ஒரு நிமிடக் கட்டுரை: அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!

ஒரு நிமிடக் கட்டுரை: அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!
Updated on
1 min read

‘பராசக்தி’ திரைப்படத்தின் முடிவில், ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற பாடல் முழங்கும். அந்தப் பாடலை இயற்றியவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியான கு.மு.அண்ணல் தங்கோ.

1916-ல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து, அதை வளர்த்தெடுத் தவர்களில் கு.மு.அண்ணல் தங்கோ முக்கியமானவர். அவரும் பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்படுத்திக் கொண்டவர். சுவாமிநாதன் என்ற பெயரை அண்ணல் தங்கோ என்று மாற்றிக்கொண்டார். தனது திருமணத்தைத் தானே முன்னின்று திருக்குறளை முன்மொழிந்து தமிழில் நடத்திக் கொண்டவர் அவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

1918-ல் காங்கிரஸில் சேர்ந்த அண்ணல் தங்கோ, 1923-ல் மதுரை வைத்தியநாத ஐயருடன் இணைந்து கள்ளுக் கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். நாக்பூரில் தடையை மீறி கொடிப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். டாக்டர் வரதராசுலு நாயுடுவுடன் இணைந்து குருகுலப் போராட்டத் திலும் கலந்துகொண்டார்.

அண்ணல் தங்கோவின் தலைமையில் நடந்த நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் காமராஜர் ஒரு தொண்டராகக் கலந்துகொண்டிருக்கிறார். நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, அப்போது நீதிபதியாக இருந்த பம்மல் சம்பந்த முதலியார் அண்ணல் தங்கோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைக்கு உத்தரவிட்டார். சிறைக்குச் சென்ற அண்ணல் தங்கோ அங்கு பம்மலாரின் நாடகத்தை நடித்து சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கு நிதி திரட்டினார்.

சைமன் குழு வருகை எதிர்ப்பு, உப்பெடுக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த பல சுதந்திரப் போராட்டங் களில் கலந்துகொண்டவர் அண்ணல் தங்கோ. பின்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, ‘உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை’ எனும் அமைப்பை நிறுவினார். ‘தமிழ்நிலம்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.

தமிழில் பெயர் சூட்டுவதை ஒர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றவர் அவர். மணியம்மையாருக்கு அரசியல்மணி என்று பெயர் சூட்டியவர் அவர். பின்பு, அப்பெயரில் அரசியல் மறைந்து, மணி மட்டும் நிலைபெற்றது. சி.பி.சின்ராஜ், சிற்றரசு ஆனதும் அவரால்தான். கருணாநிதிக்கும் அருட்செல்வன் என்ற பெயரை அவர் பரிந்துரை செய்திருக்கிறார். கருணாநிதியும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே பிரபலமாகி விட்ட பெயர் என்பதால், அந்த யோசனையை அண்ணா மறுத்துவிட்டார். திராவிடர் கழகத்துக்கு தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்றும் அண்ணல்தங்கோ வலியுறுத்தியவர். அந்த கோரிக்கையை பெரியார், அண்ணா இருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏப்ரல் 12- கு.மு.அண்ணல்தங்கோ பிறந்தநாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in