

2016-ம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனினும், உலகின் பருவ நிலை மீதான தாக்கத்தை எல் நினோ குறைத்துக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதியின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பம் அதிகரிப்பது எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது இது.
கொலம்பியா, ஈக்வெடார், பெரு, இந்தோனேஷியா மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய ஐந்து நாடுகள், நெருக்கடி நிலையை அறிவித்திருக்கின்றன. மேலும்,
எல் நினோ பாதிப்பு கொண்ட மற்ற 10 நாடுகளுக்குத் தேவையான அவசர உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது ஐநா.
பொதுவாக, இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் எல் நினோவின் தாக்கம் இந்த ஆண்டு மிகக் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. 1997-98-ல் பெரிய அளவில் ஏற்பட்ட எல் நினோவுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏற்பட்ட எல் நினோ மிகக் கடுமையானது. 1950-க்குப் பின் ஏற்பட்ட எல் நினோக்களில் இதுதான் கடுமையானது என்றும் கருதப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவுகிறது. அந்நாட்டில் வறட்சியால் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ உலக நாடுகள் ரூ. 2,800 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி செய்திருக்கின்றன எனினும், வறுமையில் தவிக்கும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்க சுமார் ரூ. 9.25 ஆயிரம் கோடி தேவை என்கிறது எத்தியோப்பிய அரசு.
1997-98-ல் ஏற்பட்ட பெரும் அளவிலான எல் நினோவின் விளைவுகளை மனதில் கொண்டுதான் கொலம்பியா, பெரு, ஈக்வெடார் ஆகிய நாடுகள் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்திருக்கின்றன. கடும் மழைப் பொழிவும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும் பசிபிக் கடற்கரையோரப் பகுதிகளில் மோசமான சேதத்தை ஏற்படுத்தின. எல் நினோவின் காரணமாக, தனது ஜிடிபி-யில் 15% இழப்பைச் சந்தித்திருக்கிறது ஈக்வெடார் நாடு.
இந்தோனேஷியா மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளில், கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது எல் நினோ. ஆறுகள் வறண்ட நிலையில் இருக்கும் பப்புவா நியூகினியாவில் உணவுப் பற்றாக்குறை அதிக அளவில் இருக்கிறது. கடும் உறைபனி காரணமாக, அந்நாட்டின் பல கிராமங்களில் தோட்டப் பயிர்கள் பெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பொறுத்தவரை, காட்டுத் தீ ஏற்படுத்தியிருக்கும் சேதத்தின் தாக்கத்தை மேலும் அதிகரித்திருக்கிறது அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சி. கடந்த ஜூலை மாதம் முதல் ஏற்பட்டுவரும் காட்டுத் தீயின் காரணமாக 20,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான வனப் பகுதிகள் எரிந்து நாசமாகியிருக்கின்றன. இதன் காரணமாக, சுமார் ரூ. 60 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மிகப் பெரிய சேதம் என்றே இது வர்ணிக்கப்படுகிறது.
மேற்கண்ட பாதிப்புகள் 2016-லும் தொடரும் என்றே கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், வரும் 2016-ம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக அமையலாம் என்று வானிலை நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்