

எதிராளியை எதிரியாக நடத்தாத, சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்காமல் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கக்கூடிய அரசியலுக்கு உதாரணம், 100 வருடங்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி நடத்திய சம்பாரண் இயக்கம் என்று சொல்லலாம். இன்றைக்கு இருப்பதைவிட மிக மோசமான சூழலில் இயங்கிவந்த அரசியல் இயக்கம் அது. அந்த இயக்கம் நிலைத்திருக்கக்கூடிய சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது மட்டுமல்ல, எதிர்த்தரப்பைத் தனிமைப்படுத்தாமலேயே அதைச் செய்தது.
சம்பாரண் இயக்கம் என்பது அடக்குமுறை காலனி அரசுக்கும் அதன் வணிக நோக்கங்களுக்கும் எதிரான முழுமையான புரட்சி என்று நமது தேசியவாதக் கருத்தாக்கம் நிறம் பூசிவிட்டது. ஆனால் உண்மையில், சம்பாரண் இயக்கம் அப்படியானது அல்ல. ஆர்ப்பாட்டப் பேரணிகளையோ, ‘வாடகை தர மாட்டோம்’ எனும் போராட்டங்களையோ, சத்தியாகிரக அல்லது ஒத்துழையாமை இயக்கத்தையோ பிஹாரின் சம்பாரண் மாவட்டத்தில் காந்தி ஏற்பாடு செய்யவில்லை. அரசுக்கு எதிரான பகிரங்கமான புரட்சியைத் தூண்டுவதற்குப் பதிலாக, அனைத்துத் தரப்பினரும் ஏற்கக்கூடிய, நீடித்து நிற்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அரசியல் ரீதியான வலியுறுத்தலை மேற்கொள்ளும் கலையையே அவர் பயன்படுத்தினார்.
அஹிம்சை ஆயுதம்
சம்பாரணில் அரசு மற்றும் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாகப் பிரச்சினை நீடித்து வந்தது. அவுரி உற்பத்தியைக் கட்டாயப் படுத்தியதுடன், நியாயமற்ற வாடகையையும் வசூலித்துவந்த பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைதான் முக்கியக் காரணம். காந்தியின் வருகைக்கு முன்னதான பத்தாண்டுகளில் சம்பாரண் விவசாயிகள் வன்முறைப் போராட்டங்கள் முதல் அரசிடம் மனு அளிப்பது வரை எல்லா முயற்சி களையும் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால், நிலைமையை மாற்ற அவர்களால் முடியவில்லை.
1917 ஏப்ரலில், காந்தி அங்கு சென்றார்; போராட்டத்துக்குத் தலைமை தாங்க அல்ல. நிலவரம் என்ன என்பதை ஆராய்வதற்காகவே சென்றார். சந்தேகமடைந்த உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவரைக் கைதுசெய்வதற்கு சட்டரீதியான எந்தக் காரணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு சிறு சம்பவத்தைத் தவிர, காந்தியைச் சுதந்திரமாகச் செயல்படவே அரசு அனுமதித்தது. அவரே சிக்கலில் மாட்டிக்கொள்ளட்டும் என்பதுதான் அரசின் திட்டம். எனினும், அந்த வலையில் விழ காந்தி தயாராக இல்லை.
சம்பாரணில் தங்கியிருந்த காலம் வரை சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட்டு வந்ததுடன், உள்ளூர் அதிகாரிகள், தோட்ட அதிபர்களிடம் மரியாதைக்குரிய உறவு களைப் பேணுவதற்காகப் பல வலிகளைப் பொறுத்துக்கொண்டார். தனது நடவடிக்கை களை அரசுக்குத் தெரியும் வகையில் அமைத்துக் கொண்டதுடன் அரசின் அறிவுரை களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அங்கு அவர் முதலில் பேசச் சென்றது தோட்ட அதிபர்களிடம்தான். விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையின்போது அவருடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ‘தன்னைப் பின்தொடர்ந்துவரும் போலீஸ்காரர்கள் முன்வந்து தனது பணிகளில் உதவ வேண்டும்’ என்று கோரி மாவட்ட நீதிபதிக்கு ஒரு கட்டத்தில் கடிதமே எழுதினார். அவரது நியாயமான நடவடிக்கை காரணமாக, அதிகாரிகள் அவரை வேறு வழியின்றி மரியாதையாக நடத்த வேண்டி வந்தது.
சமரச வழிமுறை
அதேசமயம், மக்களிடம் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளை, சாத்திய மான அரசியல் கருவியாக வடிவமைத்துக் கொண்டிருந்தார் காந்தி. விவசாயிகள் தங்கள் நிலை குறித்து அளித்த விவரங்களைப் பதிவுசெய்வது உள்ளிட்ட பணிகளில் அவரும் அவரது குழுவினரும் ஈடுபட்டிருந்தனர். மேம்போக்காகப் பார்த்தால், நிலைமையை ஆராயும் பணியில் மட்டும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று தோன்றும். இவற்றைத் தொகுத்து அரசிடம் அறிக்கையாக அளித்துக்கொண்டிருந்தார் காந்தி. அத்துடன், விவசாயிகள் முன்பைப் போலவே தங்களது கடமைகளைச் செய்துவர வேண்டும் என்றும் கூறினார்.
எனினும், அவரது நடவடிக்கைகள் விவசாயச் சமூகத்திடம் இருந்த கோபத்தை வெளிப்படுத்துவதை உறுதிசெய்தன. மறுபக்கம், அவரது பெயரால் பொது இடங்களில் போராட்டம் நடத்துவதில் பிற தலைவர்கள் ஈடுபடத் தொடங்கினர். “காந்தி அபாரமான தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தும் நிலையில், சம்பாரணில் அவர் இருக்கும் வரை, ஒவ்வொரு பெரிய வதந்திக்கும் அவரது பெயர் பயன்படுத்தப்படலாம்” என்று அதிகாரி ஒருவர் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை உருவானது.
மிக முக்கியமாக, மக்களின் கோப உணர்ச்சியைத் தணித்ததுடன், பிரச்சினை கைமீறிப் போய்விடாத அளவுக்குத் தனது கட்டுப்பாட்டில் காந்தி வைத்துக்கொண்டார். அதிரடியான எதிர்ப்பு உருவாகியிருந்தால், அது அரசின் அடக்குமுறைக்குத்தான் வழிவகுத்திருக்கும். அத்துடன், தோட்ட அதிபர்களுக்கும் விவசாயி களுக்கும் இடையிலான உறவில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கும். உண்மையில், அப்போது இருந்த சூழலில் நிலைமை கைமீறிப் போய்விடுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், காந்தி அங்கு இருந்ததால் அப்படி நடக்கவில்லை. ஒரு இயக்கம் உருவாகலாம் எனும் அச்சுறுத்தல், உண்மையில் ஒரு இயக்கம் செயல்படுவதைக் காட்டிலும் நல்ல பலன் தரக்கூடியதாக இருந்தது.
இறுதி வெற்றி
காந்தி நடத்திய விசாரணைகள் தொடர்பாக ஒருதலைப்பட்சமான தகவல்களே வெளியானதாக எரிச்சலடைந்த தோட்ட அதிபர்கள், விவசாயிகளின் நிலை குறித்து அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடக்கத்தில் அக்கறை காட்டாத அரசு, பின்னர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. 1917 ஜூனில் இதுதொடர்பாக ஒரு ஆணையத்தை அரசு அமைத்தது. அதில் விவசாயிகளின் பிரதிநிதியாக காந்தியும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
அந்த ஆணையம் அமைக்கப்பட்டது ஒருவகையில் பாதி வெற்றிதான். பண்ணை முதலாளிகளின் சம்மதம் இன்றி, அந்த ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அத்தனை பலம் இருக்காது என்று காந்திக்குத் தெரியும். பண்ணை முதலாளிகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்துவிட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், அந்த ஆணையம் தனது எல்லைகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். அந்த ஆணையத்தின் கருத்துகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில சமயம், மிகச் சிக்கலான பிரச்சினைகளின்போது பேச்சுவார்த்தைகளில் பண்ணை முதலாளிகளைப் பங்கேற்கச் செய்தார். மிக முக்கியமாக, அந்த ஆணையம் தனது அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாகவே அதன் சில அம்சங்கள் பண்ணை முதலாளிகளால் ஏற்கப்பட்டன.
1917 அக்டோபரில், விவசாயிகள் கட்டாயமாக (அவுரி) இண்டிகோ பயிரிட வேண்டும் என்ற நிலையை ஒழிக்க அந்த ஆணையம் பரிந்துரைத்தது. விவசாயிகளுக்குக் கிடைத்த முக்கிய வெற்றி அது. எனினும், பண்ணை முதலாளிகள் தங்கள் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாக, பண்ணை முதலாளிகள் ஒன்றுசேர்ந்து பரிந்துரைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, இவ்விஷயத்தில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டுப் பிரிந்து நின்றனர். அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியான ‘பிஹார் பிளான்ட்டர்ஸ் அசோசியேஷ’னுக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டது. இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பண்ணை முதலாளிகள் இருவர் ஒருவருக்கொருவர் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அது தேசிய அரசியல் களத்தில் காந்தியை நிலைபெற வைத்தது. எனினும், ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி கூட இல்லாமல், பண்ணை முதலாளிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாமல், அரசை விமர்சித்து ஒரு தலையங்கம் கூட எழுதாமல் காந்தி இதைச் சாதித்தார். உண்மையில், தனது பணியை ஏகாதிபத்தியக் கொள்கைக்குத் தனது பங்களிப்பாகவே கருதினார் காந்தி. இதுகுறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்: “பல்லாண்டுகால அடக்குமுறையை எதிர்த்ததன் மூலம், பிரிட்டிஷ் நீதியின் இறையாண்மையை நான் காட்டியிருக்கிறேன்”!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: வெ.சந்திரமோகன்
- சந்தீப் பரத்வாஜ், டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார்.