அறிவோம் நம் மொழியை: சீண்டுதல், சீந்துதல், சுளிப்பு, சுழிப்பு

அறிவோம் நம் மொழியை: சீண்டுதல், சீந்துதல், சுளிப்பு, சுழிப்பு

Published on

தவறான பொருளில் வழங்கப்பட்டுவரும் சில சொற்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆவன செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் ஆவண செய்ய வேண்டும் என எழுதினால் இதிலுள்ள தவறு உடனே புரிந்துவிடும். ஆனால், சில தவறுகளை அப்படிக் கண்டுபிடித்துவிட முடியாது. உதாரணம், சுளிப்பு. இந்தச் சொல்லைச் சுழிப்பு என்று பலர் பயன்படுத்திவருகிறார்கள். முகச் சுளிப்புக்கு என்ன பொருளோ அதே பொருளில்தான் முகச் சுழிப்பு என்று என எழுதப்படுகிறது. ஆனால், சுழிப்பு, சுளிப்பு இரண்டும் வேறு வேறு.

சுளித்தல் என்பது அதிருப்தியைக் குறிக்க முகத்தில் ஏற்படும் நுட்பமான சிறிய மாறுதலைக் குறிக்கும் சொல். புருவ நெரிப்பு, கண்களில் ஏற்படும் சிறு சுருக்கம், மூக்கில் ஏற்படும் நுட்பமான அசைவு, கன்னக் கதுப்புகளில் எழும் சிறு அதிர்வு, உதட்டின் சிறு நெளிவு எனப் பல வகைகளில் இந்த அதிருப்தி வெளிப்படும். எரிச்சலை, கோபத்தை, வெறுப்பைக் காட்டும் அழுத்தமான பாவனைகள், அதற்கான முக அசைவுகள் வேறு. இது சிறிய, நுட்பமான அசைவு. அதிருப்தியை மட்டுமே தெரிவிக்கும் அடையாளம்.

சுழிப்பு என்பது வேறு. சுழற்சி என்பதோடு தொடர்புகொண்ட சொல் இது. நதியில் ஏற்படும் சுழியை, சுழிப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இப்போது முகச் சுழிப்பைக் கற்பனை செய்துபாருங்கள். முகத்தைச் சுழிக்க முடியுமா? சுளிக்கத்தான் முடியும்.

ஆனால், உதட்டுச் சுழிப்பு என்று சொல்லலாம். இதன் பொருள் வேறு. அதிருப்தியை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொய்க் கோபத்தை அல்லது ஊடலை வெளிப்படுத்தும் பாவனை இது. வேறு சில பாவனைகளையும் இந்தச் சுழிப்பு வெளிப்படுத்தும்.

உதட்டை வைத்துச் சுளிக்கவும் செய்யலாம்; சுழிக்கவும் செய்யலாம். ஆனால், இரண்டும் மாறுபட்ட உணர்வுகளிலிருந்து பிறப்பவை. எனவே மாறுபட்ட பொருளைத் தருபவை. எனவே, இரண்டு சொற்களையும் பரஸ்பரம் பதிலீடு செய்ய முடியாது. எதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.

சீண்டுதல் என்னும் சொல்லும் பல சமயம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சீந்துதல் என்னும் சொல்லின் பொருளில் பலர் இதைப் பயன்படுத்துகிறார்கள். சீந்துதல் என்பது ஒரு விஷயத்தைப் பொருட்படுத்துதல், கவனித்தல், மதித்தல். பெரும்பாலும் இது எதிர்மறையான பொருளில் எதிர்மறைச் சொல்லாக்கமாகவே பயன்படுத்தப்படும். ஒரு விஷயத்தை யாருமே கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையை ‘சீந்துவாரற்று இருக்கிறது’ என்று சொல்லலாம். மதித்துப் பொருட்படுத்தும் நிலையை ‘சீந்தும் வகையில்’ என்று சொல்லும் வழக்கமில்லை. சீந்துவாரற்று, சீந்தாமல், சீந்த ஆளின்றி என எதிர்மறைச் சொல்லாக்கமாகவே இது பயன்படுத்தப்படுகிறது.

சீண்டுதல் என்பது ஒருவரைத் தொல்லைப்படுத்துதல், வலியச் சென்று வம்புக்கு இழுத்தல், உசுப்பேற்றுதல். ஆங்கிலத்தில் Tease என்ற சொல்லுக்கு இணையானது இது. Eve Teasing என்பதைப் பெண் சீண்டல் என்று குறிப்பிடுவதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஒருவர் இன்னொருவரை tease செய்கிறார் என்றால், அவரைச் சீண்டுகிறார், வம்புக்கு இழுக்கிறார், தொல்லை தருகிறார் என்று பொருள். கோபத்தைக் கிளப்புதல் என்றும் இது பொருள்படும். ‘சும்மா இருக்கும் சிங்கத்தைச் சீண்டிவிடாதே’ என்னும் சொலவடையை இங்கே நினைவுகூரலாம். ஆனால், சீண்டுதல் என்பதைப் பொருட்படுத்துதல் என்னும் பொருளில் பலரும் இப்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

சீந்துதல் - சீண்டுதல், சுளிப்பு - சுழிப்பு ஆகிய சொற்களின் ஒலிக் குழப்பமே இந்தப் பொருள் குழப்பங்களுக்கும் காரணம். பேச்சு வழக்கில் ஒலிக் குழப்பம் இருக்கலாம். ஆனால், சற்றே கவனமாக இருந்தால் எழுத்தில் இவற்றைச் சரியாகப் பயன்படுத்த முடியும். ஐயம் ஏற்படும்போது நல்லதொரு அகராதியைப் பார்க்கும் பழக்கம் இருந்தால், இதுபோன்ற தவறுகளைக் களைந்துவிடலாம்.

ஐயம் ஏற்பட்டால்தானே பிரச்சினை என்கிறீர்களா?

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in