என்ன நினைக்கிறது உலகம்: இனி, என்ன செய்ய வேண்டும் பிரிட்டன்?

என்ன நினைக்கிறது உலகம்: இனி, என்ன செய்ய வேண்டும் பிரிட்டன்?
Updated on
2 min read

பிரிட்டன் மக்கள் தங்கள் எண் ணத்தை வெளிப் படுத்தியிருக்கிறார் கள். பிரதமர் ராஜினாமா செய்திருக்கிறார். இதன் விளைவுகள், ஏற்கெனவே பிரிட்டனின் எதிர்காலத்தை அழுத்தமான, ஆபத்தான வழிகளில் வடிவமைக்கத் தொடங்கிவிட்டன. ஆபத்தான பயணத்தை நாடு தொடங்கியிருக்கும் நிலையில், நமது அரசியலும் பொருளாதாரமும் மாறியாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை, இந்தப் பொது வாக்கெடுப்பு தந்திருப்பதன் மூலம், அரசு, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நம் அனைவருக்கும் பெரும் சவால் உருவாகியிருக்கிறது.

உலகத்தில் பிரிட்டனின் இடத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். 1956-ல் எகிப்து மீது இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் படையெடுத்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த ‘சூயஸ்’நெருக்கடிக்குப் பின்னர், நமது நட்பு நாடுகள் தொடர்பான விவாதத்தை இது எழுப்பும். ஐரோப்பாவுக்கு ஆதரவான ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தின் நிலைப்பாடு, ஐரோப்பாவுக்கு எதிரான இங்கிலாந்து, வேல்ஸின் நிலைப்பாடு ஆகியவை நாட்டின் பிம்பத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இனிமேல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளாது எனும் நிலையில், அதனுடனான புதிய உறவு பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும்.

‘பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவு திரட்டிய இண்டிபெண்டஸ் கட்சித் தலைவர் நைஜெல் ஃபராஜ் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டியபடி, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு தொடர்பான குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்பு லண்டனில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளை வெற்றிகரமாகச் சமாளித்த ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’இனி ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கும் என்று பார்க்க வேண்டும்.

இவ்விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியால் அதிர்ச்சியடைந்திருக்கும் டேவிட் கேமரூன், இனி உருவாகப்போகும் கொந்தளிப்புக்கு இடையில், நாட்டை வழிநடத்த முடியாது என்று தெரிவித்துவிட்டார். தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாடு நடக்கவிருக்கும் சமயத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டனில் குடியேறும் அகதிகள் மீது வெறுப்பைக் கொண்டிருக்கும் நைஜெல் ஃபராஜ் ஆதரவுக் குழுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதில் முக்கியப் பங்காற்றின என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதது ஏன் என்பதை முற்போக்கு அரசியலின் ஆதரவாளர்கள் விவாதிக்க முன்வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தவறான திசையில் சென்றுகொண்டிருந்த அகதிகள் குடியேற்றம் தொடர்பான விவாதத்தில் மாற்றம் ஏற்படுத்த அவர்களால் ஏன் முடியவில்லை என்பது பற்றியும் விவாதிக்க வேண்டும்.

மேலும், அறிவார்த்தமான நடவடிக்கைகளும், சமூகம் தொடர்பான அரசியலும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். பிரிட்டன் மக்களிடமும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர்களுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய, தெருப் பிரச்சாரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் கருத்துகளை ஊன்றிக் கேட்க வேண்டும். அவற்றில் கசப்பான உண்மைகள் பல வெளிப்படலாம். நடைமுறை சாத்தியமுள்ள பதில்களைச் சொல்ல முடியாத அரசியல் தலைவர்களுக்கு இனி மதிப்பு இருக்காது.

புதிதாகப் பதவியேற்க உள்ள பிரதமர், இந்தக் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான எம்.பி.க்களும் இவ்விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் முன்பாக, மிகப் பெரிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது. பிரிட்டன் நீண்ட நாட்களுக்கு இப்படி நெருக்கடியில் இருக்க முடியாது!

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in