

ஒரு பிரச்சினை மீது நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு இந்தியர்களிடம் பொறுமை இல்லை. ஒரு நெருக்கடி ஏற்பட்டால் நாம் பீதியடைகிறோம். ஆனால், நெருக்கடி மங்கும்போது அதன் மீதான கவனத்தை இழந்துவிடுகிறோம். இதன் விளைவாக, அமைப்புக் கட்டுமானம் எனும் விஷயத்தில் மோசமான நிலையில் இருக்கிறோம். அமைப்புகளை வெளித்தோற்றத்தின் அடிப்படையில், சமகால நிர்வாகப் பார்வையின் அடிப்படையில், தரவரிசை எனும் சடங்கின் அடிப்படையில் அணுகுகிறோம். இன்றைக்கு, பல்கலைக்கழகம் போன்ற பல கல்வி அமைப்புகள் நெருக்கடியில் உள்ளன. ஆனால், இதற்கு முறைப்படியான பதில்களோ, எதிர்வினைகளோ நம்மிடம் இல்லை.
உண்மைதான், கல்வி தொடர்பான ஒரு அறிக்கை, வெளிவருவதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. “டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் கமிட்டியின் அறிக்கை, மிகச் சுமாரான ஒரு முயற்சி” என்று சக பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகத்தை ஒரு அதிகாரத்துவ அமைப்பாகப் புரிந்துகொள்ளும் முயற்சி அது. பல்கலைக்கழகம் என்பது ஒரு அறிவுசார் அமைப்பு எனும் உணர்வோ, கருத்தாக்கங்களை உருவாக்கும் அறிஞர்களின் சமூகம் எனும் உணர்வோ அந்த அறிக்கையில் இல்லை.
தேர்தல் அரசியலின் ஒரு மூலமாக பல்கலைக்கழகத்தைப் பார்க்கும் அரசியல்வாதிகளின் கைகளில் அல்லது ‘காஃப்காயிஸ்க்’ (எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா வடிவமைத்த கற்பனை உலகின் அடக்குமுறைசார்ந்த தன்மை) பாணியிலான அதிகாரவர்க்கத்தின் கைகளில் பல்கலைக்கழகம் ஒரு விளையாட்டுப்பொருளாக ஆகிவருகிறது. இந்தியப் பல்கலைக்கழகம் எடுத்த எடுப்பில் காசு செலவில்லாமல் உலகத் தரத்தில் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் வெகுஜன யுகத்தில் மூன்றாம் உலகக் கல்வி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கின்ற, மாணவர்களை வளர்த்தெடுக்கின்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமிருந்து பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு அறிக்கை நமக்குத் தேவை. பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலைக் கண்டிப்பதிலிருந்தே இதை நாம் தொடங்க வேண்டும்.
பொதுப் பல்கலைக்கழகத்துக்கு எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உண்டு என்பதைக் காட்டும் வகையிலும், பல்கலைக்கழகத்தின் தார்மிகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) சமீபத்தில் நிகழ்ந்த யுத்தங்கள், கருத்தரங்கங்கள், விவாதங்கள் அமைந்தன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்தப் போராட்டத்தின் அற்புதமான விஷயம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான ஒற்றுமைதான். அதேசமயம், பல்கலைக்கழகத்தின் ஆறாப் புண்களையும் இந்தப் போராட்டம் திறந்து காட்டியது.
பல்கலைக்கழகங்கள் நிதியாதாரம் இன்றி வாட வேண்டும் என்று விரும்பும் அரசு, அந்த வறுமை நிலையில் சில நடவடிக்கைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் நினைக்கிறது. கணக்கு வழக்கு முக்கியம் என்பதை யாரும் மறுக்கவில்லை; ஆனால், பொறுப்புணர்வும் பொறுப்புக்கூறலும் அதே அளவுக்கு முக்கியமானவை. பயிற்றுக் கல்லூரிகள் அளவுக்குப் பல்கலைக்கழகங்களை நாம் மாற்றிவருவதால், நவீனப் பல்கலைக்கழகம் தொடர்பான விரிவான பார்வையையே நாம் இழக்கிறோம்.
இந்த விரிவான பார்வையை அன்றாடப் பயிற்சி மூலம் ஆசிரியர்கள் உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். டெல்லி பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் ஒருவரால், அப்பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் பழம்பெரும் பேராசிரியர்கள்தான் உண்மையான நாயகர்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். அவர்களைச் சுற்றித்தான் சரித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன; விழுமியங்கள் மாணவர்களிடம் கடத்தப்பட்டிருக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் ஒரு பிராங்க் தாக்குர் தாஸை, ஒரு ராஜேந்திர குமார் குப்தாவை, ஒரு ரண்தீர் சிங்கை, ஒரு திலீப் சிமியானை டெல்லி தந்திருக்கிறது.
ஒவ்வொரு பேராசிரியரும் சிறு அளவுக்காவது ஒரு அறிவு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள். ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒரு சரித்திரமாக வாழ்ந்த அவர்கள் ஒவ்வொருவரும், ஒரு பல்கலைக்கழகம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள். கல்லூரியே பெருமைப்படும் வகையில் ஒரு அறிவுலகத்தை ஒருவரால் உருவாக்க முடியும் என்று அவர்கள் ஒவ்வொருவரும் செய்துகாட்டினார்கள்.
நேர்மையும் படைப்பாற்றலும் கலந்த கலவைதான் அந்தப் பேராசிரியர்களின் சிறப்பு என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள். அரிதாகத்தான் அவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக, நடைமுறைவாதிகளாக இருந்தனர். அதேசமயம், ஒழுங்குமுறை பற்றிய புரிதலும் அவர்களிடம் இருந்தது. செவ்வியல் இலக்கியங்களை நேசித்த அவர்கள், மார்க்ஸையும் ஷேக்ஸ்பியரையும் பொக்கிஷமாகவே போற்றினர். புத்தக வாசிப்பின் சுகானுபவத்தைக் கற்றுக்கொடுத்தனர். ஜனநாயகத்துக்கு ஒரு செவ்வியல் சார்ந்த புரிதல் தேவை என்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தனர்.
இந்த மதிப்பீடுகள் இன்றைய வியாபாரத் தரவரிசை மதிப்பீடுகளுக்குள் அடங்காதவை; ஏனெனில், இவர்களில் பலர் தங்கள் சிந்தனைகளை எழுதிப் பதிப்பித்து, அழிந்துபடவிடுவதைக் காட்டிலும் வாய்மொழி வடிவிலேயே பகிர்ந்துகொண்டவர்கள். இந்தப் படைப்பாற்றல், ஏதோ வாழ்வியல் புலக் கல்வித் துறையுடனோ, சமூக அறிவியல் துறையுடனோ மட்டும் குறுகிவிடவில்லை. மத்திய பிரதேசத்தின் ஹோஷங்காபாத் நகரத்தின் அறிவியல் திட்டத்தை வளர்த்தெடுப்பதில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை ஆற்றிய பங்கு அபாரமானது. நிறுவனக் கட்டுமானக் கோட்பாடுகளில் இந்த முயற்சிகள் அரிதாகத்தான் குறிப்பிடப்படுகின்றன. இவர்களிடம், நெறிமுறையும் படைப்பாற்றலும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டன.
இந்த விளையாட்டுத்தனமான அறிவார்த்த முயற்சிகள், இன்றும் பலருக்கு புதிய கற்பனைகளைத் தூண்டுகின்றன. இதுபோன்ற புரிதல் கொண்ட ஒரு சமூகத்தை, கூலிப்படைகள் மூலம் உருவாக்கிவிட முடியாது என்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். அறிவார்த்தம் மீதான காதலுடன் பல்கலைக்கழகம் மீதான காதலும் ஒரு சமூகமாக, வாழ்வு முறையாக இருந்தது. ஆனால், இந்தக் குழுக்கள் இன்று பழைய நினைவுகளாகிவருகின்றன. ஆசிரியர் - மாணவர் உறவை வறண்டுபோன வாடிக்கையாளர் உறவாக, பணம் வசூலிக்கும் முறையாகப் பார்க்கும் நிலை இன்று வளர்ந்துவருகிறது.
ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கிய விழுமியங்கள்தான் அதைக் கட்டிக்காக்கின்றன. ஒரு திறனைக் கைக்கொள்வது என்பது ஒரு கலை வடிவம் போன்றது; முன்தீர்மானிக்கப்பட்ட கல்வியாளர்களின் பணியல்ல அது. கலைத் திறனுக்கு எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திறன், காதல் உணர்வு, திறன், தொழில்நுட்பம் தேவை. கலைத் திறனைக் கற்றுக்கொள்வது என்பது இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வது போன்றதல்ல. இதற்குப் பட்டறிவும், மாற்றுக் கண்ணோட்டமும் சேர்ந்த பார்வை தேவை. பல்கலைக்கழகம் என்பது கலைத் திறன் அமைப்புகளின் கடைசி அமைப்பு; கற்பித்தலையும், ஆய்வையும் சிதைப்பது என்பது பல்கலைக்கழகத்தையே சிதைப்பதாகும்.
ஒரு பொதுவான வளமாக ஒரு பல்கலைக்கழகம் செழுமையுடன் இருப்பதற்கு, அந்தப் பொதுவளம் பராமரிக்கப்படுவது அவசியம். பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு பற்றியோ, அதைப் புதுப்பிப்பது பற்றியோ, பேணுவதைப் பற்றியோ இன்று யாரும் பேசுவதில்லை. அதேபோல, பன்முகத்தன்மையோ, மாற்றுக் கருத்தோ, விளிம்புநிலைத் தன்மையோ இல்லாமல் எந்த ஒரு பொது வளமும் பிழைத்திருக்க முடியாது. ஒரு பல்கலைக்கழகம் என்பது விசித்திரமான நடவடிக்கைகளையும், எதிர்க் குரல்களையும் பேண வேண்டிய அமைப்பு. அது இயல்பாக வெளிப்படுத்தும் விஷயங்களுக்காக அதைத் தண்டிப்பது என்பது அரசியல்ரீதியான தவறான புரிதல். எதிர்காலம் அதை மன்னிக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அடிப்படைப் பார்வையை அரசோ, அரசியல் கட்சியோ, தொழில்துறையோ வரையறுக்க நாம் அனுமதிக்கக் கூடாது!
- ‘தி இந்து’ (ஆங்கிலம்)