

இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் அரங்குகளில் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் அரங்கு ‘திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்’ என்ற பெயரில் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் அமைத்திருக்கும் அரங்கு. வெறும் புத்தக விற்பனையாக மட்டும் அல்லாமல் மரண தண்டனைக்கு எதிரான வலுவான ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது இந்த அரங்கு! முதல்முறையாகப் புத்தகக் காட்சியில் அடியெடுத்து வைத்திருக்கும் அற்புதம் அம்மாள் என்ன சொல்கிறார்?
“22 வருஷத்துக்கு முன்னால் அறிவு சொல்லிதான் சென்னைப் புத்தகக் காட்சியைப் பத்தி தெரியும். கடந்த 20 வருஷமா புத்தகக் காட்சிக்கு வந்துக்கிட்டுருக்கேன். என்னோட மகன் சிறையில இருந்து எழுதின ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ புத்தகத்தை அச்சடிச்சுட்டு அதை விற்க கடந்த ரெண்டு வருஷமா கடை கடையாய் ஏறி இறங்கினேன். அப்புறம்தான் மனசுல பட்டுச்சு. என் மகனோட நியாயமான குரலைச் சொல்ல ஒருத்தர்கிட்டயும் கெஞ்சக் கூடாதுனு. அதோட ஒரு பகுதியாத்தான் பணம் கட்டி இங்கே அரங்கை எடுத்தேன். அறிவுக்காக மட்டும் இல்லை; மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளை எல்லாத் தரப்பு மக்கள்கிட்டேயும் எடுத்துக்கிட்டுப்போக இது மூலமா என்ன முடியுமோ அதைச் செய்யணும். மரண தண்டனைக்கு எதிராக யார் புத்தகம் எழுதியிருந்தாலும் சரி; அதை இங்கே என்னோட அரங்கில் கொண்டுவந்து வைக்கலாம்; காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரா சேர்ந்து குரல்கொடுப்போம்!’’