Last Updated : 22 Oct, 2013 04:15 PM

 

Published : 22 Oct 2013 04:15 PM
Last Updated : 22 Oct 2013 04:15 PM

கார் ஓட்டாதே! வேன் ஓட்டாதே!

சீனாவைப் பார், ஜப்பானைப் பார் என்று இப்போதெல்லாம் யாரும் அதிகம் பேசுவதில்லை. ரொம்பப் பழசாகிப் போன பிரயோகம் ஜனங்களுக்குப் பிடிக்காது என்று விட்டுவிட்டார்கள். அடிக்கடி இல்லாது போனாலும் எப்போதாவது கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். ஒன்றும் தப்பில்லை.

நேற்றைக்கு சீனத் தலைநகரம் பீகிங்கில், நகர நிர்வாகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இனிமேல் ஒவ்வொரு மாதமும் சில நாள்கள் சாலைப் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைக்க உத்தேசித்திருக்கிறோம். அதாகப்பட்டது, ஓடுகிற பேருந்து வகையறாக்களில் எண்பது சதவீதம் வண்டிகள் இந்நாள்களில் ஓடாது. பதிவு எண்களின் வரிசையை வைத்துக்கொண்டு, ரெகுலராக ஓடும் கார்களில் ஐம்பது சதவீத வண்டிகளுக்கு ரொட்டீனில் தடை விதிக்கப்படும். இந்த மாசம் உனக்குத் தடை என்றால் அடுத்த மாசம் அவனுக்குத் தடை. அதற்கடுத்து எனக்கே தடை. எப்போதும் அல்ல. நகர அசுத்தம், காற்று மாசு சகிக்கமுடியாது போகிற தினங்களில். சைக்கிள் பயணிகளுக்கும் நடராஜா சர்வீஸ்காரர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் கார் வைத்திருக்கிறீர்களா? வேன் வைத்திருக்கிறீர்களா? வேறு வழியில்லை. தடையுத்தரவு அவசியம் உண்டு.

உங்கள் வாகனத்துக்கு நாளைக் காலை ஆறு மணி முதல் அனுமதி கிடையாது என்றால் இன்று மாலை 6 மணிக்கு வீட்டுக்குத் தகவல் வந்துவிடும். அதாவது பன்னிரண்டு மணிநேர நோட்டீஸ். நோட்டீஸ் வந்த பிற்பாடு வண்டியை எடுத்தால் பிரச்னைதான். மாட்டினால் வண்டியும் காலி, நீங்களும் காலி.

மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைதான். ஆனாலும் எத்தனை எரிபொருள் மிச்சம்! ஒரு பக்கம் இது நடந்துகொண்டிருக்கும்போதே மறு பக்கம் மியான்மரிலிருந்து சீனாவுக்கு ஒரு 2520 கிலோ மீட்டர் நீள எரிவாயு பைப்லைன் ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்திருக்கிறார்கள். மியான்மரின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஆரம்பித்து சைனாவின் யுனான் மாகாணம் வரை நீளும் இந்த பைப்லைன் மூலம் வருஷத்துக்குக் குறைந்தது பத்து பில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயு டிரான்ஸாக்ஷன் நடக்கப் போகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து இதே மாதிரி ஒரு பைப் லைனும் மத்திய ஆசியாவிலிருந்து ஒரு பைப் லைனும் மலாக்கா ஜலசந்தி மூலம் இன்னொரு லைனும் சைனாவுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இது நாலாவது.

2010ம் ஆண்டு ஜூன் மாதம்தான் இந்த பைப்பு போடுகிற ஜோலியை சீனர்கள் ஆரம்பித்தார்கள். மூணே வருஷம்.

முடிந்துவிட்டது. இதனோடு கூடவே ஆரம்பித்த இன்னொரு பெட்ரோலிய பைப்லைனும் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. வருஷத்துக்கு இருபத்திரண்டு மில்லியன் டன் குரூடாயில் இந்த ரூட்டில் சைனாவுக்குள் வரப் போகிறது. என்ன லாபம் என்றால் கால் காசோ அரைக்காசோ, இந்த பைப்லைன்களின் வெற்றியைத் தொடர்ந்து சைனாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை விகிதம் விரைவில் நிச்சயமாகக் குறையும். அதாவது இறக்குமதி சார்ந்த சிலபல லாஜிஸ்டிக் செலவுகளில் மிச்சம் பிடித்து, அதை விலைக்குறைப்பாக அறிவிக்கவிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் கட்டாய எரிபொருள் சிக்கனம். இன்னொரு பக்கம் எரிபொருளுக்கு விலைக் குறைப்பு சாத்தியங்கள். அழகாக இல்லை?

பீகிங்கில் மாதம் சில நாள் வாகனப் போக்குவரத்துக்கு முக்கால்வாசித் தடை போட்டு எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு மெல்ல மெல்ல அதைப் பிற பெருநகரங்களுக்கும் கொண்டு செல்லும் திட்டம் வைத்திருக்கிறார்கள். பெட்ரோலியப் பொருள்களின் தேவை அதிகரிப்பை மறுக்கவும் முடியாது; நிராகரிக்கவும் இயலாது. அதே சமயம் நம்மால் அதிகபட்சம் என்ன சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று பார்க்கவும் வேண்டுமல்லவா? சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பெயரால் அதைத்தான் இப்போது செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

நம்மூரிலும் இம்மாதிரி வாகனாதி சௌகரியங்களுக்கு ஒரு கட்டாயத்தடை வந்தால் என்ன நடக்கும் ?

அது தெரியாது. ஆனால் நாம் நடக்க மாட்டோம். அது மட்டும் நிச்சயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x