Published : 23 Jun 2016 08:48 AM
Last Updated : 23 Jun 2016 08:48 AM

கச்சத்தீவுக்கு வழிகாட்டுமா செங்கடல்..?

எகிப்து உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய பகுதிகளை `தாரை வார்ப்பதில்’ ஒரு புது வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறது.

இது எந்த அளவுக்கு `நமக்கு' உதவும் என்பது, சட்ட வல்லுனர்களின் பார்வை, நீதிமன்ற அணுகுமுறையைப் பொறுத்தது. ஆனால் மிக நிச்சயமாக `குறிப்பிடப்பட வேண்டிய' ஒரு தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை.

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவுகள் `திரான்', மற்றும் `சமாபிர்'. தனது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட இவ்விரு பகுதிகளையும், எகிப்து அரசு, சவுதி அரேபியாவுக்கு `தாரை வார்த்து' கொடுத்தது. சவுதி மன்னர் சல்மான், கடந்த ஏப்ரல் மாதம், எகிப்துக்கு சென்றபோது, அந்நாட்டுக்கு ஏராளமான வர்த்தக, நிதிச் சலுகைகளை வாரி வழங்கினார். பதிலுக்கு எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிஸி, செங்கடல் தீவுகள் இரண்டும், சவுதிக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார்.

இவ்விரு தீவுகளும் `அகாபா வளைகுடா'வின் குறுகிய நுழைவாயிலில், எகிப்து, சவுதிக்கு இடையே, `சினாய்' தீபகற்பத்தில், ஜோர்டான், இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளன. இங்கு மனிதர்கள் வசிக்கவில்லை. ஆனால், மிக நிச்சயமாக, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தத் தீவுகளை சவுதிக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எகிப்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

“நாட்டின் அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக, அதிபர் சிஸி, பிரதமர் ஷெரிப் இஸ்மாயில், நாடாளுமன்ற சபாநாயகர் அலி அப்தல் அலி ஆகியோர் தவறுதலாக, இத்தீவுகளின் மீதான இறையாண்மையை விட்டுக் கொடுத்து விட்டனர்” என்று குரல்கள் எழும்பின.

'எகிப்திய எல்லைகளை மறு வரையறை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் தேவை’ என்கிற அரசமைப்புச் சட்ட விதி 151-ஐ சுட்டிக் காட்டி, முன்னாள் அதிபர் வேட்பாளர் கலீத் அலி தலைமையில், மனித உரிமை வழக் கறிஞர்கள், கெய்ரோவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுமட்டுமல்ல. `எல்லைகளை மாற்றி அமைக்க மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என்றும் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. `இந்தத் தீவுகள் சவுதிக்குச் சொந்தமானவை; இங்கே தேவையான பாதுகாப்பு வழங்குமாறு, சவுதி அரசு, 1950-ல் கேட்டுக் கொண்டது. அதன் பேரில், எகிப்திய துருப்புகள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன; அவ்வளவுதான்' என்று இரு நாட்டு அதிகார வட்டாரங்களும் கூறுகின்றன. ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை.

'தீவுகள் மீதான எகிப்தின் இறையாண்மை தொடர்கிறது; அதை வேறொரு நாட்டுக்கு மாற்ற முடியாது’ என்று, நீதிபதி யேஹியா அல்-டக்கோரி திட்டவட்டமான ஒரு தீர்ப்பினை நேற்று முன்தினம் வழங்கி இருக்கிறார். `தீர்ப்பை ஆராய்ந்து வருகிறோம். எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்' என்று, சட்ட - நாடாளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சர் மக்தி-அல்-அகதி தெரிவித்து விட்டார். ஆக, இந்தப் பிரசினை இன்னமும் நிறைவுக் கட்டத்தை எட்டவில்லை. சில நாட்களுக்குத் தொடரத்தான் செய்யும்.

போராட்டங்கள் தொடக்க நிலையில் இருந்த போது எகிப்திய அதிபர், `நான்காவது தலைமுறையினரின் போராட்டங்கள், எகிப்தியரின் கூட்டுத் தற்கொலை முயற்சி' என்று வர்ணித்தார்.

'எகிப்து - சவுதி அரேபியா இடையிலான சுமுக உறவுக்கு எதிராக ஊடகங்கள் கையாளும் மோசடி விளையாட்டு' என்பதுதான் அவரது நிலைப்பாடு. ஆனால் வழக்கை முன் நின்று நடத்திய வழக்கறிஞர்கள் மிக வலுவான ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள்.

'1906-ம் ஆண்டு, ஒட்டோமன் பேரரசுக்கும் எகிப்துக்கும் இடையிலான கடல் ஒப்பந்தம் மூலம், இவ்விரு தீவுகளும் எகிப்துக்குச் சொந்தமானவை. சவுதி அரேபியா என்கிற நாடு தோன்றியதே 1932-ல்தான். பிறகு எப்படி இத்தீவுகள், அவர்களின் உடைமை ஆக முடியும்...?' என வினவுகிறார்கள்.

எகிப்து நாட்டின் `இஸ்லாமிய சகோதரர் கள்' மற்றும் இடதுசாரி தலைவர்களும் கூட, `தீவுகளை விட்டுத் தருவதாக அறிவிக்க, அதிபருக்கு சட்டப்படி எந்த அதி காரமும் இல்லை' என்கின்றனர். நாடாளு மன்ற ஒப்புதல் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதியை, வேறொரு நாட்டுக்கு, தன்னிச்சையாக அதிபர் வழங்கிவிட முடியாது என்பது இவர்களின் வாதம்.

எகிப்திய அரசாங்கத்தின் மேல்முறையீடு என்னவாகும்...? இறுதித் தீர்ப்பு என்னவாக இருக்கும்...?

'அதுகுறித்து கவலை இல்லை. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், தீவுகள் எகிப்துக்கே சொந்தம் என்பது உறுதி ஆகி விட்டது' என்கின்றனர் எதிர்த் தரப்பினர். விறுவிறுப்பான அடுத்த கட்டத்துக்குள் நுழைய இருக்கிறது இவ்வழக்கு. இதன் இறுதித் தீர்ப்பு, உலகில் பல பகுதிகளில் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்போதைக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது. நீதிமன்றங்கள், சரித்திரத்தை மட்டுமல்ல; பூகோளத்தையும் மாற்றி எழுதும் காலம் கனிந்து கொண்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x