

இந்தியக் குடியரசுத் தலைவர் நெருங்கிவரும் சமயத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குடியரசுத் தலைவர் முன்னுள்ள சவால்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதுபெரும் அறிவுஜீவிகளில் ஒருவரும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணருமான அமர்த்திய சென். அவரது பேட்டியிலிருந்து..
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயமான ஒரு பதவி எனும் வகையில், தீவிர அரசியலுக்கு வெளியில் இயங்கும் ஒருவரை அந்தப் பதவிக்காகத் தேடுவது நல்லதல்லவா? எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்டோர் அதற்குப் பொருத்தமாக இருப்பார்களா?
நாட்டின் தலைமைப் பொறுப்பில் குடியரசுத் தலைவருக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தின் அரசியல் நெருக்கடிகள் போன்ற சிறப்புத் தருணங்களின்போது குறிப்பிட்ட சில பணிகளை ஆற்றுவதால் மட்டுமல்ல; குடியரசின் தலைவர் எனும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர் எனும் வகையில், அரசியல் சட்டத்தால் வழிநடத்தப்படும் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாலும்தான்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி ஏராளமான தலைவர்கள், அரசியல்வாதிகள் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், கே.ஆர். நாராயணன் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பு, ஆளுமை மூலம் இந்தியா தனக்குத் தானே உண்மையாக இருக்கும் வகையில் வழிநடத்தினார்கள். சுதந்திரத்துக்கான நீண்ட, கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் ஜனநாய கமும் மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவைப் பெற்றுத்தந்த நேர்மைப் பார்வையை அவர்கள் நினைவுபடுத்தினார்கள்.
மதச்சார்பின்மை விஷயத்தில் அரசின் நிலைப்பாடு தொடர்பாக, சமூகத்தின் சில பிரிவினர் அச்சம் தெரிவிக்கும் காலகட்டத்தில், இந்தியாவில் மதச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது என்று வெளிநாடுகளிலிருந்து விமர்சனம் எழுந்திருக்கும் சூழலில், அரசையும் அதன் கொள்கையையும் வழிநடத்துவதில் அரசின் பங்கு என்ன? குடியரசுத் தலைவர் என்பவர் இயல்பிலேயே ஒரு செயற்பாட்டாளராக இருக்க வேண்டுமா அல்லது நாட்டின் தலைவர் எனும் முறையில் வழக்கமான, அரசியல் சட்டரீதியில் பங்காற்றினால் போதுமா?
நாட்டில் தற்போது நடந்துவரும் மனித உரிமை மீறல்கள், கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களையெல்லாம் பார்க்கும்போது உண்மையிலேயே ஆழ்ந்த கவலையும் அச்சமும் உருவாகியிருக்கிறது. இவற்றில் குறிவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் பலவீனமான நிலையில் இருக்கும் சிறுபான்மையினர் - குறிப்பாக ஏழை முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் நியாயமாக நடத்துமாறு வலியுறுத்துவதில் குடியரசுத் தலைவருக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.
வெற்றிகரமான ஜனநாயக நாடு எனும் இந்தியாவின் பிம்பம், உலகமெங்கும் கணிசமான அளவில் சரிந்திருப்பது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் (இந்தியர்களில் பலரை அது கவலையுறச் செய்திருக்கிறது, இந்திய அரசும் இதுகுறித்து கவலைப்பட வேண்டும் என்பது தனி). ஆனால், தாங்கள் பாதிக்கப்பட்டாலும் அல்லது பாதிக்கப்படாவிட்டாலும் இதுபோன்ற மீறல்கள், தவறான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, நியாயமான கண்ணோட்டம் கொண்ட மக்கள் போராட வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியாவின் முகமாக மட்டுமல்ல, நற்சிந்தனை, நியாய உணர்வு ஆகியவற்றுக்கான முக்கியக் குரலாகவும் இருக்க முடியும்.
எந்த மாதிரியான வேட்பாளரை நீங்கள் ஆதரிப்பீர்கள்? சுதந்திரச் சிந்தனையும், ‘ரப்பர் ஸ்டாம்’பாக மட்டுமே செயல்படாத தன்மையும் கொண்டவரையா அல்லது அரசியல் சட்டத்தை அப்படியே பின்பற்றுகிற கண்டிப்பான, கட்டுக்கோப்பான பார்வை கொண்ட ஒருவரையா?
கணக்காளர்களுக்குத்தான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ தேவை நாட்டுக்கு அல்ல. குடியரசுத் தலைவர் என்பவர் தனது சொந்த முடிவின்படி நடவடிக்கை எடுப்பவராக, அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அதை அங்கீகரிப்பவராக மட்டுமல்லாமல், மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வெறுமனே ‘ரப்பர் ஸ்டாம்ப்’ இடுபவராக மட்டுமல்லாமல் மிகப் பெரிய பங்காற்ற வேண்டியவர். குடியரசுத் தலைவர் என்பவர், அரசு முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களை, குறிப்பாக மக்களின் உரிமைகளும், அவர்கள் நியாயமாக நடத்தப்படும் விதமும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்தும் வகையிலும் சற்றுக் கண்டிப்பானவராக, திறன்வாய்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் கல்வி, அறிவியல், சுதந்திரச் சிந்தனை ஆகியவை சிதைக்கப்படும்போது அரசிடம் அதைச் சுட்டிக்காட்டும் வகையில் செயல்படுகின்றவராகவும் அவர் இருக்க வேண்டும்.
பழைய அநீதிகள் தொடர்வதைத் தடுக்கவும் புதிய அநீதிகள் உருவாகாமல் தவிர்க்கவும் குறிப்பிட்ட சில விதிமுறைகளும் கருத்துகளும் ஏன் அவசியம் என்பது குறித்து நீண்ட, அறிவார்த்தமான விவாதங்கள் நாடாளு மன்றத்தில் நடந்திருக்கின்றன. மத்திய அரசின் புதிய விதிகளாகக் கொண்டுவரப்படும் மோசமான விஷயங்களை அணுகும் விஷயத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டம் முக்கியப் பங்காற்றியிருக்கும் சமநிலையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதிக்கும் இந்தப் பின்னணி மிக முக்கியமானது. அறிவார்த்தமான, உறுதியான ஒரு குடியரசுத் தலைவருக்கென்று பல்வேறு அம்சங்கள் உண்டு ரப்பர் ஸ்டாம்பாக இருப்பது அவற்றில் ஒன்றல்ல!
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மாநில சட்ட மன்றங்களின் பங்களிப்பும் இருக்கிறது எனும் வகையில், குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு கூட்டாட்சி அடிப்படையிலான தலைவர். அந்த வகையில், அது மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது அல்லவா? ஆனால், நடைமுறையில் பார்த்தால், 356-வது பிரிவை அமல்படுத்துவது, முதல்வர்களிடம் ஆலோசிக்காமலேயே ஆளுநர்களை நியமிப்பது என்று மாநில அரசுகளுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களையே செய்யுமாறு குடியரசுத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் குடியரசுத் தலைவரின் பங்களிப்பு எப்படியானதாக இருக்க வேண்டும்?
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இந்திய அரசியல் சட்டம் அடிப்படையிலான கூட்டாட்சியை உறுதிசெய்வதில் குடியரசுத் தலைவருக்கு இயல்பாகவே பங்கு இருக்கிறது. மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகளுக்கும், மரபான நடைமுறைகளுக்கும் எதிராக மத்திய அரசு கொண்டுவரும் நடவடிக்கைகளை அணுகும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கென்று தனித்த பொறுப்பு இருக்கிறது. அது மத்திய அரசின் உத்தரவுகளால் பாதிக்கப்படக் கூடாது. இவற்றால் ஆதாயம் பெறும் நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசின் உத்தரவுகளின் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவர் வழிநடத்தப்படுவது என்பது அபத்தமான விஷயம்.
குடியரசுத் தலைவர் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் நடைமுறை அரசியலுக்கும் பங்கு இருக்கிறது. எனினும், அதையும் தாண்டிப் பல்வேறு விஷயங்கள் உண்டு. நமது எதிர்காலத்தைக் கட்டமைக்கும் விஷயத்தில், கடந்த காலத்தில் நாம் வளர்த்துவந்த உறுதியை விட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். நியாயமான காரணத்துடனும், மன உறுதியுடனும் அனைவருக்குமான சுதந்திரத்துக்காக நாம் போராட வேண்டும் என்று ரவீந்திரநாத் தாகூர் விரும்பினார். பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் மக்கள் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள நேரும்போதும், நியாயமற்ற முறையில் நடத்தப்படும்போதும் மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை காந்தி நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். மற்றபடி, தற்போது பரிந்துரைக்கப்படும் பெயர்களில் காந்தியின் பேரனும், அறிவும் அனுபவமும் கொண்டவருமான கோபாலகிருஷ்ண காந்தி மிகச் சிறந்த தேர்வாக, ஒரு சிறந்த தலைவராக இருப்பார்.
அரசியல் சட்ட அடிப்படையிலான பொறுப்பும், நமது வரலாற்றின் தாக்கமும் கொண்ட ஒரு உறுதியான குடியரசுத் தலைவர், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நியாயத்துக்காக நிற்பதில் நமக்கு ஊக்கம் தருவதில் பெரிய அளவில் பங்காற்ற முடியும். ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதைத் தாண்டி நமது குடியரசுத் தலைவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றால், அலங்கரிக்கப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்பைத் தாண்டி நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: வெ.சந்திரமோகன்