

அல் ஷபாபின் அடுத்த குறி உகாண்டாவாக இருக்கலாம் என்று அமெரிக்க சோதிட வல்லுநர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். சோமாலிய உள்நாட்டு யுத்த காண்டத்தில் ஐநாவின் (அமெரிக்காவின் என்றும் பாடம்.) ஆதரவுடன் போரிட்ட சோமாலிய மிலிட்டரிக்கு, கென்யாவும் உகாண்டாவும் விளக்கு பிடித்ததற்கு பதில் மரியாதையாக இது நிகழ்த்தப்படக்கூடும் என்பது கணிப்பு.
நைரோபி ஷாப்பிங் மால் களேபரத்தைக் காட்டிலும் பன்மடங்கு வீரியத்துடன் இத்தாக்குதல் திட்டமிடப்படலாம் என்று பல்வேறு ஆப்பிரிக்க தேசங்களின் உளவுத்துறைகள் அஞ்சுகின்றன. துரதிருஷ்டவசமாக உகாண்டா அரசுக்கு ஓர் உத்தமமான உளவுத்துறை இன்னும் வாய்க்கவில்லை. இருப்பதெல்லாம் வெறும் வெத்து என்று அதிபரே மூக்கால் அழுகிற மாதிரிதான் நிலைமை இருக்கிறது. ராணுவமும் ஒன்றும் பலம் பொருந்தியதல்ல. மிஞ்சிப் போனால் நாற்பது, நாற்பத்தையாயிரம் பேர் லெஃப்ட் ரைட் போடத் தயாராக இருக்கும் பொம்மை ராணுவம்தான்.
கீதையிலே பகவான் சொன்னதை யார் கேட்கிறார்களோ இல்லையோ, உகாண்டா அதிபர் உளமார நம்பி ஏற்றுக்கொண்டு பரிபூரண சரணாகதி டெக்னாலஜியைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார். என்ன ஆனாலும் அமெரிக்கா பார்த்துக்கொள்ளும். இன்று நேற்றா இந்த உறவு மலர்ந்தது? அது ஆயிரம் காலத்துப் பயிர். இருபத்தியேழு வருஷங்களாக எந்தப் பிரச்னையும் இல்லை. உகாண்டா ஏழை நாடுதான். பஞ்சத்தில் மலர்ந்த பருத்திக் கொட்டைதான். ஊழலில் உலகத்தரம் காட்டும் உத்தம தேசம்தான். கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்நுட்பம், மண்ணாங்கட்டி எதிலும் இன்னும் முன்னுக்கு வந்தபாடில்லை. அதனாலென்ன? அமெரிக்காவின் ஆசீர்வாதம் இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு அது ஒரு டெண்ட்.
இனக்குழுக் கலவரங்களுக்குப் பேர் போன தேசம் உகாண்டா. இதனாலேயே அதிபர் யோவேரி ககூட்டா முசெவனி உதிரி அரசியல் இயக்கங்களுக்கு உள்நாட்டில் படுபயங்கரக் கட்டுப்பாடுகள் போட்டு வைத்திருக்கிறார். ஜனநாயக தேசம் என்றுதான் பேர். எலக்ஷன் நடக்கும். வோட்டுப் போடுவார்கள். அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் பிரதிநிதிகள் பார்லிமெண்ட்டுக்குப் போவார்கள். ஆனாலும் அதிகாரமெல்லாம் அதிபரிடம்தான் இருக்கும் என்னும் உன்னதமான சித்தாந்தம் ஜீவித்திருக்கும் தேசம். இல்லாவிட்டால் இருபத்தியேழு வருஷமெல்லாம் யாரால் முடியும்?
கிடக்கட்டும்; இப்போதைய பிரச்னை அல் ஷபாபின் அடுத்த குறி என்று உகாண்டா தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தேசம் முழுவதையும் அலர்ட் செய்து ஜாக்கிரதையாக இருங்கள் என்று போஸ்டர் அடித்து வேண்டுமானால் ஒட்டலாமே தவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்வதென்று அதிபருக்குப் புரியவில்லை. ஒப்பீட்டளவில் உகாண்டாவைவிடப் பல மடங்கு பாதுகாப்பு பலம் பொருந்திய கென்யாவுக்கே தண்ணி காட்டியவர்கள், இங்கே புகுந்து கலவரப்படுத்துவதா கஷ்டம்?
ஏற்கெனவே 2010ல் கம்பாலாவில் இரண்டு உணவு விடுதிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த நல்லவர்கள் மத்தியில் குண்டு போட்டு எழுபது பேரைக் கொன்ற அனுபவம் அல் ஷபாபுக்கு இங்கே இருக்கிறது. அதே மாதிரிதான் திரும்ப நடக்குமா அல்லது வேறு மாதிரியா? எச்சரிக்கை வந்த உடனேயே உகாண்டாவின் வர்த்தக முதலைகள் கடையைக் கட்டிவிட்டு ஊராந்திரம் போக ஆயத்தமாகிவிட்டார்கள். அமெரிக்கா பார்த்துக்கொள்ளும் என்றுதான் அதிபராகப்பட்டவர் இப்போதும் நம்புகிறார்.
ஆனால் ஆப்பிரிக்க தேசங்களில் சரியான உளவுத்தகவல் பெறுவதில் அமெரிக்கப் படைகளுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களால் ராணுவ உதவி செய்ய முடியும். ஆலோசனைகள் வழங்க முடியும். ஆயுத சப்ளை முதல் ஆள் சப்ளை வரை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமே தவிர உளவு கஷ்டம். அது உள்ளூர் ஜோலி. அரசுதான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதைத்தான் எப்படிச் செய்வதென்று அதிபர் யோசித்துக்கொண்டிருக்கிறார்.
அல் ஷபாபுக்கு உகாண்டாவிலேயே கிளை அல்லது ஃப்ராஞ்சைசீஸ் உண்டா என்கிற சுக்லாம் பரதரம் ஆராய்ச்சி இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. காலக்கிரமத்தில் முழு விவரம் கண்டுபிடித்து முடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதற்குள் அல் ஷபாப் தன் ஜோலியை முடித்துவிட்டுப் போய்விடாதிருக்க வேண்டும்.