Published : 16 Oct 2014 09:47 AM
Last Updated : 16 Oct 2014 09:47 AM

மெல்லத் தமிழன் இனி ...8 - மதுவும் தற்கொலையும்

எதிலெல்லாம் நாம் முதலிடத்தில் இருக்கக் கூடாதோ அதிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறோம். விபத்தில் மட்டும் அல்ல, தற்கொலையிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெரும் தலைக்குனிவு இல்லையா. சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்ட தேசிய சுகாதார விவரத் தொகுப்பில் தற்கொலைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்! இதைச் சொல்ல அவ்வளவு பெரிய ஆய்வறிக்கையே தேவையில்லை. அன்றாட நடப்புகளைப் பார்த்தாலே பட்டவர்த்தனமாக தெரிந்துவிடுகிறது.

நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள் வோமே. முசிறி மதுபானக் கடை பாரில் மது குடித்து மூன்று பேர் இறந்துபோனார்கள். விஷச்சாராயம்போல விஷமதுவாக இருக்குமோ என்று பரபரப்பு பரவியது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் மதுவால் இறக்கவில்லை என்று தெரிந்தது. ஆமாம், மது உடனே எல்லாம் கொல்லாது. படிப் படியாகத்தான் கொல்லும்.

ஒரு தற்கொலை இரண்டு விபத்துகள்

இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது: மூன்று பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் மற்றும் குடும்பப் பிரச்சினை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, மது குடிக்க வந்திருக்கிறார். வந்தவர் தனது பாரத்தை இறக்கி வைக்க நண்பர்களை பாருக்கு வரவழைத்திருக்கிறார். ஆனால், தற்கொலை விஷயத்தைச் சொல்லவில்லை. மூவரும் மது அருந்தியிருக்கிறார்கள். இடையே எழுந்து சென்ற பிரச்சினைக்குரிய நபர் தனியாக ஒரு மது பாட்டில் வாங்கியிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அதில் விஷத்தைக் கலந்து பாதியைக் குடித்திருக்கிறார். பாட்டிலை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மீண்டும் மேசைக்கு வந்தவர், மயங்கிச் சரிந்துவிட்டார். கடுமையான வாந்தி. ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த நண்பர்கள் இருவரும் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். வழியில் அவரது பாக்கெட்டிலிருந்து எட்டிப்பார்த்திருக்கிறது எமன். பார்த்தவர்களுக்கு சபலம். இருவரும் குடித்துவிட்டார்கள். மூவரும் பலி. ஒரு தற்கொலை; இரு விபத்துகள்!

முசிறியில் இப்படி என்றால் அதே நாளில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பாரில் மது குடித்துவிட்டு வந்த இளைஞர் ஒருவர் வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். தற்கொலையா? அதீத மதுவா என்று தெரியவில்லை.

மதுவும் தற்கொலையும்

தற்கொலைகளுக்கும் குடிநோய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்று டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டபோது அவர் சொன்ன தகவல்கள் இவை:

“மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடிப்படையாக ஒரு விஷயம். மது அருந்துவதால் மனநோய் வரும். அதேசமயம், மது அருந்தும் பழக்கம் அல்லாத - ஆழ் மனதுக்குள் லேசான முரண்பாடுகள் கொண்ட ஒருவர் மது அருந்த ஆரம்பித்தால் அவருக்குள் மனநோய் உருவெடுக்கும். தற்கொலை விஷயத்துக்கு வருவோம். பொதுவாக மது அருந்துவதால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள் இரண்டு வகைப்படும்.

நீண்ட நாள் மது அருந்தும் ஒருவருக்கு மனச்சோர்வு நோய் (Major depressive disorder) உறுதியாக ஏற்படும். அதாவது, ஒருவர் ஒரு கவலையை மறக்க,ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண மது அருந்துவார். அப்போதைக்கு, அன்றைய தினத்துக்கு, மதுவின் போதை மூளையில் இருக்கும்வரை அந்தப் பிரச்சினை, கவலை காணாமல் போயிருக்கும். தூங்கியும் விடுவார். மறுநாள் காலை எழுந்தவுடன் அந்தப் பிரச்சினைகள், கவலைகள் எதுவுமே தீரவில்லை என்பது தெரிந்தவுடன் மனச்சுமை பல மடங்கு அதிகரிக்கும்; குற்ற உணர்வு கூடுதலாகும்; பதற்றமும் பயமும் எட்டிப் பார்க்கும்; வியர்க்கும்; கை, கால்கள் நடுங்கும். இது உடலும் உள்ளமும் சோர்ந்த நிலை. இதை மறக்க மறுநாள் மது அருந்துவார், இன்னும் கூடுதலாக. இப்படியே நாளுக்கு நாள் மதுவின் அளவும், பிரச்சினைகளின் சுமையும் கூடிக்கொண்டே செல்லும்.

அதே சமயம், உடலும் மூளையும் கடுமையாகக் காயப் பட்டிருக்கும். ஏனெனில், பிரச்சினைகளை மறக்க மது குடிக்கும் அந்த சில மணி நேரங்களில் ஆல்கஹாலின் உந்துவிசையால் மூளை நரம்புகள் தற்காலிகத் தப்பித்தலுக்குக் கொண்டுசெல்லும். உற்சாகம் பொங்கும். எல்லாப் பிரச்சினைகளும் அப்போதே தீர்ந்துவிட்டதுபோலத் தோன்றும். ஆனால், மறுநாள் அந்த நரம்புகளிடமிருந்து ஆல்கஹால் வடிந்திருக்கும். உச்சத்துக்குச் சென்ற மூளை நரம்புகளின் உத்வேகம் அங்கிருந்து அதல பாதாளத்துக்குச் சரியும். இப்படியே ஏறி இறங்கி, ஏறி இறங்கி ஒருகட்டத்தில் இது தற்கொலையில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். இது ஒரு வகை.

புத்திபேதலிப்பு

அடுத்தது, இன்னமும் மோசம். அதற்கு, மதுவால் ஏற்படும் புத்தி பேதலிப்பு (Alcohol induced phychotic disorder) என்று பெயர்.

தொடர்ந்து மிக அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் மனநோய் இது. இந்த மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ‘யாரோ சூனியம் வெச்சிட்டாங்க’, ‘உடம்புல சிப் பொருத்தி என்னை இயக்குறாங்க’, ‘சிஐஏ ஃபாலோ பண்ணுது’ என்று மிக சீரியஸாகச் சொல்வார்கள். அதாவது, எதுவுமே நடக்காத, இல்லாத, செய்யாத அனைத்தும் நிகழ்வதாக உண்மையாக நம்புவார்கள். சாலையில் நடக்கும்போது பின்னால் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். திடீரென்று ஒளிந்து கொள்வார்கள். சில நேரம் பின்னால் நடந்து வருபவரிடம் சண்டையிடுவார்கள். ஒருகட்டத்தில் இந்த மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நாடுவார்கள். பெரும் பாலும் இவர்கள் கோரமான தற்கொலை முடிவுகளையே எடுப்பார்கள். ஆனால் ஒன்று, இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மனச்சோர்வும் மனச்சிதைவும் உயிர்கொல்லி நோய்கள் அல்ல. சம்பந்தப்பட்ட நபர் மனம் வைத்தால், நம்பினால் - அவையும் குணப்படுத்தக்கூடியவையே.’’

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x