அறிவோம் நம் மொழியை: மொழியின் தாராளப் போக்கு

அறிவோம் நம் மொழியை: மொழியின் தாராளப் போக்கு
Updated on
2 min read

நவீன வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தமிழைத் தயார்படுத்துவது, தமிழின் அடிப்படைத் தன்மைகளை நினைவுபடுத்திக்கொள்வது ஆகிய இரு விதமான பணிகளையும் மேற்கொள்வது இந்தப் பத்தியின் நோக்கம் என முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இங்கு முன்வைக்கப்படுபவை அனைத்தும் உரையாடலைக் கோருபவை, கலந்துரையாடலை முன்னெடுப்பவை என்பதை நினைவுபடுத்திக்கொண்டு நாம் மொழியின் உலகிற்குள் நுழையலாம்.

உலகமயமாதலை இந்தியா வரித்துக் கொண்டு 25 ஆண்டுகள் நிறைந்ததை ஊடகங் கள் நினைவுகூர்ந்தன. பொருளாதார விவகாரங் களும் உலகமயமாதலின் பண்பாட்டுத் தாக்கங் களும் அலசப்பட்டன. உலகமயமாதலை ஒட்டி மொழி சார்ந்த சிக்கல்களையும் பேசலாம்.

ஒவ்வொரு புதிய துறையும் புதிய கண்டுபிடிப்பு களும் மொழி சார்ந்த சவாலையும் ஏற்படுத்தும். அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், ஆகியவற்றில் தொழுதுண்டு பின்செல்ல வேண்டிய நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழும் அப்படித்தான் இருக்கும். இவை ஒவ்வொன்றுமே மொழிக்குச் சவால்களை ஏற்படுத்தியபடி இருக்கும். கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம், உடல்நலம் ஆகியவற்றில் புதிய புதிய துறைகள் உருவாகும்போதும் இதே நிலைதான். Anthropology போன்ற புதிய துறைகள் உருவாகும்போதோ Appraisal போன்ற நிர்வாக நடைமுறைகள் புதிதாக வரும்போதோ Cosmetic Surgery போன்ற புதிய சிகிச்சை முறைகள் அறிமுகமாகும்போதோ அவற்றைத் தமிழில் எப்படிச் சொல்வது என்னும் சிக்கல் எழும். உலகமயமாதலும் அப்படித்தான்.

Globalisation என்பதை மிக எளிதாக உலகமயமாதல் என்று தமிழ்ப்படுத்திவிட்டோம். Privatisation என்பதைத் தனியார்மயம் என்று சொல்லிவிட்டோம். Liberalisation என்பது தாராளமயம் என வழங்கப்படுகிறது. ஆனால், Global, Private என்பவைபோல Liberal என்பதை தாராளம் என்று சொல்லி முழுமையாகப் புரியவைத்துவிட முடியாது. Liberal என்பது சுதந்திரமான, கட்டற்ற, தாராளப் போக்கு கொண்ட எனப் பல விதங்களில் பொருள்படும். உலகமயம், தனியார்மயம் என்னும் சொற்களைப்போல தாராளமயம் என்னும் சொல் அது சுட்ட முனையும் பொருளை முழுமை யாகச் சுட்டவில்லை. வர்த்தகத் துறையில் கட்டுகளை / கட்டுப் பாடுகளைத் தளர்த்துதல் என்பதுதான் Liberalisation. ஆனால், இது அந்தச் சொல்லுக்கான சொல்லாக்கம் அல்ல, விளக்கம்.

சொல்லாக்கம் என்பது பெரும்பாலும் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். Liberalisation-ஐப் பொறுத்தவரை ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட முடியாது. எனவே அதன் மூலப் பொருளுக்கு அருகில் வரும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறோம். தொடர்ந்த பயன்பாட்டின் மூலம் அதை Liberalisation-க்கான தமிழ்ச் சொல்லாகப் பழக்கப்படுத்திவிடுகிறோம். நாளடைவில் இது Liberalisation க்கான தமிழ்ச் சொல்லாக நிலைபெற்று விடுகிறது. ஒரு சொல் ஒரு பொருளைத் தெளிவாகச் சுட்டத் தொடங்கிவிட்டால், அந்தச் சொல்லைக் கேட்டதும் அந்தப் பொருள் நம் நினைவுக்கு வந்தால் அந்தச் சொல்லாக்கம் நிலைபெற்றுவிட்டது எனப் பொருள். இந்த வகையில் தாராளமயம் என்பதை Liberalisation என்பதற்கான நிலைபெற்ற சொல்லாக்கமாகக் கருதலாம்.

கொசுறு: சுயேச்சை, சுயேட்சை எது சரி என்னும் ஐயம் பலருக்கு உள்ளது. சுய இச்சை என்பது சுயேச்சை ஆனது. இதில் ‘ட்’ என்னும் எழுத்துக்கு இடமில்லை.

(தேடுவோம்)

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

படம்: shutterstock

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in