Last Updated : 12 Nov, 2013 12:00 AM

 

Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

கிராமியக் கலைகளுக்கு யார் பாதுகாப்பு?

சுமார் 26 வருஷங்களுக்கு முன்பு கலை இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதனுடன் கேரள மாநிலம் திரிசூர் மாவட்ட கிராமம், பகவதி கோயிலுக்குத் தோல்பாவைக் கூத்து பார்க்கப் போயிருந்தேன். கூத்து ஆரம்பிப்பதற்கு முன்னால் கோயிலில் நடந்த சடங்குகளிலும், கூத்து முடிந்த பிறகு கோயிலைச் சார்ந்தவர்களும் கோயில் வெளிச்சப்பாடும் (சாமியாடி) கூத்துக் கலைஞர்களிடம் நடந்துகொண்ட முறை, அவர்களை நடத்திய விதம் எங்களுக்கு வியப்பாக இருந்தது.

கூத்து முடிந்த பின் நாகர்கோவிலுக்கு வந்தோம். வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்தார். ஒரு செவ்வாய்க்கிழமையில் கன்னியாகுமரி - திருநெல்வேலி மாவட்ட எல்லையில் இருந்த குக்கிராமத்துக்குக் கணியான் ஆட்டம் பார்க்கப் போனோம். புகழ்பெற்ற கலைஞர் கலைமாமணி அமரர் இராமசுப்புக் கணியானின் நிகழ்ச்சி. அவர் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். உன்னதமான கலைஞர்.

அவமானம்தான் சன்மானமா?

அன்று நடு இரவு சாமியாட்டம் முடிந்ததும் இடைநேரத்தில் இராமசுப்புவுடன் பேசிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரந்தான், 20 வயது இளைஞர் ஒருவர் வந்தார். “ஓய்… இராமசுப்பு, என்ன கதவிட்டுட்டு இருக்கீரு… குலவாள இசக்கிக்குப் பாடணும், கூப்பிடுறாக” என்று அதட்டியபடி அவரை அழைத்தார்.

இராமசுப்பு தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த இளைஞனின் பின்னால் குழந்தையைப்போல் ஓடினார். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த வெங்கட் சாமிநாதன், கேரளத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கிருஷ்ணன் குட்டிப் புலவருக்குக் கிடைத்த மரியாதையை விஸ்தார மாகச் சொன்னார். இராமசுப்பு இசக்கிக்குப் பாடிவிட்டு, எங்களிடம் வந்தபோது சலனமின்றி இருந்தார்.

அவருக்கு, தான் கலைஞன்; அவ னுக்கு இறுமாப்பு ஒன்றுதான் சொத்து என்பதெல்லாம் தெரியாது. அவமானத்தைத் தாங்கிப் பழக்கப்பட்டுவிட்டார் என்று அவரது நடைமுறை காட்டியது. நான் கடந்த 30 ஆண்டுகள் அனுபவத்தில் இராமசுப்புவைப் போன்ற கலைஞர் பலரைக் கண்டிருக்கிறேன். இதில் பெண் கலைஞர்களின் நிலையைச் சொல்லி முடியாது. இதுபோன்ற அவலம் தமிழ் மண்ணுக்கு மட்டும் ஏன் விளைந்தது?

அடையாளம் தொலைகிறது

நானும், என். ராமச்சந்திரனும் இரண்டு ஆண்டுகள் தமிழகக் கிராமக் கலைகள் குறித்துச் செய்திகள் சேகரித்தோம். எங்கள் சேகரிப்பின்வழி தமிழகத்தில் வழக்கில் இருந்த 102 கிராமியக் கலைகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. இவற்றில் ஆறு கலைகள் அப்போதே அழியும் நிலையில் இருந்தன. மொத்தக் கலைகளில் துணைக் கலைகளாக உள்ளவை 29. தமிழ் அல்லாத பிறமொழி பேசிய கலைஞர்கள் நிகழ்த்தியவை 14. பொருள்களால் அல்லது இசைக் கருவிகளால் மட்டும் நிகழ்த்தப்பட்டவை 28 என்னும் புள்ளிவிவரங்களும் கிடைத்தன. இவற்றில் பெரும்பாலான கலைகள் புராணம் அல்லது வழிபாட்டுச் சடங்குகளுடன் தொடர்புடையவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2011) குப்பம் பல்கலைக்கழகத்துக்காகத் தமிழகக் கிராமியக் கலைகளின் விவரங்களைத் தயாரித்த பேராசிரியர் தனஞ்செயன், ‘‘துணைக் கலைகளில் 12-ம் வழிபாடு சாரா கலைகளில் 40 விழுக்காடும் நிகழ்த்தப்பட வில்லை’’ என்றார். மேலும் அவர், குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நிகழ்த்திய கலைகளும் தமிழைத் தாய்மொழியாகப் பேசாதவர் நிகழ்த்தும் கலைகளும் அடையாளமில்லாமல் ஆகிவருவதையும் குறிப்பிட்டார்.

ஊடகங்களின் பரவுதலால், கிராமியக் கலைகள் மறைந்துவருகின்றன என்பது பொதுவான காரணமாக இருந்தாலும், தமிழகத்தின் நிலை வேறு. கிராமியக் கலைகளின் சரிவுக்கும் கலைஞர்கள் அடையாளம் இழப்பதற்கும் தமிழகத்தின் அரசியல் சூழலும் உயர்வு மனப்பான்மை கொண்ட இலக்கியச் சூழலும் காரணங்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

செழிப்பான எழுத்திலக்கி யங்களோ மிகப் பழமையான பண்பாடோ இல்லாத மொழிகள், தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த வாய்மொழிப் பாடல்களைத் தேடிச் சென்றன. பண்பாட்டு மரபும் செழித்த எழுத்திலக்கிய மரபும் உள்ள மொழி பேசிய வர்கள் தங்களை உயர்வாகவே கருதினர். இவர்களின் உயர்வு மனப்பான்மை வாய்மொழி மரபையும் கிராமியக் கலைகளை யும் புறக்கணித்தன. இந்த வகையில் தமிழும் அடங்கும்.

தெருக்கூத்துக்குப் பூசப்படும் மதச்சாயம்

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு களில் சிற்றிலக்கியங்களையும் தலபுராணங்க ளையும் அச்சிட ஆர்வங்காட்டிய அறிஞர்கள், தெருக்கூத்தைப் பொருட்டாகவே மதிக்கவில்லை. மதம், வழிபாடு, புராணங்களை விமர்சித்து அரசியல் நடத்தியவர்களும் மொழி யின் ஒருகூறுதான் கிராமியக் கலைகளும் என்று நினைக்கவில்லை. தமிழரின் உன்னதமான அடையாளமான தெருக்கூத்தை மதச்சாயம் பூசியே இவர்களும் பார்த்தனர்.

இதுபோன்ற நிலை தமிழருக்கு மட்டும் தானா? கேரளத்து மார்க்சிய வாதிகளுக்குப் புராணக் கதைகளை நிகழ்த்துவதற்குரிய கதகளியையோ கிராமத்துக் கோயில் விழாவின் சடங்குக் கூறுகளில் ஒன்றான தெய்யம் கலையையோ புராண/காவியச் சார்புடைய மோகினியாட்டத்தையோ… பார்ப்பதிலோ ஆதரவளிப்பதிலோ தயக்கமோ அரசியல் சார்ந்த வெறுப்போ இருக்கவில்லை. அவர்களுக்குத் தங்கள் மண்ணின் பண்பாடு, கலை என்ற அளவில் மரியாதை இருந்தது. கேரள நாத்திகவாதிகள்கூட இதில் விதி விலக்கல்ல. இதனால்தான் அங்கு கிராமியக் கலைஞர்களுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது.

சாதியக் கண்ணோட்டம்

தமிழ்நாட்டில் நிலைவேறு; எதையுமே சாதி, இனம் அரசியல் சார்பு எனப் பார்த்துப் பழகிவிட்ட பண்பு நிலைத்துவிட்டது. தமிழகத்தில் மிகப் பெரும்பாலான கிராமியக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களில் ஒடுக்கப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களும் அதிகம். இவர்களில் கலையை மட்டுமே நம்பி வாழ்கின்றவர்களும் உண்டு.

தனிப்பட்ட முறையிலும் கலை நிகழ்த்தும் போதும் சாதியக் கண்ணோட்டத்தில் கலைஞனைப் பார்ப்பதற்குரிய சூழல் உருவானதற்குக் காரணம் என்ன? அரசியல்வாதிகளால் இந்தக் கலைகள் மதிப்புடன் நடத்தப்படாதது ஒரு காரணம். பார்வையாளர்கள் கோயில், வழிபாடு சாராமல் கலை நிகழ்த்தியவர்களை (எ.கா. கழைக்கூத்து, தோல்பாவைக்கூத்து) யாசகர்களாகவே கருதுவதும் இன்னொரு காரணம். இதுபோன்ற காரணங்கள் தமிழர்களிடம் முனைப்புடன் உள்ளன.

அரசியல், சமூக விழிப்புணர்வால் தமிழகக் கலைஞர்களின் நிகழ்த்துதல் சுதந்திரம் இன்று பெருமளவில் குறைந்துவிட்டது. கரகாட்டத்தின் துணைக் கலை நிகழ்ச்சிகளைக் கல்யாண காமிக், சந்தை காமிக், வண்ணான் வண்ணாத்திக் கூத்து போன்றவை தமிழகச் சாதிகள் சிலவற்றின் நூலிழையாக மறைந்து கிடக்கும் ஏமாற்றுத்தனத்தை யதார்த்தத்துடன் கிண்டலாக விமர்சிப்பவை. இன்று இவை நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, இக்கலையை நிகழ்த்தியவர்கள் ஆராய்ச்சியாளர்களிடம்கூட பேசத் தயக்கம் காட்டுகின்றனர்.

பணம் படைத்தவர்களின் குடும்பத்தில் நடக்கும் தகாத உறவு, பேராசை போன்ற வற்றைக் கிண்டலாய் நாடகபாணியில் நடத்தப்பட்ட கலைகள் (கப்பல் பாட்டு) அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது, காவல் துறையின் சாதாரண அதிகாரிகளாலேயே நசுக்கப்பட்டன. சொத்துள்ள கிராமக் கோயில்களைக் கையகப்படுத்திய இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், சீர்திருத்தம் என்னும் பேரில் காலங்காலமாய் நடந்த கலைகளை நிறுத்தினர் (அம்மன் கூத்து, பேயாட்டம்).

பெண் கலைஞர்களின் நிலை

கோயில் விழாக்களில் நடுஇரவு நிகழ்ச்சி முடிந்து, சொந்த ஊர் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண் கலைஞர்களைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காவலரிடமிருந்து தப்ப, கோயில் வாசலிலேயே படுத்துக்கிடக்கும் கலை ஞர்களை எனக்குத் தெரியும். இந்த நேரங்களில் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய அடையாள அட்டைக்குக்கூட மரியாதை இல்லை என்று கலைஞர்கள் கூறுகின்றனர்.

ஆண் கலைஞர்களைவிடப் பெண் கலைஞர்களின் நிலை இன்னும் மோசமானது. கரகாட்டம், கருப்பாயி கூத்து என்பன போன்ற கலைகளை நிகழ்த்தும் பெண் கலைஞர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவர்கள். இவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் கிண்டல் செய்யும் தமாஷ் காட்சி, தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியில் உண்டு.

கலை நிகழ்த்தும்போது பாராட்டு என்னும் பெயரில் பெண் கலைஞர்களின் மார்புக் கச்சையில் ரூபாய் நோட்டைக் குத்துவது என்ற விஷமங்களைச் சகித்தே இவர்கள் பழகிவிட்டார்கள். இதைப்பற்றி பெண் கலைஞர் ஒருவர் என்னிடம் பேசியபோது, “ஒரு ரூபாய்த் தாளை மாத்தி வச்சுக்கிட்டு மார்புல குத்திட்டு இருப்பானுவ; பத்து ரூபாய்க்குப் பத்து தடவ மார்பைத் தடவலாம்ல. வேறு என்ன செய்ய; வயிறு இருக்கில்ல. வேறு தொழிலும் தெரியில” என்றாள்.

இப்படியான சூழ்நிலையில், கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாரிசுகளிடம் கலை அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகவே கூறிவருகிறார்கள். தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் என்னும் அரசு அமைப்புகள் கலைஞர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொண்டாலும் கலை நிகழ்த்தும்போது அவர்கள் நடத்தப்படும் விதத்துக்கு யார் பாதுகாப்பு அளிக்க முடியும்.

நடிகைக்குக் கோயில் கட்டுகின்ற, நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்கள் வாழ்கின்ற மாநிலத்தில்தான் இந்த கிராமியக் கலைஞர்களும் வாழ்கின்றனர் என்பதுதான் வினோதமானது.

அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர் - தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x