

முன்பெல்லாம் மொழிபெயர்ப்புகள் என்றால், பெரும்பாலும் இலக்கிய மொழிபெயர்ப்புகள்தான். சமீப காலமாக இடதுசாரிச் சித்தாந்தம் சார்ந்த நூல்கள் நிறைய மொழிபெயர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருப்பவர் சுப்பாராவ். அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி.
மொழிபெயர்ப்பில் ஈடுபாடு வந்தது எப்படி?
அடிப்படையில் நான் சிறுகதையாளன். நான் பணிபுரியும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் எங்கள் தொழிற்சங்கத்தில், ஆங்கிலச் சுற்றறிக்கைகள் நிறைய வரும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதிலிருந்து மொழிபெயர்ப்பில் எனக்கு ஈடுபாடு வந்தது.
இதுவரை எத்தனை நூல்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்?
இதுவரை சிறியதும் பெரியதுமாக 25 நூல்கள் மொழிபெயர்த்திருக்கிறேன். மிகவும் வேலை வாங்கியது கடந்த ஆண்டு வெளிவந்த ‘உலக மக்களின் வரலாறு’ நூல்தான். மனித இனம் தோன்றிய காலம் முதல் இன்றைய உலகமயச் சூழல் வரையிலான மக்கள் வரலாற்றைச் சொல்லும் பெரிய நூல். பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்று அறிஞர் கிரிஸ் ஹார்மன் எழுதியது. அதில் ஆசிரியர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் எனக்குப் புதியவை. எனவே, மூலநூலைப் பல முறை படிக்க வேண்டியிருந்தது. மொழிபெயர்த்து முடித்த பின், எனது கைப்பிரதியையும், பின்னர் அச்சுப் பிரதியையும் நான்கு, ஐந்து முறை படிக்க நேர்ந்தது.
முன்பைவிட அதிகமாக இடதுசாரி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கு என்ன காரணம்?
எப்போதுமே இடதுசாரி நூல்கள்தான் தமிழில் அதிகமாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளதாக நினைக்கிறேன். மற்றவர் களைவிட இடதுசாரிகள் எப்போதுமே உலகளாவிய பார்வை கொண்டவர்கள். புதிய சிந்தனை எங்கு வந்தாலும் உடனடியாக அதைத் தமது இயக்கத்தினர் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். இன்றும் இந்த இயக்கத்தின் தோழர்களுக்குப் படிக்கும் ஆர்வம் இருக்குமளவு ஆங்கிலப் பரிச்சயம் இல்லை. தோழர் எஸ்.ஏ. பெருமாள் என்னைப் பார்க்கும்போதெல்லாம், “உங்க காலத்துல பரவாயில்லப்பா, எங்க காலத்துல மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்த்தா மட்டும் போதாது, அதை ஒவ்வொரு கூட்டத்துலயும் தோழர்களுக்குப் படிச்சு வேற காட்டணும்” என்பார்.
மொழிபெயர்ப்பை ஒரு தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சூழல் இருக்கிறதா?
இல்லவே இல்லை.
உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்கள்?
முன்னோடிகளில் சோவியத் இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்த ரா.கிருஷ்ணயைா, பூ.சோமசுந்தரம், பேராசிரியர் நா.தர்மராஜன், ஏ.ஜி.எத்தி ராஜுலு. சமகாலத்தில் கி.இலக்குவன், கி. ரமேஷ், ஆயிஷா நடராஜன், மலையாள மொழிபெயர்ப்புகள் செய்யும் குளச்சல் முகமது யூசுப், உதயசங்கர், கே.வி.ஷைலஜா ஆகியோர்.