முதலில் அதிர்ச்சி; அப்புறம் சிரிப்பு! - ச. தமிழ்ச்செல்வன்

முதலில் அதிர்ச்சி; அப்புறம் சிரிப்பு! - ச. தமிழ்ச்செல்வன்
Updated on
1 min read

முதலில் அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் வாசிக்கையில், இது ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கட்டுரை என்று புரிந்துகொண்டேன். வரிக்கு வரி மறுத்து எழுதும் அளவுக்கு அறிவியல்பூர்வமான பார்வையோ ஆதாரமோ இல்லாத வெறும் கருத்து உதிர்ப்புகளின் குவியல் அது.

இரு பாரம்பரியங்கள்

பொதுவாக, தமிழ் மொழி வரலாற்றில் இரு பாரம்பரியங்கள் உண்டு. ஒன்று, தமிழ் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உழைத்தவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம். இன்னொன்று, தமிழின் ஜீவகளையை, அதன் செறிவை, அதன் மக்கள் பிடிமானத்தைச் செரிக்க மாட்டாமல் அதை ‘நீச பாஷை’என்று தூற்றியும் ஆட்சியிலிருப்போர் துணையுடனும் அதைப் பல வழியிலும் பலவீனப்படுத்த உழைத்தவர்களின் அழித்தொழிப்புப் பாரம்பரியம். மத்திய - மாநில அரசுகளின் கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும் மேலும் பெரும் குழப்பங்களைக் கொண்டுவந்தது. உலகமயம் என்பது உலக மக்களின் மீது பன்னாட்டு நிதியங்களும் ஏகாதிபத்தியங்களும் வல்லந்தமாகத் திணித்த ஒன்று. அதற்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் நடக்கின்றன. இவ்வுலகமயம் உள்ளூர் மொழிகளை அழித்து ஆங்கிலத்தைத் திணிக்கிறது. உள்நாட்டு ஆட்சியர்களின் பொருளாதாரக் கொள்கைகளும் இதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன. இத்துயரங்களை எல்லாம் எவ்வித விமர்சனமுமின்றி ஏற்றுக்கொள்வதோடு ஒரு தமிழ் எழுத்தாளன் என்கிற முறையிலாவது சிறிய கோபமும் கொள்ளாமல் உற்சாகத்தோடு குதித்து வரவேற்கும் ஜெயமோகனின் கட்டுரை இவ்விரண்டாம் பாரம்பரியம் சார்ந்தது. அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவுப் பணிக்காகக் கிராமம் கிராமமாகச் சென்று தமிழ் மக்களிடம் பணியாற்றியபோது நான் கண்ட பேருண்மை-ஆட்சியாளர்களின் சகல மதிகெட்ட முயற்சிகளையும் மீறி, தமிழ் அதன் அழகுகளோடும் செறிவோடும் உழைப்பாளி மக்களிடம் குடிகொண்டிருக்கிறது என்பதைத்தான். செல்பேசிக் குறுஞ்செய்திகளின் ரோமானிய வரிவடிவத்தின் வரவால் அழிந்துபோகுமளவுக்குத் தமிழ் பலவீனமாக இல்லை!

- ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச. தலைவர். - தொடர்புக்கு: tamizh53@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in