Published : 03 Jun 2016 09:43 AM
Last Updated : 03 Jun 2016 09:43 AM

படிச்சிட்டுத் திட்டு என்பாள் அம்மா!

வாழ்க்கையை மாற்றிய வாசிப்பு!- பூ.கொ.சரவணன்

அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். ஆசிரியர்கள், உறவினர்கள், வகுப்புத் தோழர்கள், ஊர்க்காரர்கள் என்று நான் ஆங்கிலத்தில் பேசப்போவதைக் கேட்க ஊரே திரண்டிருந்தது. எனக்கோ உதறல். கால்களின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு, மைக்கை இறுகப் பற்றியபடி பேசத் தொடங்கினேன். இந்திய வரலாற்றைப் பற்றி ஒரு கிராமத்துச் சிறுவனின் கன்னிப் பேச்சு அது.

ஆங்கில இலக்கணத்தில் கடுமை காட்டுபவர்கள் மட்டும் அன்றைக்கு அங்கிருந்திருந்தால் ஐந்து நிமிடங்களுக்குக்கூட என்னைப் பேசவிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அங்கு இருந்த அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ‘நம்மூர்ப் பையன் எத்தனை அழகா இங்க்லீஷ் பேசுறான்’ என்று பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பேச்சு முடிந்ததும் கைத்தட்டலில் பள்ளிக் கட்டிடமே அதிர்ந்தது.

கூட்டத்தின் நடுவே கண்களில் நம்பிக்கையுடன் கைகட்டி அமர்ந்திருந்தாள் அம்மா. என் மீது அத்தனை நம்பிக்கை அவளுக்கு. தவறோ சரியோ, ஆங்கிலத்தில் பேசு. தைரியமாகப் பேசு என்று ஊக்கம் கொடுத்த முதல் ஆசிரியை அம்மா என்றால், ‘தங்கமலர்’, ‘கோகுலம்’, ‘சுட்டி விகடன்’ எனச் சிறுவர் இதழ்களைக் காயலான் கடையிலிருந்து வாங்கிவந்து படிக்க ஊக்குவித்த அறிவாசான் அப்பா. இருவரும் எனக்குத் தந்த மாபெரும் சொத்து இந்த வாசிப்புப் பழக்கம்.

செஞ்சிக்கு அருகில் உள்ள பொன்பத்தி என்கிற குக்கிராமம்தான் எனது ஊர். அப்பா கேஸ் ஸ்டவ் மெக்கானிக். அம்மா தமிழ் ஆசிரியை. எனக்கு புதுமைப்பித்தன், பாரதி, மு.வ. என்று தமிழ் இலக்கிய பிரம்மாக்களை அறிமுகம் செய்தவள் என் அம்மாதான். “யாரையாவது திட்டணும்னாகூட அவங்களைப் பத்தி நல்லாப் படிச்சுட்டுத் திட்டுடா!” என்பாள். அப்பா சைக்கிளில் அழைத்துச் செல்லும்போதெல்லாம் “இன்றைக்கு என்ன வாசித்தாய்?” என்று நான் வாசித்ததை விரிவாகக் கேட்டுக்கொண்டே வண்டியை ஓட்டுவார். வீட்டில் என்ன சூழல் இருந்தாலும், புத்தகங்களை வாங்கிக் கொடுப்பவர்களாக என் அம்மா, அப்பா இருந்ததையும் நான் இங்கே சொல்ல வேண்டும்.

இந்தச் சூழலில்தான் செஞ்சியில் அரசு நூலகம் திறக்கப்பட்டது. “எந்தப் புத்தகம் வேணும்னாலும் எடுத்துப் படி தங்கம்” என்பார் நூலகர் சற்குணவதி. காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா என்று மகத்தான ஆளுமைகளின் எழுத்துகள், சிந்தனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கத் தொடங்கினேன். என்னிடம் தமிழை வளர்த்தெடுத்ததில், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிக்கும் முக்கியப் பங்குண்டு.

பள்ளி முடித்த பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். நான் உள்ளிட்ட சில நண்பர்களின் வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்த எங்கள் துறை இயக்குநர் அம்புஜம், மேற்படிப்பு மாணவர்களுக்கு மட்டுமே திறந்துவிடும் நூலகத்தை எங்களுக்காகத் திறந்துவிட்டார். ஒரு பெரிய உலகம் அங்கே திறந்தது.

ஊரிலிருந்து ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தகக் காட்சிக்குப் பெரியவர்கள் செல்வார்கள். அவர்களிடம் எனக்கான புத்தகங்களை வாங்கி வரச் சொல்லிப் படிப்பேன். அப்படி எனக்கு வரலாற்று ஆர்வத்தை ஊட்டியதில் ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ புத்தகங்களுக்குப் பெரிய பங்கு உண்டு.

ஒரு கிராமத்துப் பின்னணியில், அரசுப் பள்ளியிலிருந்து வந்தவன் ஆங்கிலப் பேச்சு, எழுத்து, வாசிப்பை எப்படி உள்வாங்கிக்கொண்டேன் என்பது இங்கு அவசியம் குறிப்பிட வேண்டியது. ‘தி இந்து’ஆங்கில நாளிதழை நாள்தோறும் விடாமல் வாசித்தேன். முதலில் ஒரு முறை அகராதி துணையின்றி வாசிப்பேன். பிறகு அகராதி துணையுடன் ஒரு முறை. சின்னச் சின்ன செய்திகளில் இப்படித் தொடங்கிய நான், படிப்படியாக தலையங்கம் வரை முன்னேறினேன். அப்புறம் அகில இந்திய வானொலியில் தமிழ், ஆங்கிலச் செய்திகளைத் தவறாமல் கேட்பேன். மிக முக்கியமாக, நான் ஆங்கிலத்தில் வாசித்த நூல்களின் சாரத்தை உடனே எழுதிவிடுவேன். ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் தப்பும், தவறுமாகப் பேசிப் பேசி என் மனத்தடையைப் போக்கிக்கொள்வேன். உச்சரிப்பு மட்டும் அவ்வப்போது பிசிறு தட்டும். அதற்குத் துளியும் அஞ்சியதில்லை. ‘உன் உச்சரிப்பு தவறென்றால் உன் சொந்த முயற்சியில் வாசித்து அறிந்திருக்கிறாய் எனப் பொருள். பெருமைப்படு!’ என எங்கேயோ வாசித்த வரிகள் நம்பிக்கையைப் பெருக்கின. அப்புறம் தூர்தர்ஷன் ராஜ்ய சபா தொலைக்காட்சியில் ‘பிக் பிக்சர்’ விவாதங்களைப் பார்ப்பேன். இப்படித்தான் என் ஆங்கில வாசிப்பு விரிந்தது.

ஒரு மேடைப் பேச்சுக்குப் பரிசாக, ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’ நூல் கிடைத்தது என் வாழ்வின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. அப்புறம், அந்த நூலின் அடிக்குறிப்புகளில் இருந்த நூல்களைத் தேடித்தேடி கன்னிமாரா நூலகத்தில் படித்தேன். இணையம் என் வாசிப்பை மேலும் விரிவும் ஆழமும் கொண்டதாக்கியது. அமர்த்தியா சென், சுனில் கில்னானி, முசிருல் ஹசன், எலினார் ஜெல்லியாட், பிபன் சந்திரா, ஆஷிஷ் நந்தி, ரொமிலா தாப்பர் என்று என் உலகம் மேலும் மேலும் விரிந்தது.

குடிமைத் தேர்வுக்குத் தயாரானேன். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வுசெய்தேன். என்னுடைய கடந்த கால வாசிப்பும், ஆர்வமும் மிக எளிதாக என்னை மேலே கொண்டுவந்து சேர்த்தது. இந்திய வருவாய்த் துறைப் பணியை நோக்கி இன்று நடந்துகொண்டிருக்கிறேன்.

என் அனுபவம் இதுதான். எது பிடிக்கிறதோ அங்கிருந்து வாசிக்க ஆரம்பியுங்கள். ஆங்கிலம் கிட்டாக் கனி என்று எண்ணாமல், விடாமல் முயற்சி செய்யுங்கள். சரளமாகப் பேசுபவர்களைக் கண்டு பிரமிக்காதீர்கள். பிரமிப்பைப் போல ஒரு தோல்வி கிடையாது. கூரை வீட்டில் துவங்கிய என் பயணத்தை இந்திய வருவாய்த் துறை வரை கொண்டுசேர்த்தது வாசிப்புதான்!

தொடர்புக்கு: pu.ko.saravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x