

“உலகின் எந்த நாட்டிலும் மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) வலுவாக அமல்படுத்தப்படவில்லை” என்று வருத்தப்படுகிறார் பேராசிரியர் லிஸ் கிராண்ட். மரணத் தறுவாயை நெருங்கியவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் மரணவலி தணிப்புச் சிகிச்சையும் ஒருங்கே கிடைக்க வேண்டும் என்பதை இடைவிடாமல் வலியுறுத்துபவர் லிஸ் கிராண்ட்.
சிங்கப்பூரின் லீன் அறக்கட்டளை, ‘இறப்பில் தரம்’ என்ற உலகக் குறியீட்டெண்ணை ஆண்டுதோறும் தயாரித்துவருகிறது. 2015-ல் இது, ‘பிரிட்டனில்தான் மரணவலி தணிப்புச் சிகிச்சையில் உச்சத்தில் இருக்கிறது’ என்று பட்டியலிட்டிருக்கிறது. பிரிட்டனில், இது தேசிய சுகாதாரக் கொள்கையிலேயே ஓர் அங்கமாகச் சேர்க்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், இது தொடர்பாக கேரள மாநிலத்திடமிருந்து பிரிட்டனே கற்க வேண்டியிருக்கிறது என்று பாராட்டுகிறார் கிராண்ட். புற்றுநோய் உள்ளிட்ட தீரா வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்கு கேரள சுகாதார ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று உடல் பரிசோதனை செய்வதுடன், மரணவலி தணிப்பு மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசி அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வருகின்றனர். இந்தச் சமூக மருத்துவத் திட்டத்தை மனநலன் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையுடனும் சர்வதேச கிறிஸ்தவ மருத்துவ, பல் மருத்துவ சங்கத்துடனும் இணைந்து குடும்ப மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை ஆன்லைனில் வழங்குகிறது எடின்பரோ பல்கலைக்கழகம். மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்கு மரணவலி தணிப்புச் சிகிச்சை அளிப்பதை அனைத்திந்திய மரணவலி தணிப்புச் சிகிச்சை சங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
“இறப்பது என்பது மிகவும் இயல்பான விஷயம்; இறக்கப்போகிறவர்களுக்கு வலியையும் வேதனையையும் மட்டுமே அளிக்கப்போகிற சிகிச்சைகளை நாம் குறுக்கிட்டுத் தடுக்காவிட்டால், ஏராளமான குடும்பங்களைத் தாங்க முடியாத வறுமையில் ஆழ்த்திவிடுவோம்” என்று எச்சரிக்கிறார் லிஸ் கிராண்ட். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய ஆசிய நாடுகளிலும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் மரணப் படுக்கையில் கிடக்கும் நோயாளிகளைப் பார்த்துக்கொள்வதற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திவிட்டு, அருகிலிருந்து பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள் என்கிறார் அவர்.
மரணவலி தணிப்புச் சிகிச்சை என்பது கருணைக் கொலை அல்ல. வலி தணிப்பு என்றால், எந்த மருந்தையும் தராமல் அப்படியே நோயாளியை வைத்திருப்பதல்ல. இறக்கும் வரையில் அவர்களுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து, உறவினர்கள் அனைவரும் பக்கத்திலிருந்தே கவனித்துக்கொள்வதாகும். இந்த சிகிச்சையை மேற்கொள்கிறவர்கள் இறப்பை விரும்புவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
வலியைத் தணிக்க உதவும் மார்ஃபின் விலை குறைவு. மார்ஃபினைப் பெற முடியும். ஆனால், அதை மருந்தாகப் பயன்படுத்தாமல் போதைப்பொருளாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்பதால் அதன் உற்பத்தி, விநியோகம், விற்பனையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். மருத்துவமனைகளிலிருந்து மார்ஃபின்கள் தானாகவே வெளியேறிவிடாது.
மரணவலி தணிப்புச் சிகிச்சை நோயைக் குணப்படுத்தாது என்பதால், தோல்வியுற்ற மருத்துவ முறை என்று அதைப் பற்றிக் கூறப்படுவது பற்றி கிராண்டிடம் கேட்டபோது, “மரணம் இயற்கையானது, தவிர்க்க முடியாதது. இறக்கும் நிலையில் உரிய ஆதரவைத் தரத் தவறுவதுதான் செயற்கையானது. இறக்கும் நிலையில் நோயாளிக்குத் தேவைப்படும் அரவணைப்பையும் மரணவலி தணிப்புச் சிகிச்சையையும் அளிக்கத் தவறுவது மருத்துவ சேவையையும், மனித இனத்தையுமே அவமதிப்பது போலத்தான். மரணவலி தணிப்பு சிகிச்சை முறையையும் பொது மருத்துவ சுகாதாரத்தையும் உடனே இணைத்தாக வேண்டும்” என்கிறார் கிராண்ட்.
- சுருக்கமாகத் தமிழில்: சாரி