

தேசிய அளவில் புகழ்பெற வேண்டும் என்று நினைக்கும் எல்லா அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையிலும் இது சரி - ஏன் கட்டாயமும்கூட - அதாவது, ஏழைகளைப் பற்றிப் பேசுவது. அமெரிக்க அரசியல் மட்டும் விதிவிலக்காகிவிடுமா என்ன? ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஏழைகளிடம் செல்வது எளிது. ஏழைகளிடம் சுரண்டி பணக்காரர்களுக்குக் கொடுக்க நினைக்கும் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கு இது கடினம்.
எவ்வளவு செய்தாலும், சொன்னாலும் ஒருமுறை ஏற்பட்டுவிட்ட கெட்ட பெயரைப் போக்கிக்கொள்வதென்பது எளிதல்ல என்பதும் உண்மையே. ஏழைகளை வதைப்பதையே வழக்கமாக்கிக்கொண்டுவிட்ட குடியரசுக் கட்சியினர், 2012 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மேலும் வாட்டி வதைத்திருப்பார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
குடியரசுக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் ஏழைகளை மேலும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பார்கள் என்று கூறினால் அது கெட்ட எண்ணத்துடன் சொல்லப்படுவது அல்ல, அனுபவத்திலிருந்துதான் கூற நேர்கிறது. ஏழைகள் மீது தங்களுக்கும் அக்கறை இருக்கிறது என்று குடியரசுக் கட்சியினர் சமீபத்தில் கூறினாலும் அதை நிரூபிக்கும் வகையிலான கொள்கை அறிவிப்புகள் அவர்களிடம் ஏதுமில்லை.
சமீபக் கூத்துகள்
குடியரசுக் கட்சியின் சமீபத்திய செயல்களை ஆராய்வோம்.
‘ஒபாமா-கேர்’ என்று அழைக்கப்படும் ஏழைகள், நடுத்தர மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்தான் சமீபத்தில் அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டமாகும். குடியரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமான, மருத்துவ உதவியை விரிவுபடுத்துவதை அனுமதிக்க மறுக்கின்றன. அதன் மூலம் 50 லட்சம் ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவப் பயன்கள் கிட்டாமல் தடுக்கின்றன. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதை அனுமதிப்பதால் மாநில அரசுகளுக்குக் கூடுதல் செலவு ஏதும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசுதான் எல்லாச் செலவுகளையும் ஏற்கப்போகிறது. அப்படியிருந்தும் இந்தத் திட்டங்களைத் தங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, தங்கள் மாநிலங்களில் வேலை யில்லாதோருக்கான உதவித்தொகைகளையும், கல்விக் கான உதவித்தொகைகளையும் இவைபோன்ற இதர உதவிகளையும்கூட குடியரசுக் கட்சி அரசுகள் வெட்டி வருகின்றன. எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் ஏழைகளைத் துன்புறுத்துகிறது குடியரசுக் கட்சி என்பதில் மிகை எதுவுமில்லை.
2012-ல் வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சியினர் வெற்றிபெற்றிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அப்போதும் இப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்கள். 2010-ல் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததிலிருந்தே மருத்துவ உதவி, வேலையில்லாதவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றையும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் தேசிய அளவிலேயே குறைத்துவருகின்றனர்.
குடியரசுக் கட்சியினர் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாதா? நிச்சயமாக முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன காரணங்கள்?
முதலாவதாக, ஏழைகளுக்கு உதவிக்கொண்டே யிருந்தால் அவர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது என்று குடியரசுக் கட்சியினர் நம்புகிறார்கள். இந்தக் கருத்து முழுக்க முழுக்கச் சரியில்லை என்றும் கூறிவிட முடியாது.
வேலையில்லாதவர்களுக்கான உதவித்தொகையைப் பொறுத்தவரை அவர்களுடைய கருத்து ஏற்க முடியாதது. வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை தரப்படுவதால்தான் அவர்கள் வேலைக்குப் போகாமல் இருக்கிறார்கள் என்று கருதுவது முட்டாள்தனமானது. வேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்க முடியும் எனும்போது, அரசாங்கம் கொடுக்கும் சொற்ப உதவித்தொகைக்காக யாராவது வேலைக்கே போகாமல் இருப்பார்கள் என்று கருதுவது சரியல்ல.
அரசு மேற்கொள்ளும் அரைகுறையான வேலைகள், ஒருங்கிணைக்கப்படாத வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்றவற்றால், குறைந்த வருவாய்ப் பிரிவினர் தங்களை மேம்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளைத் தண்டிப்பதுபோல ஆகிவிடுகிறது. ஏழைகள் எவ்வளவு அதிகமாகச் சம்பாதித்தாலும் அவர்களுக்கு மிகக் குறைந்த பலன்கள்தான் ஏற்படும் என்றாகிவிட்டது. குறைந்த வருவாய்ப் பிரிவினரின் வருவாயோடு ஒப்பிடுகையில், அவர்கள் செலுத்தும் வரியின் பங்கு மிக அதிகமானது. அவர்கள் கூடுதலாக ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 80 பைசாவை வரியாக வசூலித்துவிடுகிறது அரசு.
ஏழைகள் அதிகம் வரி செலுத்தாமல் இருக்க வேண்டும் என்றால், அதிகம் சம்பாதிக்க முயற்சிக்கக் கூடாது. அதிகம் சம்பாதிக்காவிட்டால் அவர்கள் அதிக பலன்களையும் பெற முடியாது. ஏழைகளுக்கான பலன்களைக் குறைப்பதால் அவர்களுடைய உழைப்புத்திறன் குறைந்து, வருவாய் மேலும் சரிந்து வறுமை அதிகரிக்கும். ஊட்டச்சத்துக் குறைவாலும், மருத்துவ நலனுக்குச் செலவு செய்யப் பணம் போதாமலும் தவிக்கும்போது, வருமான வரி போன்றவற்றில் சிறிதளவு சலுகைகள் கொடுத்தாலும் அதனால் ஏழைகள் முன்னேற முடியாது.
இதற்கு மாற்றாக, சலுகைகள் தரப்படும் வேகத்தை மட்டுப்படுத்தலாம். ‘ஒபாமா-கேர்’ என்று அழைக்கப்படும் மருத்துவப் பயனீட்டுத் திட்டம் அதைத்தான் செய்கிறது. அந்த திட்டம் ஏழைகளின் நிலைமையை நேரடியாக உயர்த்திவிடவில்லை. ஆனால், அதிக ஊதியம் பெற அவர்களை ஊக்குவிக்கிறது. ஊதியம் உயர்ந்தால் அவர்களே அரசின் ‘பயனாளி வரம்பிலிருந்து’ விடுபட்டுவிடுகிறார்கள். இந்த ஊக்குவிப்பு வழங்க அரசுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. ஏழைகளின் வருமானத்தின் மீது வரி விதிப்பதைவிட, உயர் வருவாய்ப் பிரிவினர் மீதான வரியை மேலும் சிறிது உயர்த்தி, அதிலிருந்து கிடைக்கும் தொகையை ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு உதவ குடியரசுக் கட்சியினர் தயாராக இல்லை என்பதில் வியப்பேதும் கிடையாது.
அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும், பணக்காரர்களுக்கு மிதமான வரியே விதிக்கப்பட வேண்டும் என்று கருதும் குடியரசுக் கட்சி, ஏழைகளுக்கு உதவ நினைக்கவில்லையே என்பதில் வியப்பேதும் இல்லை. குடியரசுக் கட்சிக்காரர்களின் இந்த சிந்தனைப்போக்கு மாறுமா?
அமெரிக்க ஏழைகளின் எதிரிகள்
குடியரசுக் கட்சியினர் எப்போதும் இப்படி இருந்ததில்லை. வறுமைக்கு எதிரான பெரிய திட்டங்களான இலவச மருத்துவ உதவி, வேலையில்லாதவர்களுக்கு உணவு வில்லைகள், குறைந்த வருமானப் பிரிவினரின் வருவாய் உயர்ந்தால் வரிச்சலுகை போன்ற அனைத்துமே ஜனநாயகம், குடியரசு ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் கூட்டு முயற்சியால் விளைந்தவைதாம். வறுமை ஒழிப்புத் திட்டங்களில் அவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள் அல்ல. எதிர்காலத்தில் அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். கடினமான போக்கு மாறி, ஏழைகள்பால் அவர்களுக்குக் கரிசனம் ஏற்படலாம்.
ஆனால், இப்போதைக்கு அவர்களை, அமெரிக்க ‘ஏழைகளின் எதிரிகளாகவே’ பார்க்கும்படி நேரிட்டுள்ளது. பால் ரியானும் மார்கோ ரூபியோவும் எவ்வளவு முயன்றாலும் குடியரசுக் கட்சியினர் பற்றிய மக்களுடைய கண்ணோட்டம் சில காலத்துக்கு இப்படியே நீடிக்கும்.
© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி