

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலாவில் இருந்தேன். இந்திய பாகிஸ்தான் எல்லையில் சட்லெஜ் நதி பாயும் பகுதியில் உள்ள நகரம் அது. 1970-கள் வரை, அந்தப் பகுதியில் இரு நாட்டினரும் உலர்ந்த பழங்கள் போன்றவற்றை வியாபாரம் செய்துவந்தனர். இப்போது அதெல்லாம் இல்லை. வாகா எல்லைச் சடங்கு மட்டும்தான் இன்றைக்கு இருக்கிறது. அன்று மாலை, வாகாவில் எல்லையின் இருபுறங்களிலும் மக்கள் நின்றுகொண்டு தேசியக் கொடிகளை ஆட்டியபடி பாடிக்கொண்டிருந்தனர். வீரர்கள் வழக்கமான தங்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இரு தரப்பிலும் இருந்த பார்வையாளர்களிடமிருந்து ஆக்ரோஷமான குரல்கள். ஓரிருவரைத் தவிர அனைவருமே தங்கள் நாட்டுப்பற்றுடன் கூடிய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
வீரர்களைப் பொறுத்தவரை இந்நிகழ்ச்சி என்பது வழக்கமான பணிதான். மற்ற நேரத்தில் இரு நாட்டு வீரர்களும் சேர்ந்து ஒத்திகை பார்ப்பது, நொறுக்குத் தீனிகள், திரைப்பட சிடிக்களைப் பரிமாறிக் கொள்வது என்று இருந்தனர். எல்லை தாண்டி வரும் கால்நடை மேய்ப்பர் களை அமைதியான முறையில் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். அந்தி நேரத்தின் அந்த இணக்கமும் பெருமித நடையும் நிஜமானவை. நாளைக்கே போர் வெடித்தால் ஒருவரையொருவர் கொல்வதும் நிஜம்தான். அவர்களது வாழ்வின் இரட்டைத்தன்மை இது. ஆனால், இந்த நுணுக்கங்களை அறியாத அப்பாவிப் பார்வையாளர்கள், போலியான இந்த மோதலை, நிரந்தரப் பகையாகவே பார்க்கிறார்கள். இது இருதரப்பிலும் ரத்த வெறியை வளர்த்தெடுக்கிறது.
வெகுஜன மற்றும் சமூக ஊடகத் தளத் திலும், இந்தப் போக்கு தொடர்கிறது. இதுவரை அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகியிருந்த ராணுவ வீரர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி அரங்குகளிலும், ட்விட்டரிலும் மற்றவர்களைப் போலவே தவறான நிலைப் பாட்டை எடுக்கும் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர். எங்களுடன் இருக்கிறீர்களா அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறீர்களா, தேசியவாதியா அல்லது தேச விரோதியா, தேசப்பற்றாளரா அல்லது தேசத் துரோகியா? ‘நாம்’ என்பது யார்? ‘அவர்கள்’ என்பது யார்? குடிமக்கள், பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள், தூண்டிவிடுபவர்கள், தகவல் சொல்பவர் என்று எல்லோருமே ஒருவருக்கொருவர் கலந்துதான் இருக்கிறார்கள். காஷ்மீரில் அறம்சார்ந்த விதிமுறைகளைத் தகர்க்கும் வகையிலான நடவடிக்கையை எடுத்தார் மேஜர் லீதுல் கோகய். அதேசமயம், அசாதாரணமான சூழ்நிலையில் இயங்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞர்தான் அவர். தேசம் என்பது மண், கொடி, தேசிய கீதம் ஆகியவற்றால் எளிதாக உருவகப் படுத்தப்படுவது. ராணுவ வீரர்களும் இந்த உணர்வுகளால் ஆட்பட்டவர்தான். நாட்டுப் பற்று என்பது முட்டாள்தனமானது, நெறிமுறை யற்றது என்று டால்ஸ்டாய் சொன்னதை மேற்கோள் காட்டுவது அறிவார்த்தமான முறையில் சரியானதாக இருக்கலாம். ஆனால், அது மிக எளிதானது; ராணுவ வீரரை அலட்சியப்படுத்தக்கூடியது.
மேஜர் லீதுல் கோகய் பல ஆண்டுகளாகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டவர். போரில் வெற்றி பெறுவதற்காக இயந்திரத் தனமாக வடிவமைக்கப்பட்டவர். தேசியக் கொடி, தேசம் தொடர்பான கருத்துகளின் ஆழ்ந்த தாக்கம் கொண்டவர். அதற்காக, எந்தக் கேள்வியும் இல்லாமல் தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர். எல்லையற்ற ஒரு உலகத்தையோ அல்லது தேசம் என்பது ஒரு பாசாங்கு எனும் கருத்தையோ அந்த மனிதருடன் எப்படிப் பொருத்திப் பார்ப்பீர்கள்? தேசியம் எனும் கருத்தாக்கம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்காமல் முன்வைக்கப்படும் எந்த ஒரு அறிவார்த்தமான வாதமும், இந்தப் பிளவை இன்னும் அதிகமாக்கிவிடும். ஒரு பக்கம் ராணுவ வீரரை மதிக்க வேண்டும் என்று நாடகீயமாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம், மறுபுறம் அந்தக் கருத்தாக்கத்தின் மீதான கடும் விமர்சனம். காஷ்மீர் பிரச்சினை தொடர்பான விவாதம் என்பது, தேசியவாதம் என்பதன் கோட்பாடுகளாக, இந்தப் பக்கமா அந்தப் பக்கமா எனும் நிலைப்பாடு தொடர்பானதாக மாறிவிட்டது. ஒரு ராணுவ வீரரின் வீர மரணத்தைப் பிரதானப்படுத்திப் பேசுவது அல்லது ராணுவ வீரர்களை அரக்கத்தனமானவர்களாகச் சித்தரிப்பது என்று இருப்பதன் மூலம், முதலில் ராணுவ வீரர் அங்கு ஏன் இருக்கிறார் என்று கேட்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.
காஷ்மீர் பிரச்சினையில் தீர்வைத் தேடுவது ராணுவத்தின் பணி அல்ல; அரசின் பணி என்பதை ராணுவத் தளபதிகள் நினைவில் கொள்வது புத்திசாலித்தனம்!