

'குடி உயர கோன் உயரும்' என்ற அவ்வையின் சொல் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பொருள்தான் சற்று மாறியிருக்கிறது. ‘ஒரு நாட்டு குடிமக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் அந்நாட்டு அரசனின் நிலை உயரும்’ என்பதுதான் அவ்வை சொன்னது. இன்று.. குடி என்பது குடிமக்களைக் குறிக்கவில்லை. குடி கெடுக்கும் ‘குடியை’க் குறிக்கிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடியின் அளவும் அதிகரிக்க.. அரசின் வருவாய் உயர்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்தியாவில் சாராயத்தின் மீதான கலால் வரி (State Excise Duty) 2009-10ம் ஆண்டில் ரூ.48,370 கோடி. இது 2012-13ம் ஆண்டில் ரூ.82,740 கோடியாக உயர்ந்துள்ளது. இது சாராயத்தின் மீதான கலால் வரி மட்டுமே. பொதுவாக, இதில் 75% அளவுக்கு விற்பனை வரி உண்டு. அதையும் சேர்த்தால் சாராயத்திலிருந்து கிடைக்கும் மொத்த வரி வருவாய் ரூ.1,44,795 கோடி. இவ்வாறு மாநில அரசுகளின் வரி வருவாய் குடிக்கின்ற மக்களால் உயர்ந்துகொண்டே போனால், கோன் எனப்படும் அரசு உயரத்தானே செய்யும்.
பெரும்பாலும் சாராயத்தின் மீதான வரி (கலால் மற்றும் விற்பனை வரிகள் சேர்த்து) 250% முதல் 300% வரை இருக்கும். அப்படியானால் குடிமக்கள் குடிக்காக செலவிடும் மொத்த தொகை தோராயமாக ரூ.1,93,060 கோடி. இது ஒரு வருட தமிழக பட்ஜெட்டைவிட அதிகம்.
சாராய வரி வருவாய் இல்லாமல் நம் மாநில அரசுகளால் மக்கள்நலத் திட்டங்களை நடத்த முடியாதா? முடியும். மற்ற வரிகளை முறையாக வசூலித்தாலே மேலும் வருவாய் வரும். சாராயம் இல்லாதபோது, மக்களின் குடிச் செலவுகள் வருடம்தோறும் ரூ.1,93,060 கோடி குறையும் அல்லவா? இதனால், அரசின் பல நலத் திட்டங்கள் தேவை இல்லாமலே போகும்.
மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்றால், உடனே ‘கள்ளச் சாராயம் அதிகரிக்கும்’ என்ற எதிர்வாதம் வைக்கப்படுகிறது. கள்ளச் சாராயம் அதிகரிக்க ஒரே ஒரு காரணம்தான். மக்கள் ஏற்கனவே சாராயத்துக்கு அடிமையாகிவிட்டார்கள், அதுவே கள்ளச்சாராயத்துக்கு வழி செய்கிறது.
இதுவரை மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க ஏதாவது முயற்சி செய்துள்ளோமா?
De-addiction என்பது மிக சிக்கலான மருத்துவம். அதில் அரசோ, சமுதாயமோ சரியான கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், De-addictionக்கான தேவை உயர்ந்துள்ளது. இன்று ஊடகங்களில் பல தனியார் நிறுவனங்கள் De-addictionக்கான மருந்துகளை விளம்பரம் செய்கின்றன. இதிலிருந்து De-addiction பொருளாதாரம் பெருகிக்கொண்டு போவது தெரிகிறது.
பொதுவாக மருந்துகளை விளம்பரம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. பெரும்பாலும் எல்லா மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் சில மருந்துகளுக்கு இது பொருந்தாது போலும். Drugs Act படித்தவர்கள் இதை விளக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, De-addictionக்கான முயற்சிகளை அரசு பெரும் அளவில் மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள எல்லா மாநில அரசுகளும், கட்சிகளும் மதுவிலக்கை எப்படியாவது கொண்டுவருவது நல்லது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு முதல் முயற்சியாக, சாராயத்திலிருந்து வரும் வரி வருவாயில் 10% அளவுக்கு De-addiction சிகிச்சைக்காக செலவிடப்படும் என்று உறுதி அளிக்கவேண்டும்.
இதில் வினோதம் என்னவென்றால் மது வியாபாரமும், வரி வருவாயும் வருடம்தோறும் உயர, மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிக குறைந்த லாபத்தில், சில வருடங்கள் நஷ்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் இதைக் கூறுகின்றன.