

உலகிலேயே அழகும், அமைதியும், ஏகாந்தமும் நிலவும் தோட்டங்களில் ஒன்றாக இது இருக்கக் கூடும். நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள் சூழ்ந்த, மலைப்பாங்கான சரிவுகளில், புதிர் சுற்றுகளைப் போலச் சுழலும் பாதைகள் நிறைந்த இடம் இது. உலகையே மாற்றிய அறிஞர்கள் இங்கே இறுதித் துயில் கொள்கிறார்கள். வடக்கு லண்டன் பகுதியில் 1839இல் திறக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இது. கிழக்கு, மேற்கு என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்தோட்டம் பாரம்பரிய இயற்கைப் பூங்காவாகவும் போற்றிப் பராமரிக்கப்படுகிறது.
இதன் கிழக்குப் பகுதியில்தான் உலக மக்களின் சிந்தனைப் போக்கையே மாற்றிய பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் துயில்கிறார். நாவலாசிரியர் ஜார்ஜ் எலியட், வெர்ஜினியா வுல்ஃபின் தந்தை விமர்சகர் லெஸ்லி ஸ்டீபன், விஞ்ஞானி மைக்கேல் பாரடே, சமீபத்தில் காலமான வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் போன்றவர்களின் கல்லறைகள் இங்குதான் உள்ளன.
மரணம் எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பார்க்க ஒருவர் நிச்சயம் ஹைகேட்டுக்கு வர வேண்டும். கோத்திக் பாணியில் அழகுற வடிவமைக்கப்பட்ட நினைவுக் கற்களும், சமாதிகளும் இந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றியிருக்கின்றன.
மரங்கள், குற்றுச் செடிகள், காட்டுப் பூக்கள் புதர்களாக அடந்திருக்கும் இப்பகுதி பறவைகள் மற்றும் நரி போன்ற சிறிய பிராணிகளின் இருப்பிடமாகவும் உள்ளது.
ஹைகேட் தோட்டத்தின் நாயகர் என்றால் அவர் கார்ல் மார்க்ஸ்தான். கார்ல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். பார்வைக்குக் கட்டணமும் உண்டு.
அழகிய பளிங்குப் பீடத்தின் மீது மார்க்சின் தாடியுள்ள பெரிய முகம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ்பெற்ற ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே மார்க்ஸ் சொன்ன இன்னொரு வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
“தத்துவவாதிகள் பல்வேறு விதங்களில் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்; என்றாலும், அதை மாற்றுவதுதான் முக்கியமான விஷயம்.”
பேதங்கள், அநீதிகள் அதிகமாகிவரும், மனித குலத்தின் விடுதலைக்கு சாத்தியங்கள் மீதம் இருக்கிறதா என்பதை இன்னும் யோசித்துக்கொண்டிருப்பதைப் போல, ஹைகேட் தோட்டத்தில் உள்ள கார்ல் மார்க்சின் உருவச் சிலை வீற்றிருக்கிறது.