Published : 05 Apr 2017 09:40 am

Updated : 16 Jun 2017 14:17 pm

 

Published : 05 Apr 2017 09:40 AM
Last Updated : 16 Jun 2017 02:17 PM

அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் புதிய யுகத்தின் பெரும்பான்மை தேசிய அரசியல் அலையை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றின் எதிர்கால உத்தியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. குறிப்பாக, சமூகங்களை ஒருங்கிணைப்பதில்.

தமிழகத்தில் திராவிட இயக்கம், குறிப்பாக இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து செல்வாக்கோடு நிற்க அவை இதுநாள் வரை மேற்கொண்டுவந்திருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றதும் ‘‘நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயம் மதத்துக்கு எதிரிகள் அல்ல’’ என்றதும் அதன் போக்கில் நடந்த பெரும் மாற்றம். அங்கு தொடங்கி உலகமயமாக்கலை எல்லோருக்கும் முந்தி வரித்துக்கொண்டது வரை எவ்வளவோ மாற்றங்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து சுவீகரித்துவந்திருக்கின்றன.


திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கடந்து, திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் நிலையில், அடுத்த நூற்றாண்டுக்கேற்ப அவை எப்படித் தம்மைத் தகவமைத்துக்கொள்வது? சமூகங்களை அணுகுவதில் மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது!

திராவிடத்துக்குப் பதில் தமிழ்!

ஆரியர் - திராவிடர் கருத்தாக்கத்தைத் தாண்டி, சமகால இந்திய அரசியலில் ‘திராவிட’ எனும் சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? ஒருகாலத்தில், தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட சொல் அது. இந்த பிராந்தியத்தைத் தனி நாடாக அங்கீகரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அர்த்தம் இருந்தது. இன்றைக்கு?

இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், திராவிட அரசியல் கருத்தாக்கம் என்பது மறைமுகமாகத் தமிழ் மேலாதிக்கத்தை முன்வைக்கும் அரசியல் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? நம்முடைய அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் முழக்கம் இன்று வரை சிறு சலனத்தைக்கூட உருவாக்காததற்கு இந்தச் சிக்கலே அடிப்படைக் காரணம். எண்ணிக்கை அளவில் தெலுங்கர்கள் நம்மைக் காட்டிலும் பெரும்பான்மையினர். மலையாளிகளுக்கோ நாம் ‘பாண்டி’. கன்னடர்கள் ஏற்கெனவே மராத்தியர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு தாயிடமிருந்து கிளைத்த மொழியினர் என்றாலும், தென்னிந்தியாவில் இன்று தமிழர்கள் தலைமைக்கு யார் காத்திருக்கிறார்கள்? நமக்குமே யாரையும் மேலாதிக்கம் செய்யும் நோக்கம் இல்லாதபோது, ஏன் திராவிடத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும்? ஆரிய ஜனதா கட்சி அல்லது ஹிந்து ஜனதா கட்சி என்றல்ல; பாரதிய ஜனதா கட்சி என்றே தன் அரசியல் முகத்துக்குப் பெயரிட்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.

இந்திய அரசியல் அரங்கில் இன்று திராவிடக் கட்சிகளுக்கான தேவை எங்கே இருக்கிறது என்றால், சமூகநீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரண மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநில சுயாட்சிக்கான தேசியக் குரலின் வலுவான மையமாகத் தமிழகத்தை வளர்த்தெடுப்பதிலுமே இருக்கிறது. அதற்கு, தென்னிந்தியாவில் தொடங்கி காஷ்மீர் வரை மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக அவை மாற வேண்டும் என்றால், வெளித் தோற்றத்தில் இனப் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பெயர் சுமையிலிருந்து அவை விடுபட வேண்டும்.

பிராமணர்களை உள்ளிழுத்தல்!

பிராமணர் அல்லாதோரை அதிகாரப்படுத்தியதில் கடந்த நூறாண்டுகளில் மகத்தான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது திராவிட இயக்கம். மதராஸ் மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த சமயத்தில், வருவாய்த் துறையின் நெல்லூர் வட்டத்தில் மட்டும், தெலுங்கு நியோகி பிராமணர் ஒருவரின் சொந்தக்காரர்கள் 49 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனராம். அதிகாரத்தில் எங்கும் அவர்கள் வியாபித்திருந்த அநீதியான இந்தச் சூழலை மிகப் பெரிய அளவில் புரட்டிப்போட்டிருக்கிறது திராவிட இயக்க அரசியல். அதேசமயம், நூறாண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட பிராமணச் சமூகத்தைத் தமிழ் அரசியல் களத்தை விட்டே அது வெளித்தள்ளியிருக்கிறது. தமிழகத்தின் நடப்பு சட்டசபையில் ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே பிராமணர். இதுவும் அநீதியானதே.

ஒருகாலத்தில், இங்கு முழு அரசியலையும் பிராமணர்கள் கையில் வைத்திருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வரலாற்று நியாயம் இருந்தது. ஆனால், மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலச் சூழலில் இந்தப் பார்வையில் மாற்றம் தேவை. இது ஒன்றும் புதிதல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் 100% இடஒதுக்கீடு கோரிய பெரியாரே, ‘’அந்தந்தச் சமூகங்களின் மக்கள்தொகைக்கேற்ப ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அந்த வகையில் பிராமணர்களுக்கும் 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அண்ணா, ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரைத் தவிர்த்து, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தன் இயக்கத்துக்குப் பெயரிட்டபோதே, பிராமணியம் பிறப்பின் பாற்பட்டது என்ற பார்வை மாறத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக வந்தபோது, திராவிட இயக்கங்களின் பிராமணர் ஒறுத்தல் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது. திராவிட இயக்கத்தின் இரு கட்சிகளில் ஒன்றின் தலைமைப் பொறுப்பே ஒரு பிராமணரிடம் 28 ஆண்டுகள் இருந்திருக்கிறது; 15 ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்திருக்கிறார். இரு கட்சிகளுக்குமே ஆட்சியில் முடிவெடுக்கும் நிலையில் பிராமணர்களை அதிகாரிகளாக வைத்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இருந்திருக்கவில்லை. வெளியில் வெறுமனே பிராமண எதிர்ப்பு வெற்றுச் சவடால் அடித்து, ஏனைய மாநிலத்தவர் மத்தியில் இன துவேஷியாகப் பார்க்கப்படுவதால் யாருக்கு என்ன லாபம்?

தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் கூடியது பிராமணச் சமூகம். இன்றைக்கெல்லாம் 2.5%-க்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளித்து, அரசியல்ரீதியாக அவர்களை உள்ளிழுப்பது நல்லெண்ணங்களை விதைப்பதாக மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசியல் பிரதிநிதிகளாகவும் திராவிடக் கட்சிகளைப் பகிரங்கப்படுத்தும் செயல்பாடாகவும் அமையும்.

தலித்துகள், முஸ்லிம்கள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை!

இன்றும் திராவிடக் கட்சிகள் சமூகநீதியில் முழு அக்கறை கொண்டுள்ளனவா? உளப்பூர்வமாக இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க வேண்டுமானால், வரவிருக்கும் நூற்றாண்டுக்கான இலக்காக தலித்துகள், முஸ்லிம்கள் மேம்பாட்டை அவை அறிவிக்க வேண்டும். வெறும் அடையாள நிமித்த அறிவிப்பு அல்ல. கடந்த நூற்றாண்டில் பிராமணர் அல்லாதோரை அதிகாரப்படுத்தியதை எப்படி முழு மூச்சில் செய்தனவோ அப்படி ஆத்ம சுத்தியோடு இக்காரியத்தில் இரு கட்சிகளும் இயங்க வேண்டும்.

பிராமணியம் எனும் சொல், பிராமணர்களோடு மட்டுமே தொடர்புடைய சொல் அல்ல. ஒவ்வொரு சமூகத்திடமும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கும் சாதிய மேலாதிக்க மனநிலையை உடைத்துப் பேச வேண்டும் என்றால், தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் என்று பல முகங்களில் இன்று நிற்கிறது பிராமணியம். பெருமளவில் இடைநிலைச் சாதிகளிடமிருந்தே தலித்துகள் இன்று நேரடி வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், தலித்துகளை அதிகாரப்படுத்துவதைத் தார்மிகக் கடமையாக ஏற்க வேண்டும்.

சமூக, பொருளாதார வளர்ச்சியில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நினைக்கிறார்கள் முஸ்லிம் கள். தமிழகத்தில் இத்தனை முஸ்லிம் கட்சிகள் இன்று உருவாகியிருக்கின்றன என்றால், திராவிடக் கட்சிகளிடம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திக்கும் ஏமாற்றத்துக் கும் இதில் முக்கியமான பங்குண்டு. தனிமையை உணரும் இளைய தலைமுறை முஸ்லிம்களில் கணிசமானோரை வஹாபியம் ஏந்துகிறது. இந்துத்துவம் வளருவதற்கான சூழலை உருவாக்குவதில் சங்கப் பரிவாரங்களைக் காட்டி லும் முனைப்போடு எதிர்த்தளத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் வஹாபியர்கள். முஸ்லிம்களை மைய நீரோட்டத்தை நோக்கி இழுக்க வேண்டும்.

தலித்துகள், முஸ்லிம்கள் இரு தரப்பினரையும் அதிகாரப்படுத்தும் நடவடிக்கையைக் கட்சியிலும் ஆட்சியிலும் முடிவெடுக்கும் இடங்களில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதிலிருந்து திராவிடக் கட்சிகள் தொடங்க வேண்டும். சமூகங்களுக்கு இடையேயான பரஸ்பர நல்லுணர்வையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தெடுப்பதற்கான ஆக்கபூர்வச் செயல்திட்டங்களைப் பெரியாரிய இயக்கங்கள் கண்டறிய வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கான அரசியல் இயக்கமாகவும் திராவிட இயக்கம் நீடிக்க தமிழகத்தில் எல்லோருக்குமான அரசியல் இயக்கமாக அது தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வது முக்கியம். இன்று இந்த மூன்று சமூகங்களிட மிருந்தும் அது உள் முரண்களைச் சந்தித்துக்கொண்டிருக் கிறது. அதைக் கண்டும் காணாமல் செல்வது நல்லதல்ல.

இவற்றையெல்லாம் சாதிக்க முடியுமா? சாதிக்க வேண்டும். தமிழ் எனும் சக்தி கொண்டு முடியும் என்றே தோன்றுகிறது!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

-சமஸ் | தொடர்புக்கு:samass@thehindutamil.co.in


திராவிட இயக்கங்கள்தமிழ் பதிலீடுபிராமணர்கள்உள்ளிழுக்க வேண்டும்தலித்துகள்முஸ்லிம்கள்திராவிட இயக்கம்50 ஆண்டுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x