Published : 04 Jul 2016 09:38 AM
Last Updated : 04 Jul 2016 09:38 AM

பிரெக்ஸிட்: பின்னணியும் தீர்வுகளும்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது இரு தரப்புக்கும் தோல்விதான்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் - பிரிட்டன் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவால் உலகம் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. ஆனால், நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

ஐரோப்பாவின் முக்கிய சக்தியாகவும், தாராளவாத ஜனநாயகம், பன்மைத்துவம், சுதந்திரச் சந்தை ஆகியவற்றின் நீண்டகால ஆதரவு சக்தியாகவும் இருக்கும் பிரிட்டன், குடியேற்றம் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைத் தங்கள் சுய முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட இழிவான சில அரசியல் தலைவர்களின் ஆதிக்கத்தால் வீழ்ந்திருக்கிறது. மக்களில் சிலர் மட்டும் புரிந்துகொண்டிருக்கும் மிகச் சிக்கலான விவகாரமான, ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, வெளியேறுவதா எனும் பிரச்சினையில் இரண்டில் ஒன்றை முடிவு செய்தாக வேண்டும் எனும் சூழலை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

முடிவுக்கு வந்துவிடாதுதான். ஆனால்..

காரைத் துரத்தும் நாய் ஒருபோதும் காரைப் பிடித்துவிடாது என்று கருதும் இந்த அரசியல் தலைவர்கள், அத்தனை முக்கியத்துவம் இல்லாத ஒரு விஷயத்துக்கு எதிரான நிலையை எடுத்தார்களே தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களிப்பதன் மூலம் மக்கள் சந்திக்கும் விளைவுகளை, பிரச்சினைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாகப் பொய்கள் நிறைந்த, அச்சத்தை விதைக்கக்கூடிய, திசைதிருப்பும் பேச்சுக்களின் மூலம் விவாதத்தின் தன்மையைக் குறைத்தார்கள். சரி, காரை நாய் தொட்டுவிட்டது. அதற்குப் பிறகு, என்ன செய்வது என்று அதற்குத் தெரியாது. அதாவது, ஒரு திட்டமும் இல்லை... வெறுமனே குரைப்பதைத் தவிர!

முன்பு சொன்னதுபோல், இதனால் உலகம் முடிவுக்கு வந்துவிடாதுதான். ஆனால், இன்னும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தினால், நம் கையில் ஒன்றும் மிஞ்சாது. டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை: கடினமான கேள்விகளுக்கெல்லாம் எளிய பதில்கள் உண்டு என்று கருதுகிற, சிக்கலான பெரிய பிரச்சினைகளைச் சிறிய மனிதர்களால் மாற்றியமைக்க முடியும் என்று கருதுகிற, ஒரு சுவரை எழுப்புவதன் மூலம் எல்லாமே வளமாகிவிடும் என்றும் கருதுகிற மோடி மஸ்தான்களின் வசம் நாடு சென்றால் இதுதான் நடக்கும்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பிரிட்டனுக்குச் சரியான தீர்வல்ல என்பதுடன், மக்கள் ஏதோ ஒரு பிரச்சினையால் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர். நம் காலத்தின் கதை இது: தொழில்நுட்பம், உலகமயமாக்கல், பருவநிலை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், சமூகம், கல்வி, பணியிடம் மற்றும் அரசியலில் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கான நமது அரசியல் முறையின் திறனைவிட அதிவேகத்தில் இயங்குகின்றன.

அர்த்தம் இழந்த ‘சொந்த இல்லம்’

மக்கள் இந்த மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு ஆகியவற்றை வடிவமைப்பதில் வேகம் காட்டுவதைவிடவும், அதிவேகத்தில் வர்த்தகத்தையும் உற்பத்தியையும் உலகமயமாக்கிவிட்டோம்; ரோபோக்களையும், செயற்கை நுண்ணறிவு முறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இது பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம், நாடுகளின் எல்லைகளை வசதியாகத் திறந்துவைத்திருக்கிறோம்; தோல்வியுற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சட்டவிரோதமாகக் குடியேறுவதைப் பார்த்துவருகிறோம். கலாச்சார ரீதியாகத் தங்கள் வேர்களை இழந்திருப்பதாகவும், தங்கள் ‘சொந்த இல்லம்’ என்பதன் ஆழமான அர்த்தத்தை இழந்திருப்பதாகவும் மக்கள் உணர இதுவும் காரணமாகியிருக்கிறது. குடியேற்றத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக ஐரோப்பாவின் கள நிலவரத்தைப் பொறுத்தவரை, குடியேறிகளை அனுமதிக்கும் நாடுகள் தங்கள் சொந்த மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும், குடியேறிகள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்வதிலும் தவறுவதுதான் முக்கியப் பிரச்சினை. சமூக ஸ்திரத்தன்மைக்கு இவை இரண்டும் மிக முக்கியம்.

இப்படியான துரித மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், நமது அரசியலோ அடிப்படைப் புரிதலுடன் இவற்றை அணுக முடியாத அளவுக்கு முடங்கிக் கிடக்கிறது. உதாரணத்துக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்நுட்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும் வகையில், மிகவும் அவசியமான உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளில் முதலீடு செய்ய அரசுகள் வட்டியில்லாத கடன் வாங்குவது போன்ற பணிகளைச் செய்யலாம்.

ஒற்றுமையின்மைதான் பிரச்சினை

“கடந்த 2008-லிருந்தே மேற்கத்திய நாடுகளின் அரசியல் சக்திகள் தங்கள் நேர்மை மற்றும் பொறுப்பு விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டன. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான வாக்கெடுப்பைப் பயன்படுத்தி, தங்கள் பொறுப்பைக் கைகழுவும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது” என்கிறார் லண்டனில் உள்ள ‘மேக்ரோ அட்வைசரி பார்ட்னர்ஸ்’எனும் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான நாடேர் மவுசாவிசாதே.

“நம் முன்னே இருக்கும் பிரச்சினை குடியேற்றம் அல்ல; ஒற்றுமையின்மைதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லும் நாடேர், ஐரோப்பாவின் பெரும்பான்மையான நகரங்களில் உள்ள உண்மை நிலவரத்தைச் சொல்கிறார். “பன்மைத்துவம் கொண்ட, பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயம் இங்கு அமைதியான முறையில் வாழ்ந்துவருகிறது. இது ஏராளமான பலன்களையும், வளத்தையும் உருவாக்கித் தந்திருக்கிறது. எனவே, குடியேற்றத்தால் பிரச்சினை ஏற்படுகிறதா என்று விவாதிப்பதை விட்டுவிட்டு, அரசியல், பொருளாதாரத் தளத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்கிறார். சமூக ஒற்றுமை தோல்வியடைந்தால், 21-ம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஏற்ப பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது நிறுவனங்கள் வளர்ச்சியடைய முடியாது.

‘பிரெக்ஸிட்’டைச் சரிப்படுத்துமா ‘ரெக்ஸிட்’

உண்மையில், என்னைப் பொறுத்தவரை, பன்மைத்துவத்தைச் சிறப்பாகப் பேணும் நாடுகள்தான், 21-ம் நூற்றாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். அந்நாடுகள் பெரிய அளவில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பெறும். திறமையாளர்களை ஈர்ப்பதாகவும், பல்வேறு தரப்பு மக்களுடன் உறவாடும் வகையிலும் அந்நாடுகள் இருக்கும். ஆனால், இது கடினமான விஷயம்.

தொழில்நுட்பம் நம்மை நெருக்கமாக இணைத்து வைத்திருப்பதுடன், புத்தாக்கம், அறிவு, தொடர்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டைப் பயன்படுத்திக்கொள்பவர்களுக்குத்தான் எதிர்காலமே தவிர, எல்லைச் சுவர் எழுப்புகிறவர்களுக்கு அல்ல. ஒற்றுமையை ஏற்படுத்துபவர்களுக்குத்தான் நல்ல பலன்கள் கிடைக்குமே தவிர, பிரிவினையை ஏற்படுத்து பவர்களுக்கு அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்பது இரு தரப்புக்கும் தோல்வி தரும் விஷயம்தான். ‘பிரெக்ஸிட்’ ஏற்படுத்திய பாதிப்பை, ‘ரெக்ரெஸிட்’ (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்கும்) பிரச்சாரம் சரிப்படுத்தும் என்றும், அமெரிக்கர்கள் டொனால்டு டிரம்பைத் தோற்கடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

“இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய நாசத்துக்குப் பின்னர் உருவான ஐரோப்பிய ஒன்றியம், உலகில் அமைதி, வளம், ஜனநாயகம் ஆகியவற்றை ஏற்படுத்தும் சக்தியாக உருவானது” என்று சொல்லும் ‘நியூ எகனாமிக் திங்கிங்’ நிறுவனத்தின் செயல் இயக்குநர் எரிக் பெய்ன்ஹாக்கர், “மனித குலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று இது. அது சிதைந்துபோகவிடுவதற்குப் பதில் ‘பிரெக்ஸிட்’ உருவாக்கிய அதிர்ச்சியை, புதிய ஐரோப்பாவை உருவாக்குவதற்கும், மறுவடிவாக்கம் செய்வதற்கும், சீர்திருத்துவதற்கும் நாம் பயன்படுத்த வேண்டும்” என்கிறார் உறுதியாக!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x