நாக்-அவுட் நாயகன்!

நாக்-அவுட் நாயகன்!
Updated on
3 min read

அசுர பலமும் மென்மையான இதயமும் கொண்ட மகத்தான ஆளுமை முகம்மது அலி

நவீன விளையாட்டு யுகத்தில் அதிகம் அனாவசியமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘மாபெரும்’. ஆனால், எந்தக் காலத்திலும் எவரோடும் ஒப்பிட முடியாதவரும், விளையாட்டையே தன்னுடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல் மூலம் புரட்சிகரமாக்கியவரும், உலகம் முழுவதும் பார்த்தவர்களாலும் அறிந்தவர்களாலும் கொண்டாடப்பட்ட வர்தான் உலக குத்துச்சண்டை சாம்பியன் முகம்மது அலி. ஹெவி-வெயிட் பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் அவர்.

ஒவ்வொரு விளையாட்டிலும் உலக அளவில் புகழப்படவும் ஒப்பிடப்படவும் ஒரு நட்சத்திரம் உண்டு. ரோமானியர்களின் ரத வீரர்கள் காலத்திலிருந்து முகம்மது அலி காலம் வரையில் எத்தனையோ விளையாட்டு வீரர்களும் சாகசக்காரர்களும் வந்திருந்தாலும் அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தியவர் அவர்.

இணையற்ற ஆளுமை

குத்துச் சண்டை வீரர், மனித உரிமை ஆர்வலர், உலக விளையாட்டின் மனசாட்சிக் காவலர் என்று பல்வேறு முகங்கள் முகம்மது அலிக்கு உண்டு. உண்மையிலேயே அரிதினும் அரிதான விளையாட்டு வீரர் அவர். வெவ்வேறு துறைகளில் விளையாடி சர்வதேசப் புகழ்பெற்ற இதர வீரர்கள்கூட இவருக்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள். டான் பிராட்மன், சச்சின் டெண்டுல்கர், பீலே, லயோனல் மெஸ்ஸி, மைக்கேல் ஜோர்டான், லெபிரான் ஜேம்ஸ் என்று எந்தத் துறையில் உள்ள வீரர்களும் இவருக்குச் சமமாக மாட்டார்கள். முகம்மது அலிக்கு என்றொரு விளையாட்டு வாரிசு இருந்தால் அவரை நாம் இன்னமும் பார்க்கவில்லை என்று கூறிவிடலாம்.

அவரது ஆளுமை, வரலாறு, கடுமையான சோதனைக் கட்டத்திலும் அவருக்கிருந்த துணிச்சல் போன்றவை மிகப்புகழ் வாய்ந்த இன்னொரு வீரரிடம் ஒருங்கே பார்க்க முடிந்ததில்லை. கயிற்று வேலியின் சதுரத்துக்குள் எதிராளியை வீழ்த்த, அவருடைய பாதங்கள் குதித்து குதித்து மின்னி மறைந்து மின்னல் வேகத்தில் புரிந்த சாகசங்கள் அவருக்கு வெற்றிகளைக் குவித்துத் தந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தையும் அவருக்குப் பெற்றுத்தந்தன.

1974-ல் காங்கோ நாட்டின் தலைநகர் கின்சாசாவில், ஜார்ஜ் ஃபோர்மேனை எதிர்த்துச் சண்டையிட முகம்மது அலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அவருக்காகப் பரிதாபப்படாதவர்களே கிடையாது. இது போட்டிக்கான ஒப்பந்தம் அல்ல தற்கொலை ஒப்பந்தம் என்றே பலரும் சாடினர். மிகப் பெரிய மேம்பாலத்தைத் தாங்கும் வலிமையான தூண்களைப் போன்ற கைகளை உடைய ஜார்ஜ் ஃபோர்மேனை முகம்மது அலியால் எதிர்த்து வெற்றிபெற முடியாது என்றே வேதனைப்பட்டனர். அலி தோற்பார் என்று 40 பேர் பந்தயம் கட்டினால், அலி வெற்றிபெறுவார் என்று பந்தயம் கட்டியது ஒருவர்தான். சண்டை ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் முடிந்துவிடும் என்றே பலரும் கூறினர். ஆனால், குத்துச் சண்டைக் களத்தில் இறங்கியபோது முகம்மது அலி தன்னம்பிக்கையுடனும் வெற்றிபெறுவதற்கான புதிய திட்டத்தோடும் இருந்தார்.

வெற்றி வியூகம்

இருவருக்கும் இடையிலான குத்துச் சண்டை 4-வது, 5-வது, 6-வது சுற்றுக்கு முன்னேறியபோதே புரிந்துவிட்டது அலி தோற்பதற்காக இங்கே வரவில்லை என்று. ஃபோர்மேன் அடித்த குத்துகளை எல்லாம் ஆடு களத்தின் கயிற்றின் மீது கேள்விக்குறிபோல வளைந்து வாங்கிக்கொண்டார். அவருக்கான நேரம் வந்தபோது அந்த வாய்ப்பை இரு கைகளாலும் தழுவிக்கொண்டார். ஆம், ஃபோர்மேன் களைப்படைய ஆரம்பித்துவிட்டார். மிக கனத்த அவருடைய பாதங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. அவருடைய மனமோ ஆழ்ந்த குழப்பத்தில் ஆழத் தொடங்கியது. அதை அவருடைய முகமே காட்டிக் கொடுத்தது. இதுதான் நேரம் என்று கணித்த முகம்மது அலி பாய்ந்து அவரை முழு பலத்துடன் ஒரே குத்துவிட்டார். வலது பக்கத்தில் அடித்த அந்த ஒரே அடியே போதும் அவரைச் சாய்த்துவிடும் என்று கணித்த முகம்மது அலி, அவரை மேலும் மேலும் போட்டு நொச்சு நொச்சு என்று அடிக்கவில்லை. ஃபோர்மேன் அப்படியே தடுமாறி நிலைகுலைந்தார்.

ஓராண்டுக்குப் பிறகு மணிலாவில் ஜோ ஃபிரேஸியரை எதிர்கொண்டார் முகம்மது அலி. இருவருமே தங்களுடைய உடலால் மட்டுமல்ல மனதாலும் ஆன்மாவாலும்கூட வலுவாக மோதிக்கொண்டனர். இருவரும் மோதும் களத்தின் எல்லையை நடுவர் விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார். இந்தச் சண்டைதான் தங்களுடைய வாழ்நாளின் இறுதிச் சண்டை என்பதைப் போல இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். பிரேஸியர் அடுக்கடுக்காக குத்துகளை மழையாகப் பொழிந்தாலும் அலி அவற்றை அப்படியே தாங்கிக்கொண்டார். 13-வது சுற்றின்போது பிரேஸியர் பற்களைக் காக்க அணிந்திருந்த கவசம் கழன்று காற்றில் பறந்தது. 14-வது சுற்றில் அவரை அடித்து நொறுக்கிப் பணிய வைத்துவிட்டார் அலி.

அப்படிப்பட்ட முகம்மது அலி இன்று நம்மிடையே இல்லை. குத்துச்சண்டை களத்துக்கு வெளியே அவர் செய்த சாதனைகளைச் சற்றே நினைத்துப் பார்ப்போம்.

தனது 42-வது வயதில் நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்யும் பார்கின்சன் என்ற வியாதி மட்டும் தாக்காமல் இருந்திருந்தால், கருப்பின மக்களின் உரிமைகளைக் காப்பதில் அவர் நிறைய சாதித்திருப்பார். நல்ல உடல் நிலையில் இருந்திருந்தால் பராக் ஒபாமாவுக்கு முன்னரே அவர் அமெரிக்க நாட்டின் அதிபராகக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

ஏழைகளின் தோழன்

அலி இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே குத்துச்சண்டை போட்டியிலிருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று சில விமர்சகர்கள் கருதுவது உண்டு. ஒரு சிறந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரர் தன்னுடைய ஆட்டம் தொடர்பாக எடுத்த முடிவுகளை - அவை தவறு என்று கருதினாலும் - விவாதிக்க இது நேரம் அல்ல. அதற்குப் பதிலாக முகம்மது அலி என்ற மாபொரும் குத்துச்சண்டை வீரர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்தோம் - வாழ்ந்தோம் என்று பெருமிதம் அடைய வேண்டும்.

புகழின் உச்சியில் இருந்தபோது அவரைச் சந்திக்கவும் அவரோடு பேசவும் உலகின் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், அதிகாரமும் செல்வாக்கும் பெற்றவர்கள் எனப் பலரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவரோ சாமானிய மனிதர்களைப் பற்றியே சிந்தித்தார், அவர்களோடு இருப்பதையே விரும்பினார். அந்த எண்ணத்துக்கு இனம், மதம், மொழி, நாடு என்ற பேதம் இருந்ததே இல்லை. மும்பையின் மாபெரும் சேரி என்று வர்ணிக்கப்படும் தாராவியின் ஏழைகளையும் போனஸ் அயர்ஸ் நகரின் ஃபேவலாஸ் சேரி ஏழைகளையும் அவர் மறந்ததே இல்லை. அவரைத் தங்களுடைய மன ராஜ்யத்தில் சக்ரவர்த்தியாக வைத்திருந்த கோடிக்கணக்கான ஏழைகளால் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

மேன்மைகள் மிக்க முகம்மது அலியாரே, நாங்கள் உம்மை நேசித்தோம், வழிபட்டோம், உங்களுடைய தனித்தன்மையுள்ள திறமைகளை விதந்தோதினோம், இப்போது உம்மை இழந்து நிற்கிறோம்; எவரோடும் ஒப்பிட முடியாத உங்களுடைய வீரத்தை, விளையாட்டுத் திறனை என்றும் நினைவுகூர்ந்துகொண்டே இருப்போம். எங்களுடைய இதயம் துடிப்பதை நிறுத்தும்வரை உங்களை நினைத்துக்கொண்டே இருப்போம்.

அமெரிக்காவின் பிரபல விளையாட்டுத் துறை எழுத்தாளர் ரெட் ஸ்மித் ஒரு முறை எழுதினார், “இறப்பு என்பது பெரிய விஷயமே இல்லை; ஆனால் வாழ்வதுதான்!” என்று.

உண்மைதான் மாமன்னர் முகம்மது அலி அவர்களே.. உங்களைப் போல வாழ்வதுதான் அரிது!

(‘தி இந்து’ விளையாட்டுத் துறை ஆசிரியர் நிர்மல் சேகர் எழுதிய நினைவாஞ்சலி)

தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in