில் 3000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது பேரூட்டில் இருந்த ஜெனே முகாமுக்கு வந்து பார்த்து அதுபற்றி ‘ஃபோர் அவர்ஸ் இன் ஷாடிலா’ என்ற சிறு நூலை எழுதினார்.

பின்னர் அவர் மொராக்கோவிலேயே வாழத் தொடங்கினார். அவர் தன் தாய்நாடான பிரான்ஸை வெறுத்தார். ஐரோப்பியச் சமூகம் தன்னைக் கலாச்சார ரீதியாகப் புரிந்துகொள்ளாமல் சிறையில் அடைத்துவிட்டது என்று அவர் கருதினார். ஏனென்றால், தன்பாலின உறவு பிரான்ஸில் அப்போது குற்றம். ஆனால், மொராக்கோ அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் வில்லியம் பரோஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் மொராக்கோவைத் தங்கள் புகலிடமாக அமைத்துக்கொண்டனர்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடும் குற்றமாகக் காணப்பட்ட தன்பாலின உறவு மொராக்கோவில் சட்டரீதியாகக் குற்றம் என்று இருந்தாலும் நடைமுறையில் சகித்துக் கொள்ளும் சமூகமாகவே அது இருந்தது. நீங்கள் ஏன் தன்பாலின உறவாளராக இருக்கிறீர்கள் என்று கேட்பது “உங்கள் கண் ஏன் பச்சையாக இருக்கிறது?” என்று கேட்பது போல் உள்ளது என்றார் ஜெனே ஒருமுறை. பலஸ்தினிய விடுதலை இயக்கம்கூட அவரைக் கவர்ந்ததற்கு ‘புலனின்ப ஈர்ப்பு’தான் (சென்ஷுவல் அட்ராக்‌ஷன்) காரணம் என்றார்.

இறுதிக் காலம்

1970-களிலிருந்து துவங்கி 1986-ல் அவர் இறக்கும்வரை அவர் பிரான்ஸில் வசிக்கவில்லை. மொராக்கோவில் ஒரு சில நெருங்கிய நண்பர்களோடும் ஒரு ஆண் காதலரோடும் அவர் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் – சுமார் இருபது ஆண்டுகளாக - அவர் எதுவும் எழுதவில்லை. 1983-ல் தன்னுடைய பலஸ்தினிய அனுபவங்களை ‘ப்ரிசனர் ஆஃப் லவ்’ என்ற புத்தகமாக எழுத ஆரம்பித்தார். 1986-ல் அந்தப் புத்தகத்தின் பிரதியைச் சரிபார்ப்பதற்காக பாரிஸ் போயிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.

ஜெனே தன் உடலை மொராக்கோவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்ததால் அவரது மொராக்கோ நண்பர்கள் அவரது உடலை மொராக்கோவுக்கு எடுத்துச் சென்றபோது சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைப் பார்த்து, “இது மொராக்கோ தொழிலாளியின் உடலா?” என்று கேட்டபோது அவர்கள் பெருமையுடன் “ஆமாம்” என்று சொன்னார்களாம். ஜெனேயின் உடல் வட அட்லாண்டிக் சமுத்திரக் கரையில் லராய்ச் என்ற ஊரின் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

சாரு நிவேதிதா, எழுத்தாளர், தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com, டிச. 19 (நேற்று) ஜெனே பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x