

அது 1972. திமுக ஆளுங்கட்சி. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் எம்ஜிஆர். அவருடைய தலைமையில் பிரிந்தவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அதிமுகவாக - திமுகவின் எதிர் பிரிவாக உருவெடுத்திருக்கிறார்கள். சட்டமன்றம் நவம்பர் 13 அன்று கூடுகிறது.
அப்போது எம்ஜிஆர் எழுந்து “இன்றைய அமைச்சரவை தங்களுடைய கட்சியின் நம்பிக்கையையும் இழந்து, மக்கள் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. இந்த நிலையில் இந்த அமைச்சரவை நீடிப்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டதா?” என்கிறார். சபாநாயகர் மதியழகன் “(இந்த ஆட்சிக்கு ஆதரவாக) பெரும்பாலான எண்ணிக்கை உள்ள எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், நாட்டில் இன்று பதற்றமான, அசாதாரண நிலை உள்ளது. சட்டசபையைக் கலைத்து, மறு தேர்தலில் நின்று மேலும் மக்கள் ஆதரவுடன் மீண்டும் வரலாம் என்பது என்னுடைய யோசனை. ‘மக்களை இன்றே சந்திக்கிறீர்களா?’ என்று எம்ஜிஆர் கேட்கிறார். அதற்கு முதல்வர் கருணாநிதி ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?” என்கிறார். முதலமைச்சர் கருணாநிதி பதில் சொல்ல விரும்பவில்லை என்று சைகை மூலம் தெரிவிக்கிறார். சபை டிசம்பர் 5-க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
எனினும், முன்னதாகவே டிசம்பர் 2 அன்று சட்டசபை கூட்டப்படுகிறது. பரபரப்பான பல நிகழ்ச்சிகள். சட்டசபையிலிருந்து எம்ஜிஆரும், மதியழகனும் வெளியே வரும்போது அவர்களை நோக்கிச் செருப்பு வீசப்படுகிறது. “சட்டசபை செத்துவிட்டது” என்று கூறிவிட்டுச் செல்கிறார் எம்ஜிஆர். அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் முன்மொழிகிறார். டிசம்பர் 11 அன்று வாக்கெடுப்பு. அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விவாதத்தையும், வாக்கெடுப்பையும் புறக்கணிக்கின்றன. ஸ்தாபன காங்கிரஸும், சுதந்திரா கட்சியும் வாக்கெடுப்புக்கு முன் வெளிநடப்பில் ஈடுபடுகின்றன. எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கிறது. அரசுக்கு ஆதரவாக 172 வாக்குகள். எதிர்ப்பு வாக்கோ, நடுநிலை வாக்கோ ஏதும் இல்லை. தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது.
இது 2017 பிப்ரவரி 18. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக இன்றைக்கு ஆளுங்கட்சி. முன்பு ஆளுங்கட்சியாக இருந்த திமுக, இப்போது எதிர்க்கட்சி. பன்னீர்செல்வமும் எதிரணியில்.
சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழி கிறார். பன்னீர்செல்வம் எழுந்து “சட்டமன்ற உறுப்பினர் களை ஒரு முறை தொகுதிப் பக்கம் அனுப்பிவையுங்கள். மக்களின் கருத்துகளைச் சென்று கேட்கட்டும். அதன் பிறகு இங்கே வரட்டும். அதன் பிறகு இங்கே நடக்கும் வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகத்தான் இருக்க வேண்டும்” என்கிறார். அடுத்துப் பேசும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் “விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்களைச் சில நாட்கள் சுதந்திரமாக விடப்பட்டு, அதன் பிறகு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பன்னீர்செல்வம் அருமையான கருத்தை இங்கே கூறியிருக்கிறார். பன்னீர்செல்வத்தின் கோரிக்கையைத் திமுக வழிமொழிகிறது” என்கிறார்.
பிறகு, வாக்கெடுப்பு நடத்த முற்படும்போது சபாநாயகர் முற்றுகையிடப்படுகிறார். திமுக உறுப்பினர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்படுகிறார்கள். பன்னீர் அணியினர் தவிர, மற்ற எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்கின்றனர். பதினோரு பேரைத் தவிர, எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கிறது. அரசுக்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது.
- இரா.ஜவஹர், மார்க்ஸிய ஆய்வாளர், எழுத்தாளர், ‘
கம்யூனிஸம்: நேற்று, இன்று, நாளை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: jawaharpdb@gmail.com