மூளைச்சவ்வு அழற்சி

மூளைச்சவ்வு அழற்சி
Updated on
1 min read

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு மெனன்ஜிடிஸ் என்று அழைக்கப்படும் ‘மூளைச்சவ்வு அழற்சி’க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது ‘டைப்-பி’ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கிடைக்கும் வழக்கமான தடுப்பூசிகள் இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவாது. எனவே, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் இந்த மாணவர்களுக்கென்று தனித் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அதே சமயம் இந்த ஊசி மருந்தை மாணவர்களுக்குச் செலுத்தலாமா என்றும் அது தீவிரமாகப் பரிசீலித்துவருகிறது.

இந்த நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் வேகமாகப் பரவும் இயல்புடையது. முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை அதிர்ச்சிக்குள்ளாகும், சில சம்பவங்களில் மரணமும் ஏற்படும். காது கேட்கும் திறன் இழப்பு, மூளைச்சேதம், சிறுநீரக பாதிப்பு ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நோய்க்கென்று குறிப்பிட்ட அடையாளம் ஏதுமில்லை என்றாலும் சிலவற்றைப் பொதுவான அடையாளங்களாகக் கொள்கின்றனர். இதில் ஏதாவது ஒரு சில இருந்தாலும் இந்த நோயாகக் கருதி மேலும் சோதனை மேற்கொள்வது நல்லது. மூளை அல்லது தண்டுவடத்தைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வை நோய்க்கிருமிகள் தாக்கும்போது அவை வீக்கமடைகின்றன. பிறகு காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, வாந்தி ஆகியவை ஏற்படுகின்றன. உடலில் ஆங்காங்கே சிவப்புக் கொப்பளங்கள் ஏற்படும். வெள்ளை நிறமுள்ளவர்களுக்கு எளிதில் தெரியும். கறுப்பாக இருப்பவர்கள் உள்ளங்கை, உள்ளங்கால்கள் போன்றவற்றில் இதைப் பார்க்க முடியும்.

உள்ளங்கை, உள்ளங்கால்களில் குளிர்ச்சி ஏற்படுதல், கழுத்தைத் திருப்ப முடியாமல் இறுகிவிடுதல், வெளிச்சத்தைக் காண விரும்பாமை, உடல் வலி, குளிர், தோல் வெளுத்தல், மூச்சிரைப்பு, மூச்சில்லாமல் இருத்தல் ஆகியவை பிற அறிகுறிகள். இதில் ஒரு சிலவோ பலவோ தெரியக்கூடும். சிலருக்கு வாய் குளறல் போன்றவையும் ஏற்படும்.

குழந்தைகளுக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடல் விறைத்துவிடும். தொட்டாலோ தூக்கினாலோ அழும். சாப்பிட மறுக்கும். பால் கொடுத்தாலும் சாப்பிடாது. சில வேளைகளில் பெரிதாக முனகிக்கொண்டே இருக்கும். கண்களைத் திறந்து பார்க்காது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in