

இன்றைக்கு ‘டிஜிட்டல் இந்தியா’ எனும் கருத்தாக்கம் நிதர்சனமாகிவிட்டது. பொருளாதாரத்திலும் சமூகத்திலும் உள்ள அடிப்படை வசதிகள் விஷயத்தில் அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை நமக்கு உணர்த்தியது. அதேசமயம், ரொக்கமற்ற இந்தியாவை நோக்கி அரசு ஏற்படுத்திய அழுத்தம், பொருளாதாரத்துக்கு அலைபேசி, இணையத்தின் தேவையை உணர்த்தியது. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகிவிட்ட குடும்ப வாழ்க்கையும், வணிகப் பரிமாற்றத்துக்குள்ளான மனித உறவுகளும், இன்றைக்கு டிஜிட்டல் தகவல் தொடர்பைச் சார்ந்திருக்கின்றன. அதனால்தான், நாடு முழுவதும் அரசு ஏற்படுத்தும் இணைய முடக்கங்கள் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. இணையக் கட்டுப்பாடுகள் மக்களின் பொது உரிமைகளுக்குத் தடை ஏற்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கையில் ஆபத்துகளையும் ஏற்படுத்திவிடும். வணிகச் செயல்பாடுகளும் பாதிப்படையக் கூடும்.
‘டிஜிட்டல் இந்தியா’வில் இணையம் தொடர்பான ஒவ்வொரு கொள்கை முடிவும் மக்களின் உரிமைகளைப் பாதிக்கிறது. பொருட்கள் வாங்குவது, பணம் செலவழிப்பது ஆகியவற்றைக் கண்ட றியவும் கட்டுப்படுத்தவும் ஆதார் எண்கள் பயன்படுத்தப்படுகின்ற ‘ரொக்கமற்ற இந்தியா’வில், ஒவ்வொரு இந்தியரின் அந்தரங்கமும் சந்தையில் பங்கேற்கும் சுதந்திரமும் இணையக் கொள்கைகளையும், அரசியல் சட்ட உரிமைகள் அடிப்படையில் அந்தக் கொள்கைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளையும் சார்ந்திருக்கின்றன. எந்த விஷயத்தில் பிரச்சினையைச் சந்திக்கவிருக்கிறோம் என்று நமக்கு நாமே போதித்துக்கொண்டிருப்பதைவிட, தொழில்நுட்ப, சமூக அடிப்படையிலான கள நிலவரங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள்தான், இனி வரப்போகும் தலைமுறையினருக்கான அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிக்கப்போகின்றன என்று சொல்லலாம்.
இந்தியர்கள் இப்போது சந்தித்துவரும் இணைய முடக்கங்கள், அது ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கங்கள் என்று பல்வேறு விஷயங்கள் அடங்கிய வரைபடத்தை ‘எஸ்.எஃப்.எல்.சி.இன்’ எனும் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த இணையதளம் சேகரித்த தகவல்களையும், உலகின் மற்ற பகுதிகளில் இயங்கிவருபவர்கள் சேகரித்திருக்கும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது, 2014 முதல் 2015 இறுதி வரையிலான காலகட்டத்தில் இணைய முடக்கங்கள் இந்திய வணிக நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் (ரூ.6,675 கோடி) இழப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என்று தெரியவருகிறது.
இதுபோன்ற இணைய முடக்கங்களுக்கு அரசின் தரப்பில் சொல்லப்படும் ‘சட்டவிரோத மாகக் கூடுவதைத் தடுப்பதற்காக’ என்பன போன்ற சட்டபூர்வ நியாயங் கள், இதனால் ஏற்படும் விரும்பத்தகாத சமூக விளைவுகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அவசியமான தருணங் களில் சில பேச்சு வடிவங்களைத் தடை செய்வது நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற அவசர நடவடிக்கைகளையே வழக்கமாக்கிக் கொள்வது, கோடிக்கணக்கான மக்களின் பொருளாதாரம், கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தகவல் தொடர்பு முடக்கப் படுவதற்குக் காரணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. வதந்திகள் பரவுவதைத் தடுக்கவே இதுபோன்ற இணைய முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், இணைய வசதிகள் என்ன, செய்தித்தாள்கள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே வாய்மொழி வழியாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன என்பதே உண்மை.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து பவர்களின் உரிமைகள் என்ன, அவற்றை எப்படிப் பாதுகாப்பது ஆகிய விஷயங்கள்தான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிக முக்கியமான பிரச்சினைகளாக இருக்கப்போகின்றன. இந்தப் புதிய யுகத்தில் நமது ஜனநாயக விழுமியங்களை எப்படி முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ‘டிஜிட்டல் இந்தியா’வில் வாழ்வது வரமா சாபமா என்று தெரியும். டிஜிட்டல் இறையாண்மை எனும் கருத்தாக்கத்தின் எதிர்மறை வெளிப்பாடுகளான இணைய முடக்கங்கள், ஜனநாயக சமூகத்துக்குத் தேவையானவை அல்ல. இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்கிறோம் என்பதுதான் டிஜிட்டல் இந்தியா என்பது உலகத்துக்கு ஒரு ஆக்கபூர்வமான உதாரணமாக இருக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்!
- தமிழில்: வெ.சந்திரமோகன்