

‘பசுவின் கண்களில் கடவுள் தெரிகிறார்... வேப்பமர வேரில் கடவுள் காட்சியளிக்கிறார்’ என்று புரளிகள் கிளம்பும்போதெல்லாம், குடும்பத்துடன் சென்று மக்கள் கும்பிட்டு மகிழ்வார்கள். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் கிளியின் உடலிலிருந்து திருநீறு கொட்டுகிறது என்று புரளி பரவி, அது கிளியோபாட்ரா அளவுக்குப் புகழ்பெற்றுவிடும். கடைசியில், மக்களின் தொந்தரவைத் தாங்க முடியாமல், மேற்கூரையிலிருந்து சிந்திய சுண்ணாம்புதான் அது என்று கிளியே சொல்லிவிடும்.
ஒரு கட்டத்தில் திருநீறு என்பதைப் பொடுகாக மாற்றிவிட்டார்கள் விளம்பரத்தை எடுத்தவர்கள். உலகெங்கும் இதுபோன்ற கட்டுக்கதைகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய வதந்திகள். ஆனால், அதுபோன்ற வீடியோக்கள் என்னவோ ஏடிஎம் சிசிடிவி கேமராவில் எடுக்கப்பட்டதுபோல், கொசகொசவென்று இருக்கும். பெரும்பாலும் சைனீஸ் லேண்டர்ன் எனப்படும் வானில் பறக்க விடப்படும் ஒருவித விளக்குகள், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ராணுவ விமானங்கள் போன்றவற்றைப் பறக்கும் தட்டுகளாகக் கற்பனைசெய்துவிடுகின்றனர்.
அதே போல பெரிய அளவிலான சம்பவங்கள் நடக்கும்போது, ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் தீபோலப் பரவும். விமானங்களை வைத்தே உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின. அந்த விமானங்களில் ஒன்றின் எண் Q33 NY என்றும் அந்த எண்ணை எம்எஸ்-வேர்டில் (MS-Word) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் (Wingdings) என்ற எழுத்துருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார். அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட Q33 NY என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.
தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி. பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும் பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை ‘9/11 தேவதை’என்று அழைக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனிதமுகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்புக்கு:chandramohan.v@kslmedia.in