

உயர்நிலை மருத்துவத்தில் இந்தியா சாதனைகளைப் படைப பதாகவும் மருத்துவ சுற்றுலா வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், குணால் சஹா வழக்கில் இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. சஹாவின் மனைவி அனுராதா மரணத்துக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையே காரணம் என்று குறிப்பிட்டு ரூ.11 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இத்தீர்ப்பு இந்தியாவின் உயர் மருத்துவம் பற்றிய வேறொரு பார்வையையையும் நோயாளிகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது.
இங்கு மருத்துவம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. மருத்துவ அலட்சியத்தால் நிறைய மனித உயிர்களை இழந்து வருகிறோம். ஆனால், அந்த இழப்புகளைப் பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை. எடுக்கவும் மாட்டார்கள். நோய் கண்டறியும் பரிசோதனை தொடங்கி சிகிச்சை, மருந்து அளிப்பது, சிகிச்சைக்குப் பின்பான கண்காணிப்பு வரை எல்லாவற்றிலும் பிரச்சினை. கூடவே கவனக் குறைவான, அலட்சியமான சிகிச்சையின் பாதிப்புகளை மறைக்கவும் செய்கின்றனர்.
பன்மருத்துவத்துறை சிகிச்சையிலும் சிக்கல்கள் உண்டு. ஒருமுறை பெரியவர் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். ஒரு பொது மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துவந்தார். ஒரு சிறுநீரக சிறப்பு மருத்துவர் அங்கு வந்து ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்றார். நாங்கள் பொது மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்றோம். அதற்கு அவர், ‘முடிவை நீங்கள் எடுங்கள். பொது மருத்துவரின் ஆலோசனை தேவை இல்லை’ என்றார். ஒரே மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் ஏன் ஒன்றாக இந்த முடிவை எடுக்கக்கூடாது? இருவேறு கருத்துக்கள் கொண்ட மருத்துவர்களால் பாதிப்பு நோயாளிகளுக்குத்தானே.
அசாதாரண, சிக்கலான நோய்களுக்கான உயர் மருத்துவம் இன்னும் இந்தியாவில் போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை. உயர்நிலை மருத்துவம் அதிக செலவு பிடிக்கக்கூடியதுதான். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எல்லா இடங்களிலும் உயர்நிலை மருத்துவமனைகளை நிறுவமுடியாது. ஆனால், உயர் நிலை மருத்துவமனைகள் உள்ள இடங்களிலாவது நேர்மையான மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகள், செயல்முறை விதிகளைப் பின்பற்ற வேண்டும் அல்லவா?
மருத்துவம் என்பது விஞ்ஞானமாக இருந்தாலும், அதனை செயல்படுத்தும்போது மருத்துவர்களின் பொருளாதாரத் தேவைகளும் விருப்பு வெறுப்புகளும் அதில் பங்கு வகிக்கக்கூடாது. மாறாக மருத்துவர்களின் செயல்திறனும் அனுபவமும் தொழில் தர்மமும் மனிதநேயமுமே அங்கு பங்கு வகிக்க வேண்டும். அதேசமயம் பெரிய மருத்துவமனைகளும் அதிநவீன கருவிகளும் செயல்திறனும் மனிதநேயமும் மிக்க செவிலியர்களும் மருத்துவர் மற்றும் சிறப்பு நிபுணர்களும் இங்கு போதுமான அளவு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லாப நோக்கில் அறம் தவிர்க்கும் மருத்துவமனைகள் ஒருபுறம் - போதுமான நிதி ஆதாரம் இல்லாத பொது மருத்துவமனைகள் மற்றொருபுறம். இவற்றின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறார் இந்திய நோயாளி!