மாணவர் ஓரம்: சுதந்திர தினத்தின் மாயத் தோற்றம்!

மாணவர் ஓரம்: சுதந்திர தினத்தின் மாயத் தோற்றம்!
Updated on
1 min read

முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தானே செய்கிறோம். அப்படியானால், இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு நாள் குறித்ததிலும் ஏதாவது காரணம் இருக்கத்தானே செய்யும்?

சுதந்திரம் வழங்குகிற முக்கியமான வேலைக்காகவே இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக (இன்றைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவி அது) நியமிக்கப்பட்டார் மவுண்ட் பேட்டன். ஆளும் உரிமையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்திடமிருந்து இந்தியர்களுக்கு மாற்றுவதற்கான சட்ட முன்வடிவில், இந்திய விடுதலைக்கு அவர் குறித்திருந்த தேதி 1948-ம் ஆண்டு ஜூன் 30. இது ரொம்பத் தாமதம் என்று எதிர்ப்புக் கிளம்பியது. வேறு வழியில்லாமல், 1947 ஆகஸ்ட் மாதமே சுதந்திரம் வழங்குவது என்று முடிவெடுத்தார் மவுண்ட் பேட்டன். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 15.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்த ஜப்பான் சரணடைந்த தேதி அது (15.8.1945). நேசப் படைகளின் தெற்காசிய கமாண்டராக இருந்தவர் மவுண்ட் பேட்டன். அதனால், அவருக்கு ஆகஸ்ட் 15 அதிர்ஷ்ட நாளாகிவிட்டது.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஆங்கிலத் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கும். ஆனால், இந்துக்கள் கடைப்பிடிக்கிற சக ஆண்டுக் கணக்குப்படி, அதிகாலையில்தான் அடுத்த நாள் தொடங்கும். முன்னிரவிலேயே அவசரமாகச் சுதந்திரம் வழங்கப்பட்டதால், இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.

இருந்தாலும், சட்டபூர்வமான ஆவணங்களின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15-ஐத்தான் சுதந்திர தினமாகக் கருதின. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் சுதந்திர தின அஞ்சல் தலையில்கூட ஆகஸ்ட் 15 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டிலிருந்தே (1948) ஆகஸ்ட் 14 ஆக மாற்றிவிட்டது பாகிஸ்தான். காரணம், இஸ்லாமிய மார்க்கப்படி ரமலான் மாதத்தின் 27-ம் நாள் மிகவும் விசேஷமானது. அந்த நாள், ஆங்கிலத் தேதியான ஆகஸ்ட் 14-ல் வந்தது. அதனால், அதையே தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துக்கொண்டார்கள், கொண்டாடுகிறார்கள். ஆக, அவர்கள் ஒருநாள் முன்பே சுதந்திரம் பெற்றதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in