Last Updated : 09 Oct, 2013 12:55 PM

 

Published : 09 Oct 2013 12:55 PM
Last Updated : 09 Oct 2013 12:55 PM

Globe ஜாமூன் - படி பாப்பா, படி!

நேற்றைக்கு வாழ்க்கை வரலாறு வெளியாகி விட்டது. இன்னும் ரெண்டு நாள் பொறுத்தால் நோபல் பரிசு உண்டா இல்லியா என்பது தெரிந்துவிடும். எங்கோ பாகிஸ்தானிய பொந்து பிராந்தியமான ஸ்வாட்டில் தானுண்டு, தன் ஸ்கூல் படிப்புண்டு என்றிருந்த மலாலாவை உலகப் புகழ் பெறச் செய்தது, சந்தேகமில்லாமல் தாலிபன்களின் குண்டடிதான். பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கும் சில ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியருக்கும் தாலிபன் களால் வாய்த்ததெல்லாம் தர்ம அடிகளும் தாங்கொணாத் துயரமும் மட்டுமே. மாநிலம் மறந்தாலும் மலாலா மறக்கக்கூடாத மகானுபாவர்கள்.

ஆப்கனை ஒட்டிய பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்த மலாலா, தன்னையொத்த பெண் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் படிப்பை விடக்கூடாது என்று சொல்லிவந்ததுதான் தாலிபன்களுக்குப் பிரச்னையாக இருந்தது. ஒரு பதினாறு வயசுப் பெண் இதனை ஒரு பெரிய இயக்கமாகவோ, பிரசார பீரங்கிகளுடனோ நடத்தவில்லை. அவரது கருத்து அது. அதை அவர் வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறார். இது பிடிக்காது போன தாலிபன்கள் மலாலா போய்க்கொண்டிருந்த பஸ்ஸை நிறுத்தி அவரைப் பார்த்துச் சுட்டார்கள். பெரிய காயம், லண்டனில் மருத்துவம், 'நான் மலாலா' என்று அங்கிருந்தபடிக்கே ஒரு ஆட்டோபயக்ரஃபி, இதோ நாளைக்கு நோபல் பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்று புதினுக்குப் போட்டியாக நகம் கடித்துக்கொண்டிருக்கிறார்.

நிற்க. மலாலா சௌக்கியமாக இருக்கட்டும். சமாதானப் புறாவின் சமகால வர்ஷனாக அவரை முன்னிறுத்தி இன்னும் பல புத்தகங்கள் வரட்டும், விருதுகள் குவியட்டும், சினிமாக்கள் எடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். பாப்பா இனிமேல் கொஞ்சம் பத்திரமாக இருக்க வேண்டும்.

நேற்றைக்குப் பாகிஸ்தானிய தாலிபன்கள் க்ளீனாகச் சொல்லிவிட்டார்கள். ஒரு முறை குறி வைத்ததில் அந்தப் பெண் தப்பித்துவிட்டது என்பதால் அதோடு சும்மா இருந்துவிடுவோம் என்று நினைத்துவிடாதீர்கள். மலாலாவுக்கு நாங்கள் குறித்திருப்பது நித்திய கண்டம். அது பூர்ணாயுசா என்பதை எம்பெருமான் தீர்மானிப்பான்.

என்னடா இது சோதனை எங்கள் மலாலாவுக்கு வந்த வேதனை. சல்மான் ருஷ்டி மாதிரி, தஸ்லீமா நசுரீன் மாதிரி அம்மணியும் இனி தலைமறைவாகவே இருந்து புஸ்தகம் போட்டுப் பிழைக்க வேண்டியதுதானா என்று ஒரே கவலையாகிவிட்டது. அதுவும் லண்டன் மாநகரத்தில் இருந்தபடிக்கு மலாலா வெளியிட்டிருக்கும் கல்விச் சிந்தனைகள், தமது பிராந்தியத்துப் பெண் குழந்தைகளுக்குத் தாலிபன்களின் கடைந்தெடுத்த கன்சர்வேடிவ் கொள்கைகளால் உண்டாகும் கஷ்டங்கள், குறிப்பாக, பெண்கள் படிக்கக்கூடாது என்ற அவர்களுடைய ஆதி பிரகடனத்துக்கு எதிரான முஷ்டி மடக்கல் எல்லாம் ஆஹா எழுந்ததுபார் யுகப் புரட்சி என்று சிலிர்ப்பூட்டவே செய்கின்றன.

பூனைக்கு மட்டுமல்ல, புலிக்கும் யாராவது மணிகட்டித்தான் தீரவேண்டும். தாலிபன்களைக் கண்டமேனிக்கு விமரிசித்து வெளிப்படையாக அவர் பேசியிருப்பது, அவர்களை இஸ்லாம் விரோதிகள் என்று வருணித்திருப்பதெல்லாம் உலக அரங்கில் சிறப்புக் கவனம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாப்பாவின் வயசு பதினாறு. இதனால்தான் இந்தப் புரட்சி மனப்பான்மை தானாக வந்ததா, தண்ணி ஊத்தி வரவழைக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது.

தன் படிப்பை மலாலா ஒருவழியாகப் பூர்த்தி செய்துவிட்டு இதையெல்லாம் செய்தால் தேவலை. குண்டடி காரணத்தால் லண்டனுக்குப் போனவர், உடம்பு சொஸ்தமானபிற்பாடு விட்ட இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கவேண்டாமோ? சரி, ஆஸ்பத்திரியில் பொழுது போகவில்லை; புஸ்தகம் எழுதினார் என்றே வையுங்கள். அதுவும்தான் வெளியாகிவிட்டதே, அப்புறம் என்ன? இனி நிறைய ராயல்டி வரும், லண்டனிலேயேகூட இருந்தபடிக்கு மேலே படித்து முன்னுக்கு வரலாம். ஸ்வாட் அபலைகளுக்காக அப்புறம் ஒரு பள்ளிக்கூடம் கூட நடத்தலாம். அங்கிருந்தபடிக்கே கூட தாலிபன்களைக் கண்டித்து அறிக்கை விடலாம்.

இதையெல்லாம் விட்டு விட்டுத் தான் அரசியலில் குதிக்கப் போவதாகச் சொல்லியிருப்பதுதான் கொஞ்சம் பேஜார் பண்ணுகிறது.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்க நினைக்கும் விபரீத மனிதர்கள் நாசமாய்ப் போகட்டும். அதுவல்ல விஷயம். தற்செயலாக வாய்த்த பிரபலம் இந்தச் சிறுமியை இப்படியெல்லாம் திசை தடுமாற வைக்கிறதே என்று நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது. படித்து முடித்தபிற்பாடு மலாலா சகல சௌபாக்கியங்களுடன் அரசியலுக்கு வரட்டும், தேர்தலில் நிற்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இப்போ என்ன அவசரம்?

ஒருவேளை இதெல்லாம் மலாலாவை முன்னிறுத்தி மீடியா ஊதிவிடும் புகைதான் என்றால் அவர் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x