Last Updated : 28 Oct, 2013 09:47 AM

 

Published : 28 Oct 2013 09:47 AM
Last Updated : 28 Oct 2013 09:47 AM

இந்த நாளின் பெயர் தேன்சிட்டு

காலையில் நாம் கண்விழிக்கும்போது அற்புதமான பாடல் ஒன்றைக் கேட்டால் எப்படி இருக்கும்?

கல்லூரி நாட்களில் இளையராஜாவின் ஏதாவதொரு பாடலைக் காலையில் கேட்டுவிட்டுக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அந்த நாள் முழுவதும் காதுக்குள்ளே அந்தப் பாடலின் நாதம் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் கண் விழிக்கும்போது பறவைகளின் குரலுக்குப் பழகினேன். ஏதாவது ஒரு பறவையின் குரல் என்னை எழுப்பும். முதல் தடவை நான் எழுந்தது அக்காக்குயிலின் கூவலுக்கு. அதிகாலையில் இடைவிடாமல் “அக்கா அக்கா அக்கா அக்கா அக்கக்கக்கா... பிரெய்ன் பீவர் பிரெயின் பீவர்” என்று கத்திக்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கத்தினாலும் அதிகாலையில் அதன் குரல் மிகவும் துல்லியமாகக் கேட்டது. உடனே, கைபேசியில் அதன் கூவலைப் பதிவுசெய்துகொண்டேன். தொடர்ந்து வந்த நாட்களில் அக்காக்குயில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ பகலிலோ என்று எல்லா நேரங்களிலும் கூவுவதைக் கேட்க முடிந்தது. அது தூங்குமா இல்லையா என்று வியப்பாக இருந்தது. பிறகு, பதிவுசெய்வதை விட்டுவிட்டு, உற்றுக்கேட்பதில் மட்டும் ஈடுபட்டேன்.

பெயரறியாப் பறவையின் அழைப்பு

அதன் பிறகு, பெயரறியாப் பறவையொன்று என்னை எழுப்ப ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் ‘மேக்பை-ராபின்’என்று அதன் பெயரைப் பிறகு தெரிந்துகொண்டேன். எங்கும் பரவலாகக் காணப்படும் இந்தப் பறவைக்குத் தமிழில் என்ன பெயர் என்று நான் பல புத்தகங்களில் தேடிப்பார்த்தும் பலரிடமும் கேட்டும் பலனில்லை. பிற்பாடு தியடோர் பாஸ்கரனிடம் கேட்டபோது, சில இடங்களில் அந்தப் பறவையை சுப்பிரமணிக்குருவி என்று அழைப்பார்கள் என்று சொன்னார். நான் என்னுடைய கவிதைத் தொகுப்பில் சோலைப்பாடி என்ற பெயரை இதற்குக் கொடுத்திருந்தேன். ஆனால், சோலைப்பாடி என்ற பெயர் உண்மையில் ஷாமா என்ற பறவையினத்தின் தமிழ்ப் பெயர் என்று தியடோர் பாஸ்கரன் சொன்னார். அதனால், ஒரு வசதிக்காக மேக்பை-ராபினை நான் ‘காலைப்பாடி’என்ற பெயரில், அதாவது நான் வைத்த பெயரில் அழைக்கிறேன். காலை சரியாக 5.25-க்குக் காலைப்பாடி எழுப்பிவிடும். அதற்கு விதவிதமான சத்தங்கள் உண்டு. அதன் சத்தத்தை நானும் என் அக்காவின் குழந்தையும் பறவையின் ராகத்தோடு இப்படி ஒலிபெயர்ப்போம்: “பால்காரர் வந்தாச்சு எழுந்திரிடி… பால்காரர் வந்தாச்சு எழுந்திரிடி… கதவத் திறந்திரடி…”

பால்காரர் வரும் நேரத்துக்கு அந்தப் பறவை கத்துவதோடு நாங்கள் இயற்றிய வரியோடும் அதன் ஒலி பொருந்திப்போகிறது. அப்போது எழுந்திருக்கவில்லையென்றால், சற்று நேரத்தில் தையல்சிட்டு வந்து “ட்டுவ்வி ட்டுவ்வி ட்டுவ்வி” என்றும் வேறு சில விதங்களிலும் சத்தம்போட ஆரம்பித்துவிடுவார். அப்போதும் எழுந்திரிக்கவில்லை என்றால், சற்று நேரத்தில் தேன்சிட்டுக்கள், தவிட்டுக்குருவிகளின் பட்டாளம்,கொண்டைக்குருவிகள் எல்லாம் வந்து இரைச்சல் போட ஆரம்பித்துவிடும். அப்போதும் எழுந்திருக்கவில்லை என்றால், அந்த நாளை நான் இழந்துவிட்டேன் என்று பொருள்.

ஒரு நாள் எப்படி இரண்டு நாள்?

யாரோ சொல்லி எங்கோ படித்த ஞாபகம்: “நீங்கள் அதிகாலையில் எழுந்தால் உங்களுக்கு அன்று கிடைப்பது இரண்டு நாள்.”

அது உண்மைதான் என்பதை என் அனுபவத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பறவைகள் அதிகாலையில்தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அந்தச் சமயத்தில் பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். மனிதச் சத்தங்களும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றின் சத்தங்களும் இல்லாத சமயம் என்பதால், பறவைகளின் ஒலி மட்டும்தான் அப்போது கேட்கும். அதுவும் துல்லியமாகவும் ஏதோ கச்சேரி நடப்பதுபோன்றும் கேட்கும். அந்தத் தருணத்தில் விழித்துக்கொண்டால் மட்டுமே அந்த நாளை நாம் காப்பாற்ற முடியும்.

பறக்கும் நாட்கள்

ஒருமுறை பக்கத்துவீட்டுச் சின்னப் பையனுடன் பறவை பார்த்தலுக்குச் சென்றிருந்தேன். எதையோ நினைத்துக்கொண்டிருந்த நான் அவனிடம், “இன்னைக்கு என்ன கிழமை?” என்று கேட்டேன். பறவை பார்ப்பதில் மும்முரமாக இருந்த அவன் “தேன்சிட்டு” என்றான். ஒரு கணம் என்ன என்று வியப்பில் பார்த்துவிட்டு அதற்கப்புறம் யோசித்தேன். அவன் சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? இந்த நாளின் பெயர் தேன்சிட்டு என்று இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். அடுத்த நாள் கொண்டலாத்திக் கிழமை, அதுக்கு அடுத்த நாள், குக்குறுவான் கிழமை, அப்புறம் மரங்கொத்திக் கிழமை. கிழமைகளுக்குப் பறவைகளின் பெயர்களை ஏன் சூட்டக் கூடாது? உலகில் நமக்குத் தெரிந்தவரை பல மொழிகளிலும் சமுதாயங்களிலும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் பெயரைத்தான் கிழமைகளுக்குச் சூட்டுகிறார்கள். எந்த மொழியிலாவது கிழமைகளுக்குப் பறவைகளின் பெயர்கள் சூட்டியிருக்கிறார்களா என்று தேடிப்பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது பழங்குடிகளின் மொழியிலாவது அப்படி இல்லாமலா இருக்கும்?

சொல்லப்போனால், பறவைகளுக்கும் நாட்களுக்கும் நிறைய ஒற்றுமை. நாட்களே பறவைகள்தானே? நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில், யுகக் கணக்கில் நாட்கள் வருகின்றன போகின்றன, வலசை வரும் பறவைகளைப் போல. எங்கிருந்து வருகின்றன; எங்கு செல்கின்றன? தேன்சிட்டு, தேனை உறிஞ்சுவதுபோல நாட்களெல்லாம் நம் ஆயுளைக் கொஞ்சம்கொஞ்சமாக உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. மரங்கொத்தி மரத்தைக் கொத்துவதுபோல் நாட்கள் நம்மைக் கொத்துகின்றன. மீன்கொத்தி மீனைப் பிடித்துச்செல்வதுபோல நாட்கள் ஒரு நாள் நம்மைப் பிடித்துச் செல்கின்றன. அதே நேரத்தில், குயிலின் பாடலைப் போல இனிமையான நாட்களும் இருக்கின்றன. மயில்தோகைபோல மகிழ்ச்சியாக விரியும் நாட்களும் இருக்கின்றன. ஆந்தைபோல அப்படியே அசையாமல் இருக்கும் நாட்களும் இருக்கின்றன. ஒரே மாதிரி எந்த இரண்டு பறவையும் கிடையாது, ஒரே மாதிரி எந்த இரண்டு நாட்களும் கிடையாது. சில மதங்களில் காலத்தைப் பறவையாக உருவகித்துக் காலப்பறவை என்று சொல்வதுண்டு. நாம் சாதாரணமாகப் பேசும்போதும் எழுதும்போதும்கூட “நாட்களெல்லாம் பறந்தோடிவிட்டன” என்று சொல்வது வழக்கம்.

இன்றைய நாளை, தேன்சிட்டு நாளாக நான் அறிவிக்கிறேன். நான் இப்படி அறிவிக்கும்போது என் வீட்டுத் தோட்டத்தில் தேன்சிட்டின் கூடொன்று சுவரில் மாட்டிய நாள்காட்டிபோல் அசைவதைப் பார்க்கிறேன். அதன் உள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது குஞ்சுத் தேன்சிட்டு, காற்றில் சலசலக்கும் நாள்காட்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் அடுத்த நாளைப் போல.

ஆசை - தொடர்புக்கு: asaidp@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x