Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

வேறொரு பெண்

நிர்பயாவுக்குப் பிறகு வீதிவீதியாக வெடித்த போராட் டங்களும் ஒலித்த கூக்குரல்களும் எந்தவித மாற்றத் தையும் ஏற்படுத்திவிடவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. சட்டங்களின் கறார்தன்மையும் அமைப்புரீதியான போராட்டங்களும் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான தீர்வாகுமா?

சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது. அதில் ஒரு பெண் கவிஞருக்கு எதிராக வாழா வெட்டி என்கிற வார்த்தை உள்படப் பல வார்த்தைகளைப் பிரயோகிக்கிறார் சக ஆண் கவிஞர். சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சச்சரவுகள் நடப்பது சகஜமென்றாலும், இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் (பின்னர் அவர் மன்னிப்புக் கோரிவிட்டாலும்கூட) அதிர்ச்சியும் அயர்ச்சியும் அளிப்பவையாக உள்ளன.

சமூக வலைத்தளங்களில் பெண்களுடனான விவாதங்களின் போது இது போன்ற ஆணாதிக்கச் சொல்லாடல்களை மிக சகஜமாகப் பயன்படுத்துபவர்கள்தான் மறுபுறம் நிர்பயாவுக்காக, வினோதினிக்காக, வித்யாவுக்காகக் கண்ணீர் மல்கப் பேசிக்கொண்டிருப்பவர்கள்.

சிக்கல் எங்கே இருக்கிறது?

ஆணைச் சார்ந்து வாழ முடியாத /விரும்பாத பெண்ணுக்கு இந்த சமூகம் என்னென்ன பெயர்களைச் சூட்டியிருக்கிறது? முதிர்கன்னி, விதவை, வாழாவெட்டி, மலடி என்று நீளும் பட்டியலை வலியுறுத்தும் தந்தை மைய மனநிலையிலிருந்து சமகால இலக்கியவாதிகள் தொடங்கி சமூக வலைத்தளங்களில் புழங்குவோர்வரை பெரும்பாலானோர் இன்னும் வெளியேற வில்லை. சுதந்திரத்தை நோக்கிய தனது பயணம் ஆணுடனானது என்று நம்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. தம்மை மரபார்ந்த சிந்தனையிலிருந்து விடுதலை அடைந்தோராக நினைத்துக்கொள்ளும் ஆண் களுக்கேகூட இது நின்று உள்நோக்கி ஆராய வேண்டிய தருணம் என்று தோன்றுகிறது.

வன்முறை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. உடல் மீது செலுத்துப்படுவது, வன்முறையின் ஒரு வடிவம் மட்டுமே. தந்தை மைய சமூகம் நிர்ணயித்திருக்கும் எல்லைகளைத் தாண்டி ஒரு பெண் வரும்போது, அவள் மீது செலுத்தப்படும் வன்முறைகளின் வடிவங்கள் எண்ணற்றவை. பெண்கள் மீதான வன்முறை என்பது சட்டங்கள் மட்டுமே தீர்வு காணக்கூடிய வன்முறை அல்ல. அது, பெண்ணை ஒரு சரிநிகர் ஆளுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் தரும் பதற்றத்தின் வெளிப்பாடு. ஆண் என்னும் அதிகாரத்தின் வெளிப்பாடு. அதனால்தான் பெண்கள் மீதான வன்முறையைப் பற்றிப் பேசும்போது பல சமயங்களில் அதற்கான தீர்வாக முன்வைக்கப்படுவது, பல வருடங்களாகப் போராடி அவர்கள் அடைந்திருக்கும் வெளியைச் சுருக்குவதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் பெண்களுக்கும் அதுவே நடக்கிறது. எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கும், ஜனநாயகப்படுத்துதலைப் பரவலாக்கியிருக்கும் சமூக வலைத்தளங்கள், பெண்களுக்கான வெளியைச் சுருக்கி, அவர்கள் மீதான வன்முறைக்கான சாதனமாக மாறியிருப்பது கவலையளிக்கும் ஒன்று.

பெண்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளின் காரணிகளும் நோக்கங்களும் ஒன்றே. வரையறுக்கப்பட்ட எல்லைகள் தாண்டிப் பெண்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதுதான். நிர்பயாவுக்குப் பேருந்தில் நிகழும் வன்முறையானாலும், எண்ணற்ற பெண்கள் மீது அவர்களது குடும்பங்கள் செலுத்தும் ‘அங்கீகரிக்கப்பட்ட’ வன்முறையானாலும் பொது வெளியில் இயங்கும் பெண்கள் மீது, சக தோழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செலுத்தும் வன்முறையானாலும் அவை சந்திக்கும் புள்ளி, அப்பெண்களின் ‘அத்துமீறல்’தான் எனும்போது நிர்பயாக்களுக்காகவும் வினோதினிகளுக்காகவும் சிந்தப்படும் கண்ணீரின் முதலைத்தனம் புலப்படும்.

வன்முறை என்பது மனித உரிமைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் எதிரான ஒரு மனநிலை. இலக்கியம் உள்ளிட்ட எந்த முகமூடியும் அதற்குப் பொருத்தமானதல்ல.

தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x