Published : 22 Jun 2016 09:05 AM
Last Updated : 22 Jun 2016 09:05 AM

உச்சத்தில் மோடியின் பாஜக

அலசல்: கட்சி வளர்ச்சி



*

‘‘இந்நாட்டிலுள்ள அறிவிற் சிறந்தவர்கள் சமூக வாழ்வில் தீண்டாமையைப் பாவமாகக் கருதுகிறார்கள். ஆனால், ஆச்சரியத்துக்குரிய வகையில் அரசியல் வாழ்வைப் பொறுத்த வரை தீண்டாமையைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள், இந்த அறிவிற் சிறந்தவர்கள்’’ எனத் தனது கட்சியான பாரதிய ஜன சங்கத்தை (பாரதிய ஜனதா கட்சியின் 1980-க்கு முந்தய வடிவம்) பல அரசியல் கட்சிகளும் கூட்டணியில் சேர்க்காது புறக்கணிப்பதைப் பற்றிப் பெரிதும் குறைபட்டுக்கொண்டார், அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தீனதயாள் உபாத்யாயா. இவர் அவ்வாறு பேசியது 1967-ல் கோழிக்கோட்டில் நடந்த ஜன சங்கக் கட்சியின் மாநாட்டில்.

தேர்தல் அரசியலில் தாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாகிறபோது, பிற கட்சிகள் தங்களைத் தீண்டத்த காதவர்களாகக் கருதாது என்பதையும் தனது பேச்சில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போது, சமீபத்தில் நடந்துமுடிந்திருந்த தேர்தலில், வட மாநிலங்களில் ஜன சங்கக் கட்சி பெற்றிருந்த கணிசமான வெற்றியால் (குறிப்பாக, உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் 98 இடங்களில் வென்று காங்கிரஸுக்கு அடுத்த இடத்தை அக்கட்சி பிடித்திருந்தது) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சோஷலிஸ்ட் கட்சிகள், சுதந்திரா கட்சி ஆகியவை ஜன சங்கத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்திருந்தன. அதே தேர்தலில் மக்களவையில் 9%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 35 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. வாக்கு சதவிகித அடிப்படையில் 40% வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸுக்கு அடுத்தபடியான பெரிய கட்சியாக ஜன சங்கம் இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகிய இரண்டும் சேர்ந்து பெற்ற வாக்கு சதவிகிதமும் ஜன சங்கம் பெற்ற வாக்கு சதவிகிதமும் ஏறக்குறைய சமம்.

வேதனையே சாதனை

பிற அரசியல் கட்சிகளால், இந்துத்துவா கொள்கையின் காரணமாக புறக்கணிக்கப்பட்ட ஜன சங்கம், அதே அரசியல் கட்சிகளால் 1967-ல் சில வட மாநிலங்களில் அக்கட்சி அரவணைத்துக்கொள்ளப்பட்டது என்றால், அடுத்த 30 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளாலும் அரவணைத்துக்கொள்ளப்படும் கட்சியாக அது மாறியிருப்பது நாட்டுக்கு வேதனையானதாக இருந்தாலும், அக்கட்சியைப் பொறுத்தவரை பெரும் சாதனைதான். கடந்த 30 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாக இருந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு அக்கட்சி வளர்ந்திருப்பது அதன் சாதனையில் மற்றுமொரு மைல்கல். இந்த சாதனைக்குப் பின்னாலிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, கடந்த 50 ஆண்டுகளில் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் பெரும் பகுதி பலன் அக்கட்சிக்குச் சென்றதும், ராமஜென்மபூமி, பாபர் மசூதி விவகாரத்தில் மக்கள் மத்தியில் மத வெறியைப் பெருமளவுக்குத் தூண்டி விட முடிந்ததுவுமே.

வங்கதேசத்தில் சிறுபான்மையாக இருந்த இந்துக்கள் பெரும் வன்முறைக்குள்ளாகி அகதிகளாக மேற்குவங்கத்துக்கு வர நேர்ந்த விஷயத்தில் நேருவுடன் கருத்து மாறுபாடு கொண்டு 1951-ல் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகிய சியாமா பிரசாத் முகர்ஜி (இவர் 1944-ல் தீவிர இந்துத்துவா அமைப்பான இந்து மகாசபையின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர்) காங்கிரஸுக்கு எதிராகத் தொடங்கிய கட்சிதான் பாரதிய ஜன சங். ஆர்எஸ்எஸ் உதவியுடன் தொடங்கிய ஜன சங்கில் முகர்ஜிக்கு உதவியாகப் பணியாற்ற தீனதயாள் உபாத்யாயா உட்பட மூவரை ஆர்எஸ்எஸ் அனுப்பி வைத்தது. அடுத்த ஓரிரு மாதங்களில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் மூன்று சதவிகித வாக்குகளையும் மக்களவையில் மூன்று இடங்களையும் ஜன சங் கைப்பற்றியது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் முகர்ஜி மரணமடைய.. தலைவரான மௌலி சந்திர சர்மா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வர மறுத்த நிலையில், அவருக்கு நெருக்கடி தந்து பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்த பின்னர், 1954 இறுதியில் கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ஆர்எஸ்எஸ்.

பலன் தந்த ரத ஊர்வலம்

தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தில் கலந்து, இது வரை தாங்கள் அணுக முடியாதிருந்த பகுதிகளில் செல்வாக்குப் பெறவும் அகில இந்திய அளவில் மரியாதைக்குரிய இடம் பெறவும் ஜன சங்கத்துக்கு வாய்ப்பளித்து ‘புண்ணியம்’ கட்டிக்கொண்டவர் காந்தியவாதியும் சோஷலிஸ்ட்டுமான ஜெயபிரகாஷ் நாராயண் (ஜெ.பி). 1974-75ல் இந்திரா காந்தியின் ஊழல் மற்றும் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகத் தான் தொடங்கிய ‘முழுப் புரட்சி’இயக்கம் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜன சங்கத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதன் பலன் 1977-ல் தேர்தலில் பிரதிபலித்தது. மக்களவையில் ஜனதா கட்சி பெற்ற 295 இடங்களில் சுமார் 90 பேர் ஜன சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அத்வானி தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆனார்.

அடுத்த பாய்ச்சல் போஃபர்ஸ் ஊழலுக்கு எதிராக வி.பி. சிங் தொடங்கிய இயக்கத்தின் வழியே நடந்தது. ஜெ.பி. செய்த அதே தவற்றை வி.பி. சிங்கும் செய்தார். காங்கிரஸுக்கு எதிராகக் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக, இப்போது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்திருந்த ஜன சங்கத்தைத் தன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். 1989 பொதுத் தேர்தலில் சுமார் 11% வாக்குகளுடன் 85 இடங்களைக் கைப்பற்றியது. மண்டல் பரிந்துரைகளை வி.பி.சிங் அமல்படுத்தியதை நேரடியாக எதிர்க்க முடியாத பாஜக, ராமஜென்ம பூமி பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தது. அத்வானி மேற்கொண்ட ரத ஊர்வலம் அக்கட்சிக்குப் பெரும் பலனைப் பெற்றுத்தந்தது.

1998-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜகூ) ஆட்சியமைந்தது. 1999-ல் ஆட்சிக்கான தனது ஆதரவை அஇஅதிமுக விலக்கிக்கொண்டவுடன் அதற்காகவே காத்திருந்ததைப் போல தேஜகூவில் இணைந்தது திமுக. ஒரு வகையில் இது அரசியல் தீண்டாமையிலிருந்து பாஜக முழுமையாகவே வெளிவந்ததைக் குறிக்கிறது.

வரலாற்றில் திருப்புமுனை

பாஜகவின் வரலாற்றில் 1967, 1977, 1989, 1996, 1998 தேர்தல்கள் முக்கியமான திருப்புமுனைகளை ஏற்படுத்தியவை என்றால், 2014 தேர்தல் பாஜகவின் வரலாற்றில் மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றிலேயே திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த முறையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வரலாறு காணாத ஊழலுக்கு எதிராக மக்களிடம் உருவான பெரும் கோபம் பாஜகவுக்கே சாதகமாக அமைந்தது. ஊழல், பணவீக்கம், அதிகார முறைகேடுகள் அளவுமீறிப் போகிறபோது அடிப்படைவாத, பாசிச சக்திகள் மக்களிடம் செல்வாக்குப் பெறுவது என்பது உலகெங்கும் காணப்படும் புலப்பாடு. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதே நரேந்திர மோடி தலைமையில் பாஜக பெற்ற பெரு வெற்றி காட்டுகிறது. ஊழலின்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தங்களது அரசியல், கருத்துச் சுதந்திரத்தையே விலையாகத் தருவதற்கும் படித்த நடுத்தர வர்க்கம் தயாராக இருப்பதை 2014 தேர்தல் நிரூபித்தது. ஒரு நாட்டில் ஜனநாயகம் செழித்திருப்பதற்கு ஆணிவேராக இருப்பது நடுத்தர வர்க்கம் என்று பிரான்சிஸ் புக்குயாமா உட்படப் பலரும் நம்புவது அவ்வளவு உண்மையல்ல என்பதற்கு இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் மோடி பெற்ற பேராதரவே சாட்சி.

மத்தியில் மட்டுமல்லாது, மாநிலங்களிலும் அது பெற்றுவரும் வெற்றிகள் மூலம் முக்கியமான அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸிடமிருந்து பாஜக பறித்துக்கொண்டது. காங்கிரஸ் தொடர்ந்து சந்தித்த படுதோல்விகள், அதன் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பெரும் சரிவுகள், இனி அந்தக் கட்சியால் 1990-களின் தொடக்கம் வரை அது இந்திய அரசியலில் பெற்றிருந்த இடத்தை மீண்டும் அடைவது இயலாது என்றாகிவிட்டது.

இன்று இந்தியாவின் ஆகப் பெரும் கட்சி பாஜகதான். சமீபத்தில் அசாமில் அது பெற்ற வெற்றி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டதுபோது, இது மத, இன மற்றும் பிரதேச அடையாளங்கள் பாஜக தலைமையில் ஒன்றிணைக்கப்பட்டதன் காரணமாகக் கிடைத்த வெற்றி. 2011-ல் 11% வாக்குகளையும் 5 இடங்களையும் மட்டுமே பெற முடிந்த பாஜக 2016-ல் சுமார் 30% வாக்குகளுடன் 60 இடங்களைக் கைப்பற்றியது. கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் அதிக இடங்களைப் பெற முடியாவிட்டாலும் (முறையே 1, 6) 10%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பது காங்கிரஸால் மட்டுமல்ல.. இடதுசாரிகளாலும் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது. பாஜக தடுக்கி விழும் சூழலுக்காக புதிய வியூகங்களின்றி பரிதாபமாக காத்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,

தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x