

பகிர்வு. பொருளியலில் என்னை மிகவும் ஈர்த்த சொல் இது. எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டிய அளவுக்கு செல்வங்களை நாம் சரியாக பகிர்ந்தளித்திருக்கிறோமா என்பது ஒரு முக்கிய பொருளியல் கேள்வி.
மற்றவர்கள் தங்களது பொருட்களை, அறிவை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும்போது நமக்கு வரவு. ஆக, பகிர்வு என்ற சொல் நமக்கு ரொம்ப பிடித்தமான சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.
அறிவு மட்டும்தான் கொடுக்கும்போதும் பெறும்போதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அறிவைக் கொடுப்பதால் குறைவதில்லை. அது வளரவே செய்யும். பொருட்களை கொடுக்கும்போது வருத்தமும், பெறும்போது மகிழ்ச்சியும் வருவது நம் சுயநலத்தின் வெளிப்பாடு. அதிலும் மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒரு தனி அறிவு வேண்டும்.
பொருள் ஈட்டிவைத்துக்கொள்வதில் உள்ள இன்பத்தை, தேவையை ‘பொருள்செயல்வகை’அதிகாரத்தில் உள்ள 10 குறள்களிலும் வள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார். ‘ஈகை’அதிகாரத்தில் உள்ள 10 குறள்களும் ‘பொருள் தேடலின் இறுதி ஈகையில் முடிவதுதான் சிறப்பு’ என்று கூறுவது தமிழனின் ‘பகிர்வு’பற்றிய சிந்தனை எவ்வளவு தொன்மையானது, செழுமையானது என்பதைக் காட்டுகிறது.
மிகப்பெரிய செல்வந்தர்கள் பெரிய கொடையாளிகளாகவும் இருந்திருக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணங்களாக Rockfeller என்ற அமெரிக்கரும் Andrew Carnegie என்ற ஸ்காட்டிஷ்காரரும் இருக்கின்றனர். சமகாலத்து தொழிலதிபர்களான இருவரும் ஒன்றுபோல செல்வம் தேடுவதையும் பகிர்வதையும் பற்றிக் கூறியுள்ளனர்.
‘‘கலை, இசை, இலக்கியம் படைப்பதற்கான இயல்புணர்ச்சி போல, மருத்துவரது, செவிலியரது, உங்களது திறன் போல, செல்வம் தேடும் திறன் என்பது கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. இந்த திறமைகளை வளர்த்து நம் முழு முயற்சியில் மனிதகுல நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பரிசை என்னிடம் வைத்துள்ளதால் பணம், மேலும் பணம் பண்ணுவதே என் கடமை என்று நினைக்கிறன், மேலும் என் மனசாட்சி சொல்லும்படி என சக மனிதனின் நன்மைக்காக இதைப் பயன்படுத்த வேண்டும்” என்று Rockfeller கூறியதும் ‘‘பணக்காரனாக சாவது, இகழ்ச்சியோடு சாவது போல’’ என்று Andrew Carnegie கூறியதையும் கவனிக்கும்போது பணம் பண்ணுவதே பகிர்வுக்காகத்தான் என்பது தெளிவாகிறது. Rockfeller கூறியதை மேலும் சிந்திக்கும்போது இசைக் கலைஞன் எவ்வாறு மற்றவர்களை மகிழ்விக்கப் பாடும்போது தானும் அந்தப் பாட்டை ரசிக்கிறானோ, அவ்வாறே, பணம் பண்ணுகிறவர்கள் தானும் அதை அனுபவித்து மற்றவர்களுக்கும் அதைக் கொடுக்கவேண்டும் என்று புரிகிறது.
சென்ற தலைமுறை செல்வந்தர்கள் கொடுத்த கொடையினால் உருவான கல்வி நிலையங்களும் சுகாதார நிலையங்களும் இன்றும் தமிழகம் முழுவதும் இருக்க. இன்றைய செல்வந்தர்கள் அவற்றை வியாபாரமாக்கி ‘கல்வித்தந்தை’, ‘மருத்துவத் தந்தை’என்று தங்களை அழைக்க ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அமெரிக்காவில் Bill Gates, Warren Buffet போன்ற பெரும் செல்வந்தர்கள் பெரும் கொடையாளிகளாக மாறிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
தனி மனிதன் பகிர்ந்தளிக்கும் செல்வம் எல்லோரது அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்யாது. இதில் அரசின் பங்கு பெரியது, இன்றியமையாதது. நவீன பொருளாதாரத்தில் பணம் இருப்பவரிடம் வரி பெறுவது ஒரு புறமும் ஏழைகளுக்காக அரசு செய்யும் செலவுகள் மற்றொரு புறமும் பொருளாதாரத்தில் பகிர்வை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்கள். வரி செலுத்தும்போதெல்லாம் நாம் நம் செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்ற நினைவு வரவேண்டும். கல்வி, சுகாதார நிலையங்கள் போன்ற அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் திறமையாக இருந்தால் மட்டுமே பகிர்வு சிறப்பாக அமையும்.
இங்கு வரி ஏய்ப்பும் கள்ளச் சந்தையும் கருப்பு பணமும் தலை விரித்து ஆட்டம் போட.. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் நொடிந்துபோக, பகிர்வு என்னவானது என்பது உங்களுக்கே புரியும்.
உலக வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போதெல்லாம் வன்முறை தலைதூக்கியது பற்றி பல குறிப்புகள் உண்டு. இது புரிந்தால் பகிர்வின் முக்கியத்துவம் புரியும்.