Last Updated : 07 Oct, 2013 10:54 AM

 

Published : 07 Oct 2013 10:54 AM
Last Updated : 07 Oct 2013 10:54 AM

பயன்படுத்தாத சுதந்திரம்

பிரான்ஸ் அரசியலில் எப்போதுமே சில நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. பிரான்ஸில் தேர்தலில் பணத்தின் புழக்கத்தைக் குறைக்க, 10 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெறும் வேட்பாளர்களுக்கு அரசாங்கமே அவர்களின் தேர்தல் செலவுகளில் 50 % திருப்பிக் கொடுத்துவிடுகிறது (ஜனாதிபதி தேர்தல் செலவுக்கான அளவுகோல் 22.5 மில்லியன் யூரோக்கள்.)

அதைக் கணக்கிட்டுச் சரிபார்க்கும் பொறுப்பு ஓர் அரசாங்க அமைப்புக்கு உண்டு. இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு அந்நாட்டின் மேலவையின் கீழ் வருகிறது. இப்போது அதன் தலைவராகப் பொறுப்பு வகிப்பவரும் மற்றும் சில உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியால் நியமிக்கப்பட்டவர்கள். இருப்பினும், தேர்தலில் தோல்வியடைந்த சர்கோசி சமர்ப்பித்த கணக்கு வழக்கில் சில செலவுகளை அவர் சேர்க்கவில்லை என்று கூறி, அந்தச் சபை அவர் செலவுசெய்த பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டது. அவர் அதிபராகக் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் என்றும் மேலும் சில பிரச்சாரக் கூட்டங்களின் செலவுகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை என்றும் அந்தச் சபை குற்றம்சாட்டியது. முடிவில், எல்லையைத் தாண்டிவிட்டார் என்று அறிவித்து, சர்கோசியின் தேர்தல் செலவைத் திருப்பித் தர மறுத்துவிட்டது.

அந்தச் சபை எடுத்த முடிவில் அவரின் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும், அதன் தலைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதனால், குடியரசுக் கட்சி மிகப் பெரிய பண நெருக்கடிக்கு ஆளானது. முன்னாள் அதிபரும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களும் சேர்ந்து கட்சியின் கடன்களை அடைத்தனர். இந்த விஷயத்தில் சோஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. அரசு விழாவா அல்லது தேர்தல் பிரச்சாரமா என்று தீர்மானிப்பதில் ஊடகங்களில் உள்ள ஒளி, ஒலி ஆதாரங்கள் மிக முக்கியம்.

அதேபோல், பிரச்சாரத்தின்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஃப்ராங்சுவா ஹொல்லாந்தின் துணைவியாரைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார். உடனே, சர்கோசி முதற்கொண்டு அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இதை வன்மையாகக் கண்டித்தார்கள். பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால் ஊடகங்கள் அதை வன்மையாக எதிர்க்கும். அந்த ஊடகங்களில் மிக முக்கியமான ஊடகம் ‘கனார் ஆஷினெ’(‘canard enchaine’- கட்டப்பட்ட வாத்து) என்ற பெயர் கொண்ட ஒரு பத்திரிகை. பல அரசியல் சர்ச்சைகளை, பல ரகசியங்களை, பல ஊழல்களை, அரசியல்வாதிகளோ உயர் அதிகாரிகளோ செய்யும் தவறுகளை விடாது பிரசுரித்து இன்று வரை தனக்கென்று மிகப் பெரிய கௌரவத்தையும் பெருமையும் சேர்த்துள்ள, ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு வார இதழ். அதன் முதல் பக்கத்தில் வரும் பொன்மொழி, ‘பயன்படுத்தாத சுதந்திரம்தான் பழுதாகும்’.

பல சந்தர்ப்பங்களில் அந்த ஊடகத்துக்கு அரசியல்வாதிகள் பல விதங்களில் நெருக்கடி கொடுத்தார்கள். அவர்கள் பிரசுரிக்கும் பல ரகசியங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பது இன்று வரை அனைவருக்கும் புரியாத புதிர்.

இறுதியாக அதிபர் ஃப்ராங்சுவா ஹொல்லாந்தின் சோஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சருக்கு சுவிட்சர்லாந்தில் வங்கிக் கணக்கு இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டது. (இது வரி ஏய்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியது). சில மாதங்களிலே அவர் அமைச்சர் பதவியையும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் இழந்தார். அவர் இப்படி அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டதற்கு மிகவும் முக்கியமான காரணம், அவர் தனக்கு அப்படி ஒரு வங்கிக் கணக்கு இல்லவே இல்லை என்று ஒரு ஊடகத்தில் மறுத்ததுதான். பொய் சொன்ன குற்றத்துக்காக அவர் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் அந்நாட்டு மக்களின் பிரதிபலிப்பு என்பதுதான் உண்மை.

குமரன் வளவன், இயற்பியலாளர், நாடகக் கலைஞர் - தொடர்புக்கு: valavane@yahoo.fr

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x