

ஒரு பிராண்டின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்க தொழில் நிறுவனங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஆனால் அந்த மதிப்பை ஒரு சில நாட்களில் மொத்தமாக இழப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.
சுதந்திரம், நியாயம், அஞ்சாமை (FREE-–FAIR--FEARLESS) என்ற பின்னொட்டு அடைமொழியை (BRAND TAGLINE) வைத்துக் கொண்டு, நாட்டில் லஞ்சம் வாங்குவோரையும், ஏனைய குற்றம் புரிவோரையும் வெளிச்சம் போட்டு மக்களுக்குக் காட்டிக் கொண்டிருந்த ‘தெஹல்கா’ (TEHELKA) என்ற பிராண்டை உருக்குலைத்தது அதன் போட்டியாளர்களோ அல்லது அரசாங்கமோ இல்லை. அதை உருவாக்கியவர் செய்த செயலே என்பதை நாம் அறிவோம்.
இவர் இந்த செய்தி நிறுவனத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டபோதிலும், மக்களுக்கு இந்த பிராண்டின் மீது இருந்த பழைய ஆர்வத்தையும், மதிப்பையும் தக்க வைக்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது!
சில சமயம் செய்யாத தவறுகளுக்காக, வெறும் சந்தேகத்தின பேரிலும் பழி ஏற்படுவது உண்டு. 2001 ஆம் ஆண்டு அறிமுகமாகி, மிகவும் கடினப்பட்டு பெரும் முயற்சிக்குப் பின், இந்தியச் சந்தையில் சுமார் 70 விழுக்காட்டைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள, ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ (VOLVO) பிராண்ட், இதுவரை சுமார் 5,000 சொகுசுப் பேருந்துகளை இங்கு விற்றுள்ளது. ‘பாதுகாப்பு’ என்ற பலனை தான் தயாரிக்கும் வாகனங்களில் அளிக்க வல்லது என உலகச் சந்தையில் பெயர் பெற்ற இந்த பிராண்டுக்கு ஏற்பட்ட பழி, இரண்டு சாலை விபத்துகளின் ரூபத்தில் வந்து சேர்ந்தது. இந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் தீப்பிடித்து எரிந்த வால்வோ பேருந்துகள், மக்கள் அதன்மேல் கொண்டிருந்த நன்மதிப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தியது.
ஓட்டுனரின் கவனக்குறைவோ அல்லது பேருந்தில் கொண்டு சென்ற பொருட்களோ முக்கியக் காரணமாயிருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், வதந்திகள் இந்த பிராண்டைக் குறிவைத்துத் தாக்கி மிகவும் சேதப்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
வால்வோ தன் வல்லுநர்கள் குழுவைக் கொண்டு விபத்திற்கானக் காரணங்களை ஆராய்ந்து வருகிறது. தன் போட்டி பிராண்டுகள், மெர்சிடஸ் பென்ஸோ (MERCEDEZ BENZ), டாடா மோட்டார்ஸோ (TATA MOTORS), அல்லது அசோக் லேலண்டோ (ASHOK LEYLAND) இதுவரை எற்படுத்த முடியாத பாதிப்பை, இப்பழி உருவாக்கியதைக் கண்டு வால்வோ உறைந்து போயுள்ளது. விசாரணையின் முடிவையும், அதை வால்வோ கையாளும் முறையையும் பொருத்தே, அதன் எதிர்காலம் இருக்குமென்பதைச் சொல்லத் தேவையில்லை.
மாறாக, சில சமயம் பிராண்டுகள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு எப்பழியும் ஏற்படாவண்ணம் நடக்க முயல்கிறது. சமீபத்தில், மாருதி சுஸுகி (MARUTI SUZUKI) அக்டோபர் நான்காவது வாரத்தில்தான் தயாரித்து விற்பனை செய்த எர்டிகா (ERTIGA), ஸ்விஃப்ட் (SWIFT) மற்றும் டிஸையர் (DZIRE) பிராண்ட் வாகனங்களில் குறை இருக்கக்கூடும் என தானாகவே சந்தேகப்பட்டு சுமார் 1,500 வாகனங்களைத் திரும்ப அழைத்து இலவசமாக சோதித்துப் பார்த்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிறிது நாட்களுக்கு முன்னர், ஃபோர்டு இந்தியா (FORD INDIA) நிறுவனமும் இதேபோல் தானே முன்வந்து ஜனவரி 2011லிருந்து ஜூன் 2012 வரை தான் உற்பத்தி செய்து, விற்ற சுமார் 1.5 லட்சம் ஃபோர்டு ஃபிகோ (FORD FIGO) மற்றும் ஃபோர்டு கிளாஸிக் (FORD CLASSIC) வாகனங்களைத் திரும்ப பெற்றுப் பரிசோதித்துப் பார்த்ததையும் நாம் அறிவோம்.
இந்திய வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM) ஒன்று கூடி இதற்காக ஒரு கொள்கையையும் உருவாக்கி, அனைவரையும் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது. சில வருடங்களுக்கு முன்னர், மேட்டல் இந்தியா நிறுவனம் (MATTEL INDIA) குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தான் விற்ற 7,500 பார்பி பொம்மைகளுடன் (BARBIE DOLL) கொடுத்த மற்ற உதிரி பொம்மைகளில் குழந்தைகளுக்கு அபாயம் விளைவிக்கும் ஈயம் (LEAD POISONING) இருக்கக்கூடும் என எண்ணி அவற்றைத் திரும்பப் பெற்றது. பதிலுக்கு நல்ல பொம்மைகளையோ அல்லது நஷ்ட ஈட்டுத் தொகையையோ வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்க ஏற்பாடு செய்தது.
மருந்து, கணினி, கைபேசிக் கருவி, இருசக்கர வாகனங்கள் போன்ற பொருட்கள் விற்கும் பிராண்டுகளும் இதுபோல் அடிக்கடி செய்ய நேரிடுவதை நாம் பார்க்கிறோம். இந்த செயல்கள் எப்படி பழி ஏற்படுவதைத் தடுக்கும் என்ற கேள்வி நம் மனதில் எழும். தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு பிராயச்சித்தம் தேடும் இப்பிராண்டுகளின் செயல்கள், வாடிக்கையாளர்களின் மேல் அவை கொண்டுள்ள அக்கறையையே பிரதிபலிக்கின்றன.
குறையுடைய பொருட்களை இந்த பிராண்ட் விற்று விட்டது என்ற கோபம் வாடிக்கையாளர்களுக்கு ஒருபுறம் இருக்கும். அதே சமயத்தில், அந்த பிராண்டே முன்னின்று பிரச்சினையை சரிசெய்து உதவிய பரிவை எண்ணி மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை பன்மடங்கு உயரும் என்பதும் உண்மை.
இது போன்று குறையிருப்பதாகச் சந்தேகப்படும் பொருட்களைத் திரும்பிப் பெற நினைக்கும் பிராண்டுகளுக்கு உதவுவதற்கென்றே இப்போது காப்பீட்டுத் திட்டங்களெல்லாம் உள்ளது. உதாரணமாக, டாடா ஏ.ஐ.ஜீ காப்பீட்டுத் திட்டத்தில் (TATA AIG INSURANCE) பொருட்களைத் திரும்பப் பெற ஆகும் விளம்பரச் செலவு, கொடுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை, பொருட்களை இடம்பெயர, பாதுகாத்து வைக்க, சரி செய்ய தேவைப்படும் பணம், இதற்கு பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் வல்லுநருக்கு கொடுக்கும் ஊதியம் போன்றவையெல்லாம் உள்ளடங்கியுள்ளது.
இவ்வளவு பலன்கள் இருக்கும்போது, பல பிராண்டுகள் சில சமயம் பிடிவாதமாக பழியை ஏற்கத் தயங்குவது நமக்கு விந்தையாக இருக்கிறது.
சென்ற வருடம், ஒரு புகழ் பெற்ற சத்து பானத்தை விற்கும் பிராண்ட், குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லத் தக்க, கணித வடிவ இயல் பாடத்திற்கு உதவும் பெட்டியை (GEOMETRY BOX) இலவசமாக அளித்தது. ஆனால், அதிலுள்ள எந்த ஒரு உபகரணமும் உபயோகிக்க முடியாத அளவுக்கு, அதன் தரம் மோசமாக இருந்தது. இலவசம் தானே எப்படியிருந்தால் என்ன என்று அந்த பிராண்ட் எண்ணியிருக்கக்கூடும். வாங்கிப் பார்த்த வாடிக்கையாளர்களுக்கோ சிறிய ஏமாற்றம். ஆனால், தங்கள் சத்து பானம் தொடர்ந்து நன்றாகவே விற்றுக் கொண்டிருப்பதால் இதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை அந்த பிராண்ட். ஆனால், ‘அக்கறையில்லாமல் ஒரு தரமற்ற பரிசை தன் பொருளுடன் கொடுக்கும் இந்த பிராண்ட், சத்து பானத்தை மட்டும் அப்படி என்ன அக்கறையுடன் தயாரிக்கும்?’ என்று மக்கள் மனதில் ஏற்பட்ட ஒரு ஐயப்பாட்டை அது கவனிக்கத் தவறியது.
இது நாளடைவில் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தை குலைக்கச் செய்யலாம் என்பதையும் இந்த பிராண்ட் உணரவில்லை.
“தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்”
என்ற திருக்குறளுக்கிணங்க பழிக்கு அஞ்சி, தினை அளவு குற்றம் நேர்ந்தாலும், அதனை பனை அளவாகக் கருதி, வெட்கப்படும் பிராண்டுகள், அக்னிப் பரீட்சை ஏற்படுகையில் ராமாயணத்தில் சீதை சாதித்ததைப்போல் உயிர்த்தெழுந்து வரமுடிகிறது. பழிக்கு அஞ்சாத பிராண்டுகளோ மூளும் தீயில் விழநேரிடும்போது, ஜூவாலையில் சிக்கி, தன்னை வருத்தி, கறைபட்டுக் கொண்ட பின்னரே அதிலிருந்து மீண்டு வர எண்ணுகிறது!
krsvk@jsb.ac.in