மைதானத்தைத் திறந்துவிடுங்கள்!

மைதானத்தைத் திறந்துவிடுங்கள்!
Updated on
3 min read

குழந்தைகளை விளையாட்டுகளிலிருந்து விலக்கிவைக்கும் நிலை மாறாதவரை சாதனைகளை எதிர்பார்க்க முடியாது

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியா, ரியோ ஒலிம்பிக்சில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்கக் கணக்கை முடித்துக்கொண்டது. கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொண்டு தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் நிலைதான் இந்தியாவுக்கு.

வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கோடி கோடியாகப் பணம் குவிகிறது. ஆனால், இவரைப் போன்ற இளம் சாதனையாளர்களை உருவாக்குவதில் எத்தனை பொது அமைப்புகள் செயல்படுகின்றன? விளையாட்டு வீரர்களான பெற்றோர் அமைத்துக்கொடுத்த அடித்தளம், பயிற்சியாளர் கோபிசந்த் அளித்த கடுமையான பயிற்சி இவற்றுடன் சிந்துவின் அபாரமான திறனும் சேர்ந்து உலக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியுள்ளன.

பெற்றோரின் அர்ப்பணிப்பு

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற, பார்வைக் குறைபாடுள்ள அபினவ் பிந்த்ராவுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊக்கமளித்த அவரது கோடீஸ்வர அப்பா, வீட்டிலேயே தனது மகனுக்காகப் பயிற்சி மையத்தை அமைத்துக் கொடுத்தார். தலைசிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறவைத்தார். இந்த முனைப்பும் பக்கபலமும்தான் தங்கப் பதக்கத்தை வெல்ல வைத்தன. தனி நபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப்பதக்கம் இதுவரை இது மட்டுமே.

ஒரு சாமானியப் பால் வியாபாரியான பஞ்சம் யாதவ், மல்யுத்தத்தில் வீரராக வேண்டும் என்ற தனது கனவைத் தன் மகன் நரசிங் யாதவ் மூலம் நனவாக்கிக்கொண்டார். மும்பையில் பால் வியாபாரம் செய்த அவரும், உத்தரப்பிரதேசத்தில் விவசாயம் செய்து வந்த அவரது மனைவியும் தங்கள் வருமானத்தை எல்லாம் மகனுக்கு அனுப்பி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்த்துவிட்டனர். சொற்ப வருமானம் முழுவதையும் இந்தப் பெற்றோர் மகனுக்காவே செலவிட்டனர்.

2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நரசிங் யாதவை, ஊக்க மருந்து சர்ச்சை, ரியோ மல்யுத்தப் போட்டிக்களத்தில் கால் பதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அடியோடு சாய்த்தது. ஜூனியர் வீரர் ஒருவர் அவருக்குத் தெரியாமல் உணவில் ஊக்க மருந்து கலந்ததாகக் கூறப்பட்டது. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அவரை நிரபராதி என்றது. இறுதியில் அவரால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

தேசியப் போட்டியானாலும், சர்வதேசப் போட்டியானாலும் அதில் தகுதி பெறுவதற்குப் பல நயவஞ்சக சூழ்ச்சிகள், அரசியல் தில்லுமுல்லுகள் என்ற நெருப்பாற்றை நீந்தி வர வேண்டியுள்ளதுதான் பெரும் சோகம். இதையெல்லாம் விட மிகப் பெரிய சோகம், விளையாட்டு குறித்த நமது மனோபாவம்தான். அரசாங்கம் நடத்தினாலும், தனியார் நிர்வாகமாக இருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுப் பயிற்சி என்பது, மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் திறனை மழுங்கடித்துவிடும் என்பது ஆசிரியர், நிர்வாகம், பெற்றோர் என்ற முத்தரப்பினரின் முடிவான கருத்து.

விளையாட வாய்ப்பில்லை

இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னை சேத்துப்பட்டுப் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு குழந்தைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்தில் பிடித்தது, பிடிக்காதது குறித்துப் பேச்சு வந்தது. அப்போது ஒரு மாணவன், ‘டெய்லி விளையாட விடவே மாட்டேங்கறாங்க சார்’ என்று கூறினான்.

பள்ளிக்கூட மாணவர்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு, கால்பந்தாட்டத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, சிறந்த வீரர்களாக உருவாக்குவதற்காகக் களமிறங்கியது. சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பெரிய மைதானம் இருந்ததால், அந்தப் பள்ளியில் தெரிவு செய்யப்பட்ட 64 மாணவர்களுக்கு, 2014 கோடை விடுமுறையில் இரு வாரப் பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தியது.

தினமும் காலை இரண்டு மணிநேரம் பதினைந்து நாட்களாக இந்தப் பயிற்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. அனைத்து நாட்களிலும் 64 மாணவர்களும் குறித்த நேரத்தில் வந்தனர். ஆனால் பயிற்சி பெற்ற மாண வர்களின் திறனை மேம்படுத்துவதில், அந்தப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இருவரிடமும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்த ஆர்வமும் வெளிப்படவில்லை.

இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு அனுமதி அளித்த சென்னை மாநகராட்சியின் அன்றைய ஆணையர், விக்ரம் கபூர், மாணவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் பங்கேற்றதை அறிந்ததும், கல்வியாண்டு முழுவதும் கால்பந்தாட்டப் பயிற்சி அளிக்குமாறு அந்தத் தன்னார்வ அமைப்பினரிடம் அறிவுறுத்தினார். தேவையான உதவிகள் அளிப்பதாக உறுதியும் அளித்தார். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை அனுமதியுடன் வாரம் மூன்று நாள் பயிற்சி அங்கு தொடங்கியது. திடீரென்று ஒருநாள் பொக்லைன் இயந்திர வாகனம் பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது. பல பணியாளர்களும் குவிந்தனர். ஓரிரு வாரத்திற்குள் செயற்கைப் புல்வெளி, ஃபிளட்லைட் வசதியுடன் உலகத் தரம் வாய்ந்த ஆடுகளம் உருவானது.

அந்தச் சமயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை புதிய ஆடுகளத்தைப் பூட்டிவிட்டார். அவரிடமும் சென்னை மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடம் முறையிடப்பட்டதும், மாணவர்கள் விளையாடுவதற்காக புதிய ஆடுகளத்தை உடனடியாகத் திறந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார். கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் அந்த நவீன ஆடுகளத்தில் கால்பந்து பயிற்சி தொடங்கியது.

இதையடுத்து, அந்தத் தலைமை ஆசிரியைக்கும் தன்னார்வ அமைப்புக்கும் இடையே பனிப்போரும் தொடங்கியது. தனது உத்தரவை மதிக்காமல் ஆணை யரிடம் நேரடியாக அனுமதி பெற்றதால் தலைமை ஆசிரியை கோபம் கொண்டார். பயிற்சி அளிப்பவர், தன்னார்வ அமைப்பு மற்றும் மாணவர்களுக்கு, தேவையற்றக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆடுகளத்தில் கட்டப்பட்டிருந்த கழிவறையும் விளையாடுப் பொருட்கள் வைப்பதற்கான அறையும் நிரந்தரமாகப் பூட்டப்பட்டன.

புறக்கணிப்புகள்

சென்ற ஆண்டு செப்டம்பரில் பெங்களூருவில் பதினான்கு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்க மாநகரட்சியின் அப்போதைய கல்வித் துறை துணை ஆணையாளர் ஷில்பா பிரபாகரின் அனுமதியுடன் 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் பழைய தலைமையாசியை ஓய்வு பெற்றதால், புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்றார். பெங்களூரு போட்டியில் கலந்துகொள்ளும் செலவுக்காக 30,000 ரூபாய் நிதியையும் துணை ஆணையர் அனுமதி அளித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் அந்தப் போட்டிக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல் மாணவர்களை நோக அடித்தது.

இப்படிப் பல பிரச்சினைகளால் தனது பயிற்சித் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு அந்தத் தன்னார்வ அமைப்பு தள்ளப்பட்டது. அதன் நிறுவனர் அலைக் கழிக்கப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். மிக உயர்ந்த அரசுப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற தனது நண்பரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டிப் புலம்பினார். அதன் பிறகு மாய மந்திரம் போல் அனுமதி கிடைத்தது. இப்போது கால்பந்தாட்டப் பயிற்சி தொடர்கிறது.

மனம் விரியட்டும்

நம் பள்ளிக்கூடங்கள் விளையாட்டுத் திறனை எப்படிப் பார்க்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். பல பள்ளிகளில் விளையாட்டுக்கான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் பள்ளிகள் பலவும் அளிப்பதில்லை. மாணவர்களுக்கு உதவ முன்வரும் தனியார் / தன்னார்வ அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இப்படிப்பட்ட அணுகுமுறை மாறாவிட்டால், பள்ளிக்கூட மைதானம், சாதனையாளர்களின் உருவாகும் களமாக எப்படி மாறும்? பதக்கங்களை வெல்லும் வீரர்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. அவர்கள் நமது மைதானங்களிலிருந்துதான் உருவாக வேண்டும். மைதானங்களை மாணவர்களுக்குத் திறந்துவிட வேண்டும். அதற்கு நமது பள்ளி நிர்வாகத்தினரின் மனங்கள் விரிவடைய வேண்டும்.

- மு.சிவலிங்கம், ஊடகவியலாளர், ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: mushivalingam@yahoo.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in